21 December 2006

புலன்களின் ஏக்கம்

உன்னை காண்கையில்
கண்களில் ஒரு
மின்னல்.

முத்தமிடுகையில்
இதழ்களில் நல்ல‌
அமிழ்தத்தின் சுவை.

நினைக்கையில்
புத்தியில் சிறு
பரபரப்பு.

உன் மொழி கேட்டாலே
உச்சி முத‌ல்
உள்ள‌ங்கால் வ‌ரை
ஒரு சிலிர்ப்பு.

என‌க்கு ம‌ட்டும் சக்தியிருந்தால்
புல‌ன்க‌ளை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்

காதுக‌ள் பெரிதாகி போக‌ட்டும்;
உனது மொழி ம‌ட்டுமே கேட்கட்டும்.

க‌ண்க‌ள் நான்காய் பெருக‌ட்டும்;
எங்கெங்கும் உன் காட்சியே தெரிய‌ட்டும்.

நினைவின் ஆற்ற‌ல் இன்னும் விரிய‌ட்டும்;
நினைவுக‌ள் யாவும் உன‌தாக‌வே இருக்க‌ட்டும்.

த‌மிழே
அன்றும் இன்றும் என்றென்றும்
என்னிதயம் உன்னையே காத‌லிக்கும்;
நீய‌ல்லாது போனால்
என்றன் புத்தி பேத‌லிக்கும்!

-பிரேம்குமார்

20 December 2006

சிவப்பதிகாரம் - பாடல்களின் விமர்சனம்

Sivapathikaram

படத்தை பற்றி விமர்சனம் செய்து ஏற்கனவே நிறைய வலைப்பதிவுகள் வந்துவிட்டன. ஆக, நமக்கு அந்து வேலை வேண்டாம். ஆனா, அழகா இசையமைக்கப்பட்டு அவ்வளவாய் கவனிப்பாரற்று போன பாடல்களை பற்றி சொல்ல வேண்டாமா?

சித்திரையில் என்ன வரும்
*************************

'அப்படி ஓர் ஆணழகன், என்ன ஆள வந்து பேரழகன்' என மாலையம்மாவின் சுத்தமான் கிராமிய குரலில் அட்டகாசமாய் தொடங்குகிறது பாடல். அதே மெட்டில் தொடரும் 'சித்திரையில் என்ன வரும்' அற்புதமான மெலடி. சுவர்ணலதாவின் குரலும் கார்த்திக்கின் குரலும் அழகாய் வந்திருக்கிறது. படமாக்கிய விதத்திலும் குறையொன்றுமில்லை. பாடல் எடுக்கப்பட்ட இடமும், காட்டபட்ட இதமான காதலும் அழகு

அற்றைத் திங்கள் வானிடம்
**************************
கேட்க கேட்க சலிக்காத பாடல். நல்லதொரு காதல் பாட்டு. சுஜாதாவும் மது பாலாகிருஷ்ணனும் நன்றாகவே உருகியிருக்கிறார்கள். ஆனால் படத்திலோ இப்பாடல் கதா நாயகியை குளிக்க வைக்கவும், உருள வைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு
*********************************
இவ்வளவு சுத்தமான அழகான கிராமிய பாடலை கேட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. வயக்காட்டில் நடக்கும் சம்பவங்களும், அதில் நடக்கும் காதல்களும் அழகாக பாட்டில் வந்திருக்கிறது. நகரத்தில் உட்கார்ந்திருக்கும் பலருக்கு (என்னையும் சேர்த்து தான்) இந்த பாட்டில் உள்ள சந்தோஷங்கள் புரிபடாமல் போகலாம். படமாக்கிய வித்த்தில் பழுதில்லை, எனினும் பெரிதாக கவரவுமில்லை என்பது உண்மை.

மன்னார்குடி கலகலக்க‌
********************
ரொம்ப நாள் ஆச்சுப்பா, மனதையும் கால்களையும் ஆட்டுவிக்கும் ஒரு அருமையான குத்துப்பாட்டு வந்து! வரிகளிலும் அவ்வளவாக விரசம் இல்லை. மாணிக்க விநாயகமும், ராஜலட்சுமியும் நன்றாகவே குத்தை குத்தியிருக்கிறார்கள்.
பாடலை படமாக்கிய விதம்.... சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. ஆபாசம், அசிங்கம்... வலைப்பூவில் இதற்கு மேல் சொல்ல முடியாது.
இது விஷாலின் அறிமுகப்பாடல் வேறு. ஆனால், அந்த இரண்டு பெண்மணிகளைவிட (?!!) விஷாலின் நடனம் எவ்வளவோ மேல். பக்கத்தில் அவ்வளவு அருவருப்பாக ஒருவர் ஆடும் போது, அதையும் மீறி அவர் ஆடுகிறார் என்றால் அவரை பாராட்டத்தானே வேண்டும்

அட சந்திர சூரிய‌
*****************
குரல்களில் என்னென்ன வகைகள் இருக்கிறது என எடுத்துக்காட்டோடு சொல்கிறார் பேராசிரியர்.குணசேகரன். ஒவ்வொரு வகை குரலிலும் ஒரு பாட்டு. இசைத்தட்டிலே கேட்பதற்கு நன்றாகவே இருக்கும் அப்பாடல்கள் ஏனோ படத்திலே நீளளளள‌மாக இருக்கிறது.

மாரி மகமாயியம்மா
********************
மதுரை சின்னப்பொண்ணு'வின் குரலில் ஒலிக்கும் நல்லதொரு கும்மிப்பாட்டு. பாட்டின் வரிகளை கேட்டால், 'அட, நம்ம கிராமிய பாடல்களில்தான் என்ன ஒரு அழகும், வார்த்தை ஜாலங்களும் இருக்கிறது' என் கண்டிப்பாக தோன்றும். பாடலில் வேகம் கூட கூட, பாடலின் போக்கோடு உள்ளுக்குள்ளேயே கும்மியடிக்கிறது மனம் (சின்ன வயதில் தேவகோட்டையில், மாரியம்மன் கோவிலில் கும்மியடித்ததை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை).
ஆனால், படத்திலே கும்மியடிப்பதை பார்க்க பலருக்கு பொறுமையில்லை (அதுவும், போரம், அரங்கில் உட்கார்ந்து பாத்துக்கொண்ருந்த இளம் மென்பொறியாளர்களின் கூக்குரல் தான் பாடலை மீறி கேட்டது)

(டேய் மாப்ள, வெள்ளிக்கிழமை அதுவுமா ரூம்லேயே சரக்கடிச்சிட்டு வழக்கம் போல் கும்மியடிச்சிக்கிட்டு இருந்திருக்கலாம்.. இப்படி படுத்திட்டியே என நண்பர்களின் குரல் கேட்டபடியே இருந்தது)

அட இவ்வளவும் சொல்லிவிட்டு வித்யாசாகரை பற்றி ஒரு வரி கூட எழுதாமல் விட்டால் எப்படி? சுருக்கமாக சொன்னால் ' நல்லதொரு இசைத்தொகுப்பு'. வாழ்த்துக்கள் வித்யாசாகர்

உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என நீங்கள் கேட்கலாம். என்னவோ ஒவ்வொரு முறை இப்பட பாடல்களை கேட்கும் போதும், கண்டிப்பாக இதை பற்றி ஒரு பதிவு போடனும் என்று பட்சி சொல்லிக்கிட்டே இருந்தது.. அந்தா இந்தான்னு இழுத்து கடைசியில் பதிவு செய்துவிட்டேன்

13 December 2006

சொல்லாமலே

தொட‌க்கமோ,முடிவோ;
ஏதோவொன்று
பிடிபடாததால்
ம‌ன‌திலேயே த‌ங்கிவிட்ட‌ன‌
ப‌ல‌ க‌விதைக‌ளும்
சில‌ காத‌ல்க‌ளும்

- பிரேம்குமார்

11 December 2006

இதயங்கள்

அரளிப்பூ மேனியாளின்
ஆர்ப்பாட்ட அழகாலே
அவசரமாய்க் காதலுற்றேன்
அவளிடமே முறையிட்டேன்

சேதி கேட்ட சிறுக்கி
ரொம்பத்தான் முறுக்கி
"அதெல்லாம் முடியாது - என்
அன்புனக்காய் வடியாது."
அதரம் திரட்டினாள்
அதட்டி விரட்டினாள்

"நீயில்லாதென் வானம்
எங்ஙன‌ம் விடியும்?
என் இளமைத்தவம்
எக்கணம் முடியும்?!"
புலம்பித் தவித்தேன்
புழுவெனத் துடித்தேன்

தையலோ யோசித்து
வழியொன்றை விளம்ப,
மையலோ அதற்கென்னை
மண்டையாட்ட வைத்தது

'நாதா, நீ சென்றோடி
உனையீன்றெடுத்த உன்
மாதா மார் பிளந்தவள்
இதயம் கொணர்ந்து
பரிசாய்க் கொடுத்தால்
பரிசீலிக்கலாம்'

கேட்ட நொடியில்
நான் செத்திருக்க வேண்டும்
அல்லால் அக்க‌ண‌மே
அவளுயிரை அத்திருக்க வேண்டும்

மதி கெட்ட நானோ
மனை தேடியோடினேன்
விதியோ சதியோ
மாதாவைக் கொன்றாடினேன்

இதயங் கையிலேந்தி
வாயிற்கதவு தாண்டுகையில்
அடிதப்பி விழுந்தேன்.
தாயினிதயம் அப்போதும்
துடிதுடித்து கேட்டது

'மடியாடிய செல்வமே
பார்த்து செல்லடா
அடியேதும் இல்லையே,
பார்த்து சொல்லடா'

அன்னையின் அன்பை
அப்போது உணர்ந்தேன்;
மதியற்ற செயலெண்ணி
மனம் நோந்தொடிந்தேன்

- பிரேம்குமார்

***பழைய கதையொன்று கவிதை வடிவத்தில்