3 August 2007

இப்படிக்கு நட்பு - 2


ப‌ள்ளியில் தான் தொட‌ங்குகின்ற‌ன அனேகம் ந‌ட்புக‌ள். அந்த நட்புக்கு என்றுமே நீங்காத இடம் உண்டு நெஞ்சில். முதன் முதலில் பிரிவு என்ற சொல்லை சந்திப்பதும் அந்த நட்பு தான். பள்ளி தான் உலகமே என்று நம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களை பிரித்து உலகின் வெவ்வேறு மூலைகளில் வீசிவிடுகிறது காலம். ஆசைக்கு த‌க்க‌ப‌டி, ஆஸ்திக்கு த‌க்க‌ப‌டி ஆளுக்கு ஒரு திசை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோம்........ சுழ‌ன்று கொண்டே இருக்கும் உல‌க‌த்தில் என்றேனும் ஒரு நாள் மீண்டும் சேருவோம் என்ற‌ ந‌ம்பிக்கையோடு. ப‌தினான்கு ஆண்டுக‌ள் 'பெத்தி செமினேர் மேனிலைப்பள்ளி, புதுச்சேரி'யில் படித்த காலங்களையும் நண்பர்களையும் நினைத்து.....

இப்ப‌டிக்கு ந‌ட்பு - 2



ஒளிப்புகா அடர்க்கானில்
ஒளிந்திருந்தோம் சில காலம்
களித்திருந்தோம் நன்றாய்
அக்கானிடையே ஒன்றாய்

ஆலென்றாலும் பனையென்றாலும்
ஆரும் பிரித்துப்பார்த்தில்லை - கொடுங்
காலம் வரும்வரை நம்காட்டில்
அறுவடையும் நடந்ததில்லை

வசந்தம் மட்டுமே வந்த பாதையில்
புயலும் ஒரு முறை வீசிற்று
கசக்கும் நினைவுகளை
இதயத்தில் பதித்துப் போனது

இலையுதிர் காலமென‌
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.

திசைக்கு ஒருவ‌ரென‌
யாவ‌ரும் பிரிந்தோம்;
ஆசைக்கு தக்க‌ப‌டி
என்ன‌வோ ஆனோம்!

இனி எக்க‌ண‌ம் ச‌ந்திப்போமோ?
எவ்வ‌ண்ண‌ம் ச‌ந்திப்போமோ?

எப்படியும்,
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
ப‌ட‌படத்துக்கொண்டு தான் இருப்போம்
ப‌ழைய‌க் காட்டை நினைத்து...

3 க‌ருத்துக்க‌ள்:

எழில்பாரதி said...

கவிதை அருமை!!!!

எப்போதும் இதயத்தில் பசுமையாக இருக்கும் ஒன்று பள்ளி நாட்கள்

அந்த நாட்களின் நட்பு மிகவும் இனிமயான நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும் உலகம்.....



"இலையுதிர் காலமென‌
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று"

உண்மையான‌ வரிகள்!!!

ச.பிரேம்குமார் said...

கருத்துகளுக்கு மிக்க நன்றி எழில்

Anonymous said...

பிரேம் மீண்டும் பள்ளிகாலத்தை நினைக்க வைத்து விட்டீர்கள்.

//இலையுதிர் காலமென‌
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.//

அருமைய்ய்ய்ய்ய்ய்யான வரிகள் பிரேம்.

//நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
ப‌ட‌படத்துக்கொண்டு தான் இருப்போம்
ப‌ழைய‌க் காட்டை நினைத்து...//

தென்றலா. புயலே அடிக்க வெச்சுட்டியேப்பா.....