18 October 2007

கொலு

நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!


கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்



கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்...
கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று!

14 October 2007

உரக்க சொன்னதில்லை நீ

பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்

வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்

நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்......

காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்