19 November 2007

கலைஞர் தொலைக்காட்சியும் நமீதாவும்

கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' அப்படின்னு ஒரு நடன நிகழ்ச்சி. அட இதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்து இப்போது பல தமிழ் தொலைக்காட்சிகளில் வருவது போன்ற ஒரு நடனப்போட்டி தான். அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பரப் பலகைகளிலேயே 'நமீதா வழங்கும் மானாட மயிலாட' என்று குறிப்பிடுகிறார்கள். முன்பு நடுவர் குழுவில் சிம்ரன் இருந்தபோது 'சிம்ரன் வழங்கும்' என குறிப்பிட்டு இருந்ததாய் நினைவில்லை.

'மானாட மயிலாட' என்ற தலைப்பை திரு.கருணாநிதி அவர்களே தேர்வு செய்ததாய் செய்திகள் வந்தன. அப்படி இருக்க இந்த நிகழ்ச்சியில் நமீதா இருப்பதுப் பற்றிக்கூட கருணாநிதி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புவோம்

அட, நமீதா அந்த நிகழ்ச்சியில் இருந்தால் என்ன என்கிறீர்களா? அட நமீதா நடுவரா இருந்தால் என்ன இல்லை நமீதாவின் பாட்டி இருந்தால் நமக்கு என்ன?

கொடுமை அவர் பேசும் தமிழ் தான். இரண்டு வயது பிள்ளைக்கூட இதைவிட சிறப்பாக பேசும். அட, கோர்வையாகக் கூட பேச வேண்டாம். ஒரு சில வார்த்தைகள் பேசவே தடுமாறுகிறார். கேட்கவே காது கூசுகிறது. இது ஒன்றும் நேரலை இல்லையே. பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி தானே? அப்படி இருக்க நிகழ்ச்சியின் இயக்குனருக்கோ நிர்வாகத்துக்கோ இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. நிகழ்ச்சித் தலைப்பு மட்டும் அழகுத்தமிழில் இருந்தால் போதுமா? உள்ளே நடக்கும் தமிழ்க்கொலைகள் பற்றி கவலையில்லையா?

'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியானது 2004 ஆண்டில். தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியுமா ஒரு நடிகை தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்? அவ்வளவு தூரமா அக்கறையில்லாமல் இருப்பார்கள்? அது சரி, தமிழ்நாட்டில் பிறந்த நாயகிகள் மட்டும் தமிழிலேயேவா பேசித்தொலைக்கிறார்கள்... 'கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடும் ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்' என்ற கதை தான்

தமிழுக்கென்று கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் வருவதாய் தெரியவில்லை. அது கிடக்கட்டும், குறைந்தப்பட்சம் தமிழை கொலை செய்யாமல் இருந்தாலே போதுமென்று தோன்றுகிறது.

பி.கு : நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்துப் பார்ப்பது எல்லாம் இல்லை. நேற்று வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் புண்ணியத்தால் (கிர்ர்ர்ர்) இதைப் பார்க்க நேர்ந்தது.

15 November 2007

கணிணித்துறையினரைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்

இந்த ஐ.டிக்காரர்கள் தொல்லை இருக்கே.... தாங்க முடியல. இவனுங்களால தான் வீட்டு வாடகை உயர்ந்துப் போச்சு. ஆட்டோ விலை எல்லாம் கண்ணாபின்னான்னு ஏறிப்போச்சு, கலாச்சாரம் சீரழிஞ்சுப் போச்சு...

இப்படி சொல்றது இப்போ ஒரு ட்ரண்டாவே ஆயிடுச்சு

இப்படி புகையும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளும் ஒரு விசயம். ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க? பேசாம, எல்லோரும் அரசுக்கு ஒரு மடல் எழுதுங்க. இனி இந்தியாவில் ஐ.டி தொழிலே இருக்கக்கூடாது. சுத்தமா ஒழிச்சுக்கட்டனும்னு எழுதுங்க

யாரும் ஐ.டி மாப்பிள்ளைக்கு பொண்ணு குடுக்காதீங்க

யாரும் ஐ.டிக்காரனுக்கு வீடு குடுக்காதீங்க

அட, யாரும் உங்க வீட்டுப் பிள்ளைகளை கணிப்பொறியியல் படிக்க வைக்காதீங்கய்யா

அத விட்டுட்டு ஆட்டோக்காரன் காசு அதிகமா கேக்குறான்.... அதுக்கு ஐ.டிக்காரன் தான் காரணம் அப்படின்னு ஆரம்பிச்சு காக்கா என் மேல எச்சம் போட்டுருச்சு... அதுக்கும் ஐ.டிக்காரன் தான் காரணம்னு வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருக்காதீங்க

ஒரு சிலர் மட்டும் செய்யும் தவறுகளை வைத்து ஒரு பிரிவினரையே சாடுவாது எவ்வகையில் பார்த்தாலும் அறிவீனம் தான்

இது போன்று வீண் வம்பு பேசும் மக்களை புறக்கணித்து விட்டு வேலையில் மூழ்கிக்கிடக்கும் கணிணித்துறைக்காரர்களை கண்டிப்பாக கட்டி வைத்துதான் அடிக்க வேண்டும்!

13 November 2007

கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில்



ராடன் நிறுவனம் & யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித்விராஜ், சந்தியா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் ‘கண்ணாமூச்சி ஏனடா’

கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிகு பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்

ப்ரித்விராஜ் : அவரின் முந்தைய படங்களில் பார்த்தது போலவே இதிலும் மனிதர் பேசுகிறார், பேசிகிறார்…. பேசிக்கொண்டே இருக்கிறார். பல இடங்களில் எரிச்சலும், சலிப்புமே மிஞ்சுகிறது. மத்தபடி அவருக்கு பெரிதாக படத்தில் செய்துவிட எதுவும் இருக்கவில்லை

சந்தியா : பொறியில் அடைப்பட்ட எலிக்குட்டிப் போல் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே திரிகிறார். பாவம், டப்பிங் பேசும் போது என்ன பிரச்சனையோ தெரியவில்லை? மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

சத்யராஜ் & ராதிகா : சத்யராஜ் ஒரு பொறுப்பான கோபமான காவல்துறையில் பணிபுரியும் அப்பாவாக வலம் வந்திருக்கிறார். ராதிகா ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக வந்து செல்கிறார். நடுவில் கொஞ்சம் பெண்ணீயமும் பேசுகிறார்.

ஸ்ரீப்ரியா : நட்புக்காக ஸ்ரீப்ரியா. எனினும் அவர் வந்தவுடன் ஒரு தனி கலகலப்பு வந்துவிடுகிறது படத்தில். அவரும் சத்யராஜீம் அடிக்கும் லூட்டிகள் கலகலக்க வைக்கின்றன. ஸ்ரீப்ரியாவின் டைமிங் மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றிச்சொல்லவா வேண்டும்?

இசை : இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜாவிற்கு என்ன சிக்கலோ? மேலும் பாடல்களின் ஒளிப்பதிவு சுத்த மோசம். மணிரத்னத்தின் மாணவி பாடல்களை இப்படி எடுத்து தள்ளியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. அனேகமாக பாடல்கள் எல்லாமே திரைக்கதையில் திணிக்கப்பட்டே இருக்கின்றன

ஒளிப்பதிவு : ரொம்பவே அழகான ஒளிப்பதிவு. கண்களை பதம் பார்க்காமல், மிக இயல்பாக இருக்கிறது. மலேசியக் காட்சிகள் பளபள என்றால் ஊட்டி காட்சிகளோ குளுகுளு ரகம்.

ப்ரியா.V : முதலில், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. எங்கேயும் நெருடாமல், நல்ல ஓட்டத்தோடுக் கூடிய திரைக்கதை. ஆனால் அதே சமயம் இந்தக் கதையை இன்னும் கலகலப்பாகவும் அழகாகவும் கொடுத்திருக்கலாம். (ப்ரித்விராஜ் பேசுவது தான் கலகலப்பு என்றால், ஆள விடுங்க சாமி)

மணிரத்தினத்தின் மாணவி என்ற காரணத்தினாலும் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் என்பதாலும் ப்ரியாவிடம் கொஞ்சம் அதிகமாவே எதிர்ப்பார்க்கிறோமோ என்னவோ?

அப்புறம் ப்ரியா, படத்தின் பல காட்சிகள் GUESS WHO மற்றும் MEET THE PARENTS படங்களில் வந்துள்ளது போலவே இருக்கிறதாமே?

அப்புறம், கிளைமாக்ஸீக்காக காத்திராமல் எழுந்து வந்துவிடுவது உத்தமம். அப்படி ஒரு இழுவை………. எப்படியும் இது தான் நடக்கும் என்று தெரிந்த ஒரு முடிவை இத்தனை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.