25 June 2008

என்ன தான்பா உங்க பிரச்சனை?

எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் மின் தொடர்வண்டிக்கான பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்தேன். வரிசையில் எனக்கு கொஞ்சம் முன்னே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவர் அருகே வந்து நின்றான். இந்த பெண் மெதுவாக அவரிடம் 'வரிசையில் போய் நில்லுங்க' என்றார். நீங்க இங்க ஏன் நிக்கிறீங்க, பெண்கள் வரிசையில் போய் நில்லுங்க என்றார் அவர். 'பெண்கள் வரிசையெல்லாம் எதுவும் இல்லை. நீங்க போய் முதல்ல வரிசையில் நில்லுங்க' என்று அந்த பெண் கூற அந்த தன்மானச்சிங்கம் கூறியது 'நான் பயணச்சீட்டு வாங்கமலே போயிக்கிறேன்'

என்ன தான்பா உங்க பிரச்சனை?

***

கோயம்பேடு பேருந்து நிலையித்திலிருந்து D70 வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே உள்ள நிறுத்தத்தில் ஏறினால் அது எந்த வழியாக செல்கிறது என்று கேட்டுவிட்டு ஏறலாம். வெளியே வரும்போது ஏறி முற்பட்டால் அது எங்கே செல்கிறது என்று யூகிக்க முடியாது. பேருந்தில் உள்ள யாரையேனும் கேட்டால் தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் ரொம்ப அவசரமாக ஒரு நபர் வளாகத்தின் வெளியே பேருந்துக்குள் அவசரமாக ஏறினார். எங்கே செல்லவேண்டும் என்று நடத்துனர் கேட்ட கேள்விக்கு அவர் இருக்கையை கண்டுப்பிடித்து அமர்ந்துவிட்டு அப்புறம் மெதுவாக பதில் சொன்னார். "அம்பத்தூருக்கு ஒரு சீட்டு". பேருந்தோ வேளச்சேரிக்கு போய் கொண்டிருந்தது. விசயத்தை அவரிடம் விளக்கியதும் கோபமாக அவர் சொன்னார், 'அப்புறம் எதுக்கு போர்டுல அம்பத்தூர்'னு எழுதி வச்சிருக்கீங்க, முதல்ல அதை கழட்டி எறியுங்க'

என்ன தான்பா உங்க பிரச்சனை?

***

நேற்று விஜய் தொலைக்காட்சியில் 'காதலிக்க நேரமில்லை' தொடரின் ஒரு பகுதியை பார்க்க நேர்ந்தது. நாயகி ஒரு மென்பொருள் நிறுவன‌த்தில் சேருவதாக காட்டினார்கள். பார்த்த‌ கொஞ்ச‌ நேர‌த்திலேயே அந்த‌ நிறுவ‌ன‌த்தில் இருக்கும் ஆண் பெண்களின் தோள் மேல் கை போட்டு பேசுவ‌தாக‌வும், பெண் கேவ‌லமாக‌ ஒரு ந‌டையில் கொஞ்சி கொஞ்சி த‌மிழ் பேசுவ‌தாக‌வும் காட்டினார்க‌ள்.
மேலும் அமெரிக்க‌ மோக‌ம் பிடித்த‌ ஒரு ஆள், ட்ரீட் போக‌லாம் என்று முடிவெடுக்கும் ஒரு கும்ப‌ல் என்று நீண்டு கொண்டே போன‌து காட்சிய‌மைப்புக‌ள். முத‌ல் இர‌ண்டு பாக‌ங்க‌ளை வைத்து கொண்டு முடிவு எடுப்ப‌து ச‌ரிய‌ல்லை தான், இருப்பினும் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌ சூழ‌லை காட்ட‌ வேண்டும் என்றால் அவ‌ர்க‌ளுக்கு இந்த‌ காட்சிக‌ளை எடுக்க‌ ஏன் தோன்றிய‌து?

என்ன தான்பா உங்க பிரச்சனை?