27 November 2008

இரண்டு ஆண்டுகள், நூறு பதிவுகள் மற்றும் உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளிவந்த என் கவிதையொன்று

அவளும் நாய்க்குட்டியும்



பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது
ஒரு நாய்க்குட்டி பொம்மை
கண்டதுமே அலறியவளை
புரியவைத்து சமாதானப்படுத்தியதும்
மெல்லப் புன்னகைக்கிறாள்
கூடவே சிரிக்கிறது நாய்க்குட்டியும்
பிடித்திழுத்து காதுகளைத் திருகி
மூக்கினைக் கடித்து
மேல் ஏறி அமர்ந்த போது
அது முழுதாய் வசமாகியிருந்தது


தெருவில் போகும் நாய் ஒன்றினை
வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறாள்

நன்றி : உயிரோசை

***

மொழியோடு பயணம் செய்ய ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வலைப்பதிவு ஆரம்பித்து சில காலம் பதிவுகள் எழுதிக்கொண்டு மட்டும் இருந்தேன். பின்பு மெல்ல அடுத்தவர்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொய்வடைந்தது பயணம் :)

இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இதோ, இது நூறாவது பதிவு


இந்த வலைப்பதிவும், பதிவுலகமும் என்னுள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. நிறைய படிக்க துவங்கியிருக்கிறேன், நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன், இன்னும் நிறைய 'நிறைய'

பதிவுலகத்தின் மூலமாக கிடைத்த அனைத்து நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

24 November 2008

முச்சந்தியில் ஒரு சமூக அக்கறை

சமூகத்தின் மேல் அக்கறை கொள்வது ஒரு சாரார் தான். சில குறிப்பிட்ட பிரிவனர்களை சுட்டிக்காட்டி இவர்களுக்கு எல்லாம் சமூகத்தின் மேல் அக்கறையே கிடையாது என்று சொல்வதுண்டு. பிரிவினைவாதம் என்பது ஒரு கொடிய வியாதி தான்.




மேலே உள்ள படம் மடிப்பாக்கம் AXIS வங்கி அருகே இருக்கும் சந்திப்பில் ஒரு ஞாயிறு மாலையில் எடுக்கப்பட்டது. அந்த சந்திப்பில் போக்குவரத்து காவலர்கள் உண்டு எனினும், அவர்கள் எல்லா நாட்களிலும் எல்லாம் நேரங்களில் இருப்பது இல்லை

அப்படி காவலர் இல்லாத ஒரு நேரத்தில், நெரிசல் ஏற்படம் அபாயம் இருக்கும் ஒரு தருணத்தில் தாமாக முன்வந்து போக்குவரத்தை சீர்படுத்துகிறார் ஒரு இளம் தானி ஓட்டுனர். இந்த பதிவின் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம். சமூக சிக்கல்கள் வருகையில் வேறு யாரேனும் வருவார்கள் என்று காத்திராமல் நாமே களத்தில் இறங்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல முன்னுதாரணம்

அவசரத்தில் அவர் முகத்தை எடுக்க முடியவில்லை :(

**********



நாளைய உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள் மாணவர்கள். அவர்களில் ஒரு சிலர் செய்திருக்கும் செயலைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். பொதுச்சொத்தை மதிக்க அவர்கள் இன்னும் பழகிக்கொள்ள வேண்டும். பல சமயம் பெரியவர்களே இதை செய்வதில்லை.

19 November 2008

மன்னராட்சி இன்னும் முடியவில்லை

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாசலில் பேருந்து நிலையத்தையே மறைத்துக் கொண்டு ஒரு பலகை இருக்கும், இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தது செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் என்ற அறிவிப்பை தாங்கியபடி. சில காலத்துக்கு முன்பு அந்த வளாகத்தின் மற்றொரு வாசலில் 'இந்த பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது திரு. கருணாநிதி அவர்கள்' என்று ஒரு பலகையை வைத்தார்கள்.

அடிக்கல் நாட்டியவரும், திறந்து வைத்தவருமா இந்த வளாகம் கட்ட நிதி கொடுத்தார்கள். அரசு செலவில் தானே இவை செய்யப்பட்டது?

சென்ற மாதம் புதிப்பிக்கப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையையும் திறந்து வைத்தார் முதல்வர்.

ஆளுயர விளம்பர பதாகைகள், குழல்விளக்குகள், கட்சிக்கொடிகள், உதயசூரியன் சின்னம் பொறித்த சீரியல் செட் விளக்கு தோரணம் என்று அதகளப்படுத்துவிட்டார்கள் உடன்பிறப்புகள். மின் தட்டுப்பாடு சென்னையை முழுக்க ஆக்ரமித்திருக்க அன்று இரவு முழுதம் அந்த சாலை முழுவதும் குழல்விளக்குகள் எரிந்துக்கொண்டே இருந்தன. அந்த குழல்விளக்குக்களுக்கான மின்சாரம் எங்கிருந்து வந்தது? அந்த குழல்விளக்குகளால் என்ன பயன் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

போக்குவரத்து மிகுந்த அந்த சாலையை செப்பனிட்டும், இணைப்பு சாலையை மேம்படுத்தியும் அரசு சிறப்பான ஒரு பணியை செய்திருக்கிறது.

ஆனால் அரசு சார்பாக நடந்த அந்த விழாவில், கட்சிக்கொடிகளுக்கும், கட்சி சின்னத்துக்கும் என்ன வேலை? இன்னும் புரியவில்லை

அதே போல் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள், உயர் கோபுர மின்விளக்குகள் மீது, 'இது இன்னாரது தொகுது மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்டது' என்று பலகைகள் இருக்கிறது. இதில் அன்னாரது பெயர் தேவையா?

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிவிட்டதாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னும் மன்னர் ஆட்சியில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்காலத்தில் மன்னர்கள் எழுப்பும் கோயில்களில் தங்கள் பெயரை பொறித்து வைத்துக் கொண்டது போல் தான் இருக்கிறது இவர்கள் நடவடிக்கை

17 November 2008

வன்முறை எதற்கும் தீர்வாகாது

சட்டக்கல்லூரியில் நடந்த கொடுமையை பற்றி நிறைய எழுதிவிட்டார்கள். பிரச்சனை குறித்து இன்னும் நிறைய படித்தும் ஆராய்ந்தும் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த சம்பவம் மட்டுமல்ல, அண்மையில் கேள்விப்பட்ட நிறைய சம்பவங்கள் எழுப்பும் ஒரு கேள்வி, "வன்முறை தான் எதற்கும் தீர்வு என்ற எண்ணம் ஏன் எல்லோருக்குள்ளும் வேரூண்ற தொடங்கிவிட்டது?"

எப்போதுமே இம்மாதிரியான செய்திகளால் பதைபதைக்கும் மனம், இம்முறை மிகுதியாகவே வேதனைப்பட்டது. காரணம் இம்முறை வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள். இந்த வயதிலேயே ஆயுதம் தூக்கத் தயங்காதவர்கள் வளர்ந்ததும் என்ன ஆவார்கள்?

இவர்களுக்கு ஆதரவாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் களம் இறங்கி கல்லூரி வளாகத்தில் கல் வீசியிருக்கிறார்கள்.

போராட்டம் என்றாலே பேருந்துகளை எரிப்பது, கட்டிடங்களை சேதப்படுத்துவது என்று ஏன் ஆகிவிட்டது? பொதுச்சொத்தை சேதப்படுத்தும் எந்த ஒரு போராட்டமும் மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கும் என்று இவர்கள் நினைக்க தவறுவது ஏன்? அறப்போராட்டங்கள் பற்றி யாரும் சிந்திக்க மறுப்பது ஏன்?

ஒரு விதத்தில் இந்த தவறுகளுக்கு எல்லாம் பெரியவர்கள் தான் காரணமோ என்று தோன்றுகிறது. போராட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தை தான் இந்த இளைஞர்களும் பின்பற்றுகிறார்கள். ஊடகங்களும் இப்போதெல்லாம் வன்முறைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இன்னும் சில காலத்தில் அமைதி, சகிப்புத்தன்மை போன்ற வார்த்தைகளையே மக்கள் மறந்து விடுவார்கள் போலும். அடுத்த தலைமுறைக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது

பிற்சேர்க்கை 1 : நிகழ்விடத்தில் கை கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்த காவல்துறை இப்போது சட்டக்கல்லூரி மாணவர்களை மும்முரமாய் கைது செய்வது வேதனை :(

பிற்சேர்க்கை 2 : இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக நேற்று (17.11.2008) டைடல் பார்க் முன்பு மனித சங்கிலியாக இணைந்து குரல் கொடுத்தனர் ஐ.டி. துறையினர். 'போரை நிறுத்து' என்ற வாசகம் தாங்கிய சட்டைகள் அணிந்து போருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த நிகழ்வை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

7 November 2008

'குருவி'யை சுடும் 'ஏகன்'

மடலில் வந்த புகைப்படம். அஜீத் ரசிகர்கள் 'ஏகன்' படத்திற்காக தயாரித்திருக்கும் பதாகை





SPARROW & ARROW BECOMES ZERO TO OUR HERO.

எதுகை மோனை எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா 'வில்'லுக்கு ஆங்கிலத்துல 'BOW'. 'ARROW'ன்னா அம்பு :)



THALA IS NOT DIRECTOR SON HE IS DIRECT SUN
அட அட! என்ன ஒரு சிந்தனை. அது சரி நேரடி சூரியன்னா என்னங்க அர்த்தம்?



THALA FILM RUNS IN THEATRES NOT IN POSTERS

சும்மா நச்சுன்னு பாயிண்ட புடுச்சிட்டாங்கப்பா :)



இந்த பதாகை எழுதியவர்(கள்) கற்பனையை, INNOVATIVE THINKINGஐ ரசித்தேன். ஆனால் அதே சமயத்தில் இது போன்ற சிந்தனைகளை இவர்கள் தங்களின் 'தல'யின் பதாகையோடு நிறுத்தி விடுவார்களோ என்ற எண்ணமும் மற்றொரு புறம் எழவே செய்கிறது.



யாராவது இந்த ரசிகர் மன்றங்களை ஒழித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்

6 November 2008

திரைப்படம் - தொடர்பதிவு

நான் வலைப்பூவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது என்றாலும் மறக்காமல் நினைவில் வைத்து அழைத்த சந்தனமுல்லை, கார்த்திக் & சரவணகுமாருக்கு நன்றிகள்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

திரையரங்கில் பார்த்ததில் நினைவிருக்கும் முதல் படம் என்றால் 'விக்ரம்' என்று சொல்லலாம். அப்போது வயது 6. உணர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தது எல்லாம் ரொம்ப வருடங்கள் கழித்து தான்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அதென்னப்பா கடைசியா? சமீபத்தில் என்று தானே இருக்க வேண்டும். நிறைய இடைவெளிக்குப் பிறகு வெள்ளியன்று 'ஏகன்' திரைப்படம் பார்த்தேன். ஓரளவு மொக்கை என்றாலும் சலிப்பு தட்டவும் இல்லை

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி தொலைக்காட்சியில் படம் பார்ப்பதே இல்லை. விளம்பரங்களுக்கு இடையே எப்போதேனும் காட்டப்படும் படம் பெரும் சலிப்பை தரும். ஏதேதோ காரணங்களால் அரங்கில் பார்க்க முடியாமல் போன 'சரோஜா' படத்தை குறுந்தகடு உதவியுடன் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கதை கருத்து என்று ஒன்று இல்லாவிட்டாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் அசத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

கல்லூரி காலத்தில் பார்த்த "அலைபாயுதே". என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை ;)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தாக்கும் அளவுக்கு எதுவும் நடந்ததாய் நினைவில்லை

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ம்ஹீம்.... இதுக்கெல்லாம் பதில் சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாதுங்க :)

6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வார இதழ்கள், வலைதளங்கள் எதை புரட்டினாலும் திரைப்படங்கள் குறித்து ஏதேனும் ஒன்று இருந்துவிடுகிறதே. அதனால் வாசிக்க நேர்ந்துவிடுகிறது. ம்ம்ம், வாசிப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும்

7.தமிழ் சினிமா இசை?

ரகுமான் இசையில் மூழ்கித்தான் கழிந்தது பதின்ம காலம். இப்போதெல்லாம் எப்போதோ ஒரு முறை தான் இசையமைக்கிறார். தமிழ் திரையிசையை இப்போது நிறைய குத்துப்பாட்டுகளும் அதிரடி ரீமிக்ஸ்களும் தான் ஆக்ரமித்து உள்ளன. சீக்கிரமே பழையபடி நிறைய மெல்லிசை பாடல்கள் வரவேண்டும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நான் பார்த்த வேற்று மொழி படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மிகவும் பாதித்தவை DILWALE DULHANIA LE JAYENGE, KUCH KUCH HOTA HAI, JURASIC PARK, HONEY, I SHRUNK THE KIDS

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சத்தியமா இல்லை :)

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் அவர்கள் செய்துக்கொள்ளும் compromise கள் தான் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. முழுச் சுதந்திரத்துடன் இயங்கும் படைப்பாளிகள் கிடைத்தால் தமிழ்சினிமாவின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்

நான் நிம்மதியாய் இருப்பேன். இப்போதே எனக்கும் திரைப்படங்களுக்குமான தூரம் அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சி தான் கொஞ்சம் நேரத்தை விழுங்குகிறது.

தமிழர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. வேறு நல்ல விசயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் திரைப்படங்களும் ஒரு நல்ல ஊடகமாக இருந்தன. பல அரசியல் சம்பவங்களை, நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டின. வெளிநாட்டினையெல்லாம் சுத்திக் காட்டினார்கள்.

இப்போது இவற்றையெல்லாம் சொல்ல தொலைக்காட்சி வந்துவிட்டது. மேலும் திரைப்படங்களும் இப்போது வெறும் பொழுதுப்போக்காக மட்டுமே இருக்கிறது. கலாச்சாரத்தையும் இவர்கள் சீரழத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். (ஏகன் படத்தில் கல்லூரி விரிவுரையாளராக வரும் நயன் தாராவின் உடையை பார்த்தாலே புரியும் இவர்கள் ரசனை)

தமிழ்சினிமா ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டால் கூட நன்றாகத்தான் இருக்கும்.

***

எனக்கு அழைப்பு வந்து வெகு நாட்கள் ஆயிற்று. ஆகையால் அதற்குள் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள் என்பதால் யாரையும் அழைக்கவில்லை :)

பி.கு : தமிழ்ச்சினிமா என்று எழுதியிருப்பதை பார்த்துவிட்டு வீட்டில் சொன்னது. அதென்ன தமிழ்ச்சினிமா ? தமிழ் திரைப்படங்கள் என்று எழுதலாமே.... அப்புறம் சினிமா என்றே எழுதினாலும் அதில் என்ன ஒற்று ? தமிழ் சினிமா என்று தானே இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துட்டுப் போயிட்டாங்க :)

5 November 2008

சோதனைப் பதிவு

திரைப்படம் குறித்த தொடர்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை. ஆனால் சோதனைப் பதிவு போட்டால் சேர்க்க முடிகிறது.

என்ன கொடுமை பிரேம்குமார் இது?