15 September 2009

எண்ணங்கள்

உணவின் அருமை வீட்டிலிருக்கும் வரை புரிவதில்லை. வீட்டை கடந்து வாழும் நிமிடங்களில் மறுத்த உணவின் ஒவ்வொரு பிடியும் கைதட்டி சிரிக்கிறது. வீட்டு உணவிலேயே உய்வதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. வெளிச்சாப்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ளவும், அந்த சாப்பாடு உங்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவும் நேரமெடுக்கலாம்.

ஒழுங்கான உணவு முறையை கடைப்பிடிக்கையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்ச உடலுழைப்பு இருந்தாலே போதுமானதாய் இருக்கிறது. ஆனால் உணவு சரியில்லாமல் போனால், தன்னை நிராகரித்த நாட்களில் சேர்த்து வைத்த வஞ்சத்தையும் எல்லாம் ஒட்டுமொத்தமாய் காட்டிவிடுறது உடல். உடற்பயிற்சியின் அவசியத்தை உணர இப்போதும் காலம் தவறிவிடவில்லை என்ற போதும் அதை பழக்கமாக்கிக் கொள்ள முடியாதபடி செய்யும் இந்த சோம்பேறித்தனத்தை எப்படி எதிர்கொள்வது?

நட்பு என்பது கட்டாயம் மனிதனுக்கு ஆசீர்வாதம் தான். மீண்டும் மீண்டும் என் வாழ்வில் காலம் அதை அழுந்த உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக தலை சாயும் நேரமெல்லாம் தன்னையறியாமல் தாங்கும் அவர்கள் தோள்களுக்கு ஈடாய் வேறெதுவும் இருக்கப்போவதில்லை. முக்கியமாக சுயநலத்தின் மொத்த உருவகமாக உலாவரும் மனிதர்களுடன் இருக்க நேரும் போதெல்லாம் சகமனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை எரிந்து கருகும் போது அதை பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பிப்பது நண்பர்கள் தான்.

ரொம்ப புலம்பியாச்சு. இனி ஒரு மகிழ்வான செய்தி.

செப்டம்பர் 13 தேதியிட்ட கல்கி இதழில் என் காலயந்திரம் கவிதை 'எழுதப்படாத குறிப்புகள்' என்ற தலைப்பில் வெளியாகிருக்கிறது. பெரிதும் ஊக்கமாய் இருந்த தோழி கார்த்திகாவுக்கும், என் கவிதையை சட்டென அடையாளம் கண்டுகொண்ட கார்த்திகை பாண்டியனுக்கும், இதுக்காவது பதிவு எழுதுங்க! வர வர நீங்க வலைப்பதிவு வச்சிருக்கீங்கங்குறதே மறந்து போகுது என்று மிரட்டிய செல்லத்தம்பி கார்த்திக்கும் மிக்க நன்றி (அட! எல்லாரும் கார்த்தி தானா? :))

கடும் பணிச்சூழலுலிருந்து விடுபடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இயல்பு மீண்டு(ம்) வரவேண்டும்