28 June 2007

எட்டுமோ எட்டாதோ

அருட்பெருங்கோ அவர்களின் அழைப்பின் பேரில் இதோ நானும் 8 போட பார்க்கிறேன்

1. தமிழ் மொழி எனது சுத்தமான 'தாய்'மொழி. அது என்ன சுத்தம்னு கேட்டீங்கன்னா, நான் பள்ளிக்கூடத்தில் தமிழை மொழிப்பாடமாக படித்ததே இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலமும் இந்தியும் தான். அம்மா தான் முழுமுதல் தமிழ் ஆசான். இப்போ சுமாரா தமிழ் எழுதுறேன்னு நினைக்கிறேன். இன்னும் இந்த ஒற்று, மரபுக்கவிதைகள், இலக்கணம் போன்ற சமாச்சாரங்கள் தான் ஒழுங்கா வரல‌

2. கல்லூரி முடிக்கும் வரை அனேகமாக என் வகுப்பை தாண்டி வேறு யாரையும் அவ்வளவாக தெரியாது. நானாக சென்று யாரிடமும் பேசவும் தயங்குவேன். இந்த நிலைமையை தலைக்கீழாக மாற்றியது அலுவலக வாழ்க்கை, அதுவும் குறிப்பாக பெங்களூரில் வாழ்ந்த காலம். நண்பர்கள் யாரும் உடணில்லாத காரணத்தால் இணையத்தில் அதிகம் உலாவுவேன். அப்படி இணையத்தில், வலைப்பூ உலகில், குழுமங்களில் கிடைத்த நண்பர்கள் பலர்.

3. மொழிகள் கற்க மிகவும் பிடிக்கும். தமிழ், இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகள், கொஞ்சம் தெலுங்கு எல்லாம் தெரியும். பெங்களூரில் இருந்த போது அங்கு அன்றாட வாழ்க்கை வாழ‌ தமிழும் இந்தியும் இருந்தாலே ஒப்பேத்திவிடலாம். அலுவலகத்தில் ஆங்கிலம் போதும். அறையிலோ எல்லாமே தமிழர்கள். இருந்தாலும் கன்னட மொழியை ஓரளவு பேசவும் புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.

4. விளையாட்டுகளை விடவும் கலைகள் மீது ஆர்வம் அதிகம். ஓவியம், களிமண் பொம்மைகள் செய்தல், பாட்டு, நாட்டியம் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் எதிலும் உருப்படியாய் ஒன்றும் சாதித்ததில்லை. காரணமும் தெரியும், அக்கறையிண்மை.

5. தோல்விகளை ஒப்புக்கொள்ள‌ தெரியும் எனக்கு. அடுத்த‌வ‌ர் வெற்றியில் ஆன‌ந்த‌ம் காண‌வும் தெரியும் என‌க்கு. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பினும், திற‌மை ப‌டைத்த‌வ‌ர்கள் தொலைக்காட்சி போட்டிகளில் வெற்றிப்பெற்றாலும் ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் விட்டு ச‌ந்தோச‌ப்ப‌டும் வ‌கை நான்

6. இள‌ங்க‌லை க‌ணிப்பொறியிய‌ல் ப‌டித்த‌ (?), அதாவ‌து கல்லூரிக்கு போன‌ (க‌வ‌னிக்க‌, வ‌குப்ப‌றைக்கு அல்ல) மூன்று ஆண்டுக‌ளுமே தேர்வுக்கு ஒரு வார‌ம் முன்பு தான் பாட‌ம் என்ன‌வென்றே பார்க்க‌ ஆர‌ம்பிப்போம். ஏற்க‌ன‌வே எங்க‌ க‌ல்லூரியின் பேரைக் கேட்டாலே, 'அந்த‌க் க‌ல்லூரி ப‌ச‌ங்க‌ளா.... என்று தொட‌ங்கி கேட்ட‌ வார்த்தையிலேயே திட்டுவார்க‌ள். விளையாட்டு, சினிமா என்று ஊர் சுற்றிய எங்கள் வ‌குப்பு தோழர்கள் எல்லோருமே எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு ப‌டித்த‌ வித‌ம் ம‌ட்டும் இன்றுமே ஒரு ஆச்ச‌ரிய‌ம்! அனேக‌ம் பேர் இன்றைக்கு சிறந்த‌ மென்பொருள் நிறுவ‌ண‌ங்க‌ளில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

7. பாட‌ப்புத்த‌க‌ங்க‌ள் த‌விர‌ வாசிக்கும் ப‌ழ‌க்க‌மே கிடையாது. அம்புலிமாமா, பூந்த‌ளிர் வ‌கைய‌றாக்க‌ளை கூட‌ அம்மா ப‌டித்து க‌தை சொல்லுவார்க‌ள். இப்போது தான் ச‌மீப‌ கால‌மாக‌ ஒழுங்காக‌ வாசிக்க‌ தொட‌ங்கியுள்ளேன். இணைய‌த்திற்கு தான் ந‌ன்றியை சொல்ல‌ வேண்டும். சில‌ நேர‌ம் தொட‌ர்ந்து வேலை இல்லாத‌ பொழுதுக‌ளில் அலுவ‌லக‌ ந‌ண்ப‌ன் என்ன செய்வதென்று தெரியாமல மிக‌வும் அலுத்து கொள்வான். நான் எப்போதும் க‌ணிணியில் எதாவ‌து ஒரு வ‌லைப்பூவை நோட்ட‌மிட்டுக்கொண்டிருப்ப‌தை பார்த்தால், 'உங்க‌ளுக்கு ஒரு க‌ணிப்பொறியும், இணையமும் இருந்தால் போதும் போலும். எப்படியும் பொழுதை ஓட்டிவிடுகிறீர்கள்' என்று கிண்ட‌லாக‌ சொல்வான்

8. தூக்க‌ம் என்றால் அவ்வ‌ள‌வு விருப்ப‌ம். வேறு வேலை எதுவும் இல்லையென்றால் நன்றாக‌ ப‌டுத்துத் தூங்குவேன். ஆனால ந‌ல்ல‌ வேளையாக‌, தூக்க‌ம் ம‌ற்ற வேலைக‌ளை கெடுப்ப‌தில்லை. இதோ, இப்போது கூட‌ இர‌வு 12:30 ம‌ணிக்கு அம‌ர்ந்து இந்த மொக்கை பதிவை யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் இதை த‌ட்ட‌ச்சிக் கொண்டிருக்கிறேன்

நான் அழைக்க‌ நினைக்கும் எட்டுப் பேர்

1. பிர‌பாக‌ர‌ன்
2. ப்ரியா
3. கென்
4. ந‌ந்த‌குமாரன்
5. க‌விப்ரிய‌ன்
6. ஜி
7. அயன்
8. கருணா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

13 June 2007

'ஜி'யை க‌லாய்ப்போர் ச‌ங்க‌ம்

வாங்க‌ ம‌க்கா,

நாங்க‌ எல்லாம் சும்மா ஏதாவ‌து கிறுக்கிக்கொண்டிருக்கையில் ' க‌விஞ‌ர்க‌ளாம்' என் சொல்லி எங்க‌ளை ஓட்டிவிட்டு இப்போது அவ‌ர் ம‌ட்டும் க‌விதைப்போட்டியில் ப‌ங்க‌ப்பெற்று பாராட்டு பெற்றிருக்கும் ஜி'யை நாங்க‌ வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிறோம்

இப்ப‌டிக்கு
'ஜி'யை கலாய்ப்போர் ச‌ங்க‌ம்

அட‌, நாங்க‌ நாங்க‌ன்னு சொன்னாலும் இப்போதைக்கு ச‌ங்க‌த்தில‌ நான் ம‌ட்டும் தான் த‌னியா சோபா போட்டு உக்காந்திருக்கேன். இந்த‌ ப‌திவு மூல‌மா நிறைய‌ பேர் சேருவாங்கன்னு எதிர்ப்பார்ப்போம் ;)

அன்புட‌ன் க‌விதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்ற‌ வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

அருட்பெருங்கோ
ஜி
ந‌வீன் பிர‌காஷ்

ஆகியோருக்கு வாழ்த்துக்க‌ள்