31 January 2008

எழுதியதில் பிடித்தது

ரொம்ப முன்னுரையெல்லாம் போட்டு இந்த பதிவப் போடப் போறதில்லை. ஏன்னா, எப்படியும் இத யாரும் படிக்கப் போறதில்லை. ஹி ஹி ஹி!

எழில் அழைத்தமைக்காக இந்தப் பதிவு

2007ல் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது பிப்ரவரியில் எழுதிய 'இது காதல் காலம்'

அதெப்படி நமீதா பதிவ விடலாம்னு கேக்குறீங்களா? அது தான் 2007ல் நான் எழுதியதில் மக்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு. இதுவரைக்கும் என் வலைப்பூவில் அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவு அது தான் :)

ஆனா அதுக்கு காரணம் பதிவா இல்ல நமீதாவான்னு சொல்ல தேவையில்லை இல்லையா? ;)

30 January 2008

ப்ளாக்கருக்கு ப்ரேக் பிடிக்கல

மக்கள் எல்லாம் அழகா கவிதையும் எழுதி அத அழகான படங்களிலும் இணைத்து போட்டுடுறாங்க. நமக்கோ கவிதையும் ஒழுங்கா எழுத வரல, படங்களிலும் சரியா இணைக்க தெரியலை, சரி குறைந்தப்பட்சம் கவிதை பக்கத்தில நல்ல படங்கள் போட்டாவாவது ஒரு 'ஸ்பெஷல் எபெக்டு' கிடைக்குதான்னு பாக்க, அப்படி ஒரு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

முயற்சி செய்த பதிவு : காதல் கார்த்திகை

Bloggerல் HTML TABLE வசதி இல்லாததால், நாமளே தான் நிரல் எழுத வேண்டியிருக்கிறது. TABLE போட்டு ஒரு பக்கம் கவிதையும் ஒரு பக்கம் படங்களும் போடலாம் என்று முடிவு செய்து நிரலை முடித்தாயிற்று. ஆனால் பதிவை இட்டுப் பார்த்தால் தலைப்பு புதுவையிலும் பதிவு சென்னையில் இருந்துக்கொண்டு பல் இளித்தது. என்ன என்னவோ செஞ்சு பாத்து, இருக்குற கொஞ்ச நஞ்ச மூளையையும் பிச்சு பிறாண்டினாலும் ஒன்னும் புரியல.

கடைசியில் கூகுளாண்டவர் காலில் விழுந்த போது தான் புரிந்தது, "ப்ளாகருக்கு ப்ரேக்
பிடிக்காதாம்". அதனால் தான் ப்ரேக் பிடிக்காத வண்டி போல் பதிவு தலைப்பை விட்டு வெகு தூரம் போய் நின்றிருந்தது.

முதலில் TABLE பயன்படுத்த எழுதவேண்டிய நிரல் :

<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>


ஆனால் இந்த நிரலை அப்படியே போட்டு, இன்னும் வரிகளை (ROWS) அதிகரித்துக்கொண்டே போனால் அப்புறம் பல்லிளிப்பு தான்

ஒரு சுலபமான வழி, இந்த நிரலை இட்டு நடுவில் உள்ள வெற்றிடங்களை நாமே களைந்து விடுவது

<table border="1"><tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr><tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr></tbody></table>

ஆனால் நிரலின் அளவு பெரியதாக இருந்தால் இந்த முறை பெண்டை நிமித்திவிடும். அதுக்கு இன்னொரு எளிய வழி CSS உடன் நிரலை பயன்படுத்துவது


<style type="text/css">.nobr br { display: none }</style>
<div class="nobr">
<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>
<div>

இனி நீங்களும் பதிவுல கட்டம் கட்டி கலாசலாம் :)

18 January 2008

வாடகைக்கு வீடு தேவை - மொக்கைத் தொடர்

மாப்பி கோபி இந்த மொக்கை விளையாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். ஆனா நமக்கு தான் மொக்கை வராதே, என்னத்த எழுதுறதுன்னு ஒரே சோகமா இருந்தேன். அப்புறம் தான் டேய், நீ சீரியஸா எழுத நினைக்கிறதேயே மக்கள் மொக்கயாத்தாண்டா பாக்குறாங்கன்னு மனசாட்சி சொல்லுச்சு. சரி, வழக்கம் போல ஒரு (மொக்க) பதிவப் போட்டுட்டு கோபிக்கு சமர்ப்பணம் செஞ்சிடலாம்னு முடிவு பண்ணி களத்தில் குதிச்சாச்சு

*********************************************************************

வீட்டுக்கும் அலுவலகத்தும் தூரம் ரொம்ப இருக்குறதால வீடு மாத்தலாம்னு தேட ஆரம்பிச்சா, மக்கள் சரிமாரியா மொக்க போடுறாங்க. வாலிபர்களுக்கு சென்னையில் வீடு தர மாட்டார்கள் என்ற காலம் போய், இப்போதெல்லாம் வேலை செய்யும் இளைஞர்கள்/மகளிர் போன்றவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாடகை எல்லாம் சும்மா கும்முன்னு ஏறிப்போச்சு. வேளச்சேரி பக்கம் எல்லாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்' எனும் பலகையே வைப்பதில்லை. தரகரிடம் சென்று நமது பட்ஜெட்டை சொன்னால், 'சார், 10 ஆயிரத்துக்கு குறைஞ்சு எல்லாம் வீடே பாக்க முடியாது'ன்னு சொல்லி கேவலமா பாக்குறாரு. அவருக்கு வர வேண்டிய கமிஷனில் குறியாய் இருக்கிறார் அவர்.

ஐ.டிக்காரர்கள் வந்து தான் விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுன்னு சொல்கிறவர்களில் எவறேனும் அவர்கள் வீட்டை குறைந்த வாடகைக்கு விடுவார்களா? ;-)

*********************************************************************

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தங்கர் பச்சானின் பேட்டி பார்க்க நேர்ந்தது. உணர்ச்சி பொங்க தலைவர் சொல்வது என்னவெனில் 'சிரிக்க வைப்பது கூட சுலபம் தாங்க. ஒரு படத்த பார்த்து மக்கள அழ வைக்கிறது தான் கடினம்'. நகைச்சுவை படம் எடுப்பவர்களோ 'சிரிக்க வைப்பது தான் இருக்குறதிலேயே கஷ்டமான விசயம்' அப்படீங்குறாங்க....
என்னமோ போங்க, ஒன்னுமே புரியலை

அது சரி தங்கர், அழகி படத்துல (a-b)^2 = (a+b)(a-b) அப்படின்னு கணக்கு பக்குவமா சொன்னது நீங்க தானே. இந்த குளறுபடிகள வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவுல நான் மட்டும் தான் சரியான படம் எடுக்குறேன்னு எப்படி சொல்ல முடியுது உங்களால?!

*********************************************************************

துபாய் பதிவர்கள் எல்லாம் கிழிகிழின்னு கிழிச்ச இளையராசாவின் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. சாதனா சர்க்கத்தின் தமிழ் உச்சரிப்பை ராஜா குறை சொன்னார்னு யாரோ எழுதியிருந்தாங்க. அது சரி, ஆனா நிகழ்ச்சியில பாடுனவுங்க பட்டியல பாத்தா யாருமே தமிழ் பேசுறவுங்க இல்லையே. சித்ரா, பாலசுப்ரமணியம், மனோ, மஞ்சரி, ஸ்ரேயா, சாதனா, விஜய் யேசுதாஸ், அப்படின்னு பாடின எல்லோருமே பிறமொழி கலைஞர்கள் தானே.... ஏன், தமிழ்நாட்டுல பாட தெரிஞ்சவுங்க யாருமே இல்லையா என்ன?

பாடின ஒரே தமிழ்க்குரல் இளையராளுக்கு தமிழ் தெரியுது, இளையராசா பொண்ணுங்குற தகுதி இருக்கு....ஆனா மேடையில் கணீர்னு பாட வரல. கொஞ்சம் தடுமாறவே செய்யுறாங்க

*********************************************************************

மக்கள் தொலைக்காட்சியில் சாதாரணமாகவே நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லாவே வந்துக்கிட்டு இருக்கு. அதிலும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பு. கஷ்டப்பட்டு தமிழ் பேசாம, இலக்கிய நடையில் பேசாமல், சரளமா உரையாடும் தொகுப்பாளர்களை பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இவர்கள் பேசப்பேச கூட உரையாடும் பொதுமக்களும் தமிழிலேயே உரையாட முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று. வாழ்க மக்கள் தொலைக்காட்சி! வளர்க அவர்கள் பணி!

ரொம்ப சிந்திக்காம மத்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை நகலெடுக்கும் தொலைக்காட்சியின் கண்களுக்கு 'மக்கள் தொலைக்காட்சி' மட்டும் கண்ணுக்கே தெரிவதில்லையா என்ன?

*********************************************************************

இன்னும் இது போல மொக்கைகள் நிறைய போட நினைத்தாலும், சில மொக்கை ஆணிகள் இருப்பதால், ஐ ம் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

ஓ மறந்தே போயிட்டேன், மொக்கை போட மூன்று பேரை அழைக்கனுமாமே..... நான் அழைக்க நினைப்பவர்கள்

1. 'காதல் முரசு' அருட்பெருங்கோ
2. 'அண்ணாச்சி' ஆசிப் மீரான்
3. 'ஜொள்ளுலக பேரரசு' ஜொள்ளுப்பாண்டி

10 January 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

கருவறையிலும் கல்லறையிலும்
ஒருவாறே மணம்வீசும்..
புயலோ வெயிலோ
உய்யும் வரை மலர்ச்சி காட்டும்..


அடுத்தொரு தலைமுறைக்கான
தலையெழுத்தைத் தாங்கிநிற்கும்போதும்
தலைக்கணத்திலில்லாது
தென்றலின் திசையில் மட்டுமே
தலைசாய்க்கும்..

பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!



சிறில் அலெக்ஸின் 'பூக்களில் உறங்கும் மௌனங்கள்' போட்டிக்காக

7 January 2008

சென்னை புத்தகக் கண்காட்சி '08 - நிறைகளும் குறைகளும்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சனிக்கிழமை (5 ஜனவரி, 2008) செல்ல நேர்ந்தது. விடுமுறை நாட்களில் 11 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடும் எனும்போது 12 மணிக்கு சென்றபோதுக்கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை

1 மணி வாக்கில் நண்பர்கள் அருட்பெருங்கோ,அ.பிரபாகரன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் சேர்ந்துக்கொள்ள கண்காட்சியில் சுற்ற ஆரம்பித்தோம்

* இந்த முறை கவிதை புத்தகங்கள் அதிகமாக தென்படவில்லை. சுற்றிச்சுற்றி வைரமுத்து, தபூ சங்கர் கவிதைகள் தான் கண்ணில் பட்டன. இளம் பெண்கள் அதிகமாக தபூ சங்கரின் காதல் கவிதைகளை வாங்கிச் சென்றனர். தபூ சங்கரின் சமீபத்தியப் புத்தகம் 'நெஞ்சவர்ணக் கிளி'. நினைவுகளை மட்டுமே மையமாகக் கொண்ட நல்லதொரு கவிதைத் தொகுப்பு

* நிலாரசிகனின் 'மயிலிறகாய் ஒரு காதல்' புத்தகம் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் நல்லதொரு காதல் தொகுப்பு. புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதென்றும் கேள்வி. நிலாவுக்கு வாழ்த்துக்கள்

வலைப்பதிவுலக காதல் கவிஞர்கள் எல்லாம் அடுத்த கண்காட்சிக்குள்ளாவது புத்தகம் போட முடிவெடுக்கலாம்.

* இளைஞர்கள் பலர் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை தேடிப் பிடித்து வாங்குவது மகிழ்ச்சி தரும்படியாக இருந்தது

மதியத்திற்கு மேல் நண்பர்கள் ப்ரியன், கென், அனிதா, எழில், த.அகிலன் ஆகியோர் சேர்ந்துக் கொள்ள கண்காட்சிக்கு சென்றது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாய் ஆயிற்று. மாலை நெருங்ககையில் மக்கள் கூட்டம் அலைகடலென கண்காட்சியில் திரண்டிருந்தது பார்க்கவே பரவசத்தை தந்தது.

சில குறைகள்

சனிக்கிழமை கண்காட்சி தொடங்கி இரண்டாவது நாள் என்ற போதும், நிறைய புத்தகங்கள் வந்திருக்கவில்லை. சில அரங்குகளை அப்போது தான் சரி செய்துக் கொண்டிருந்தார்கள்.

உணவு ஏற்பாடு மிக மிக மோசம். எரிச்சல் மூட்டும் விதமாகவே இருந்தது. சென்ற முறை வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். இந்த முறை இந்த குறைபாடுகள் ஏன்?