30 December 2008

மாணவர்களும் அரசியலும்

அது நான் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த நேரம். கல்லூரித் தேர்தலுக்காக விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய நாள். மூன்றாமாண்டு வணிகவியல் மாணவரும், மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவரும் தான் மாணவர் பேரவைத் தலைவர் போட்டிக்கான முக்கிய போட்டியாளர்கள். தங்கள் துறை மாணவர் தேர்தல் போட்டியில் இருக்கிறார் என்பதில் கணிப்பொறியியல் துறைக்கே பெருமையாகத்தான் இருந்தது. இருப்பினும் வழக்கம் போல் வகுப்புகள் நடந்துக்கொண்டிருந்தன.

பெருந்திரளாக வகுப்பறைக்குள் நுழைந்த கூட்டமொன்று அன்று வகுப்புகளை நடத்த தேவையில்லை என்று வலியுறுத்தினர். தேர்வு நெருங்குகிற காரணத்தால் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று விரிவுரையாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வகுப்புகளை விட்டு எல்லோரையும் வெளியேற்றினர். மாணவர்கள் வெளியே வந்து ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு வேன் அங்கு வந்து நின்றது.

'ஏன் டா, எங்களை எதிர்த்து போட்டி போடுவீங்களா? நாங்க எவ்வளோ பணம் செலவழிச்சிருக்கோம் தெரியுமா? எங்களுக்கு *** கட்சி ஆதரவு இருக்கு தெரியுமா? எங்களை வெல்ல முடியுமா?' என்று அறைகூவல் விடுத்தார்கள் வேனில் இருந்து இறங்கியவர்கள்.

சடசடவென அங்கிருந்த எதிரணி மாணவர்களை அள்ளி வண்டியில் அடைக்க துவங்கினார்கள். சிதறிய ஓடிய கூட்டத்தில் யார் அகப்பட்டார்கள், யார் தப்பித்தார்கள் எனத்தெரியவே கொஞ்ச நேரம் பிடித்தது.

கல்லூரியில் இருந்த கிளம்பிய வண்டி நகரத்தின் முக்கியப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகத்தின் முன் நின்றது. முதல் மாடியில் பல மாணவர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கபடுவார். அவர்கள் எல்லோரும் வாக்களித்து தான் மாணவர் பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். ஆக, அந்த குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் அங்கே சகல வசதிகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நாளன்று அங்கிருந்து எல்லோரும் அழைத்துச்செல்லப்பட்டு அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை பதிவார்கள்.

அப்போது பிடித்துக்கொண்டு வரப்பட்ட கணிப்பொறித்துறை மாணவர்கள் மட்டும் பினைக்கைதிகளை போல நடத்தப்பட்டார்கள். வணிகவியல் துறை மாணவன் ஒருவன் வந்து மிரட்டினான். 'ஏன் டா? நீங்க எல்லாம் படிக்கிற பசங்க தானே? உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? என் நண்பன் தான் வேட்பாளனா நிக்கிறான். அவனுக்கு இன்னும் நாலு மாசத்துல திருமணம். அப்போ அழைப்பிதழ்'ல அவன் பெயருக்கு பக்கத்தில் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர்னு போட்டா எப்படி இருக்கும்? அதுக்கு தானே நாங்க எல்லாம் அவனுக்கு ஆதரவா இருக்கோம். இதுக்காக அவன் எவ்வளவு செலவு செய்திருக்கான் தெரியுமா? " என்று அடுக்கிக்கொண்டே போனான். கூறியவன் வேறு யாருமல்ல. அத்தனை நாட்கள் அந்த கணிணித்துறை மாணவர்களோடு ஒன்றாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவன் தான்.

அன்றைய நாள் அந்த கணிப்பொறித்துறை மாணவர்களுக்கு ஒருவித பயத்துடனும் பதற்றதுடனுமே போய்கொண்டிருந்தது. ஆனால் எல்லோரும் நம் கல்லூரி மாணவர்கள் தானே என்ற ஒரு நம்பிக்கையில் நேரத்தை போக்கிக்கொண்டிருந்தார்கள். மாலை எதிரணியினர் அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசிக்கொண்டு அந்த மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். வழக்கமாக கல்லூரி முடிந்து போவது போல் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

அந்த மாணவர்களின் பெற்றோருக்கு நடந்தவை தெரிந்த போது காவல்துறையிடம் சொல்லலாமா என்று கேட்டார்கள். ஆனால் எல்லோரும் தங்கள் கல்லூரி மாணவர்கள் தான், நண்பர்கள் தான். தேர்தல் முடிந்ததும் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி அன்றோடு அந்த நிகழ்வையே அனேகமாய் எல்லோரும் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் கல்லூரியில் தேர்தல் நடக்கிறதா என்பது கூட கேள்விக்குறி தான். இப்போது மிகவும் கண்டிப்புடன் செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்று அறிகிறேன்.

சட்டக்கல்லூரியில் நடந்து நிகழ்வுக்கு பின்னே, இதை கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பு தள்ளிக்கொண்டே போன ஒரு நாளில், கல்லூரி படத்தையும் பார்க்க நேர்ந்தது. அரசியல்வாதிகளின் அரக்க குணத்தினால் தீக்கிரையாகிப்போன மாணவிகளை நினைத்தால் இன்றும் கூட நெஞ்சம் பதைபதைக்கிறது.

இவையெல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அந்த தேர்தல் நேரத்தை நினைத்துப் பார்த்தால், அப்போது இல்லாத பயம் இப்போது கொஞ்சம் எட்டிப்பார்கிறது.மாணவர்கள் அரசியலில் இறங்குவது குறித்த கருத்து ஒரு புறம் இருக்கட்டும், மாணவர்களுக்குள் அரசியல் புகலாமா என்பது பெருங்கேள்வி?

மாணவர் தேர்தலிலேயே கடத்தல், ஆள் சேர்ப்பு, பண பலம் போன்றவற்றை நம்புவர்கள் பிந்நாளில் பொது அரசியலுக்கு வந்தால் என்னாவது? மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்? இத்தகைய அரசியல் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்?

3 December 2008

அழகான நாட்கள்

அப்போது தான் நிதிலாவுக்கும் முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. புகுந்த வீட்டிற்கு கிளம்பும் முன் மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்த கண்களோடு அம்மாவை வந்து கட்டிக் கொண்டாள் நிதிலா. அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையில் ஒரு வங்கிக் கணக்கு புத்தகத்தை தந்தார் அம்மா.

'உன்னோட கல்யாண வாழ்க்கை பற்றிய குறிப்பா இருக்கட்டும் இந்த வங்கிக்கணக்கு. இப்போ உன் கல்யாணம் நடந்த இந்த மகிழ்ச்சியான நேரத்துல இதுல ஆயிரம் ரூபாய் போட்டு ஆரம்பிச்சுருக்கேன். ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தின் போது நீ இதுல கொஞ்சம் பணம் போடு. கூடவே அந்த நிகழ்ச்சி பத்தியும் ஒரு குறிப்பு எழுதி வச்சுக்கோ' என்றார் அம்மா

நிதிலா இதை பற்றி முருகனிடம் கூறிய போது அவனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அடுத்த மகிழ்ச்சியான தருணம் எப்போது வரும் என காத்திருந்தார்கள்.

சிறிது காலத்திற்கு பிறகு அவர்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தில் கீழ்கண்ட குறிப்புகள் இருந்தன :

28 செப்டம்பர், 1997 - 500 ரூ - முதல் சுற்றுலா
15 அக்டோபர், 1997 - 1000 ரூ - முருகனுக்கு பதவி உயர்வு கிடைத்தது
05 நவம்பர், 1997 - நிதிலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
17 ஜனவரி, 1998 - 1000 ரூ - நிதிலா கருவுற்றாள்
18 செப்டம்பர் 1998 - 2000 ரூ - அன்புச்செல்வன் பிறந்தான்

இவ்வாறு நீண்டு கொண்டே போனது குறிப்புகள்.

சில காலத்திற்கு பிறகு வழக்கமான ஊடல்களும், சண்டைகளும் சற்று பெரிதாக துவங்கின. தொடங்கும் வேகத்திலே முடியும் சண்டைகள் நாட்கணக்கில் நீளத் துவங்கின. நிறைய நாட்கள் பேசாமல் இயந்திரத்தண்மையுடன் கழிந்தன.

இனி பயனில்லை என்று முடிவு செய்த ஒரு மாலைப் பொழுதில் தன் அம்மாவிற்கு தொலைபேசினாள் நிதிலா. 'அம்மா, இனியும் என்னால பொறுத்துக்க மூடியாதும்மா. இப்படிப்பட்ட மனுஷன் கூட வாழ்க்கை நடத்துறதே கொடுமை. விவாகரத்து செய்திடலாம் என்று முடிவு செய்துட்டேன்' என கூறினாள்.

'நீ சொல்றது சரிதான் கண்ணா. விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திடலாம். ஆனால் ஒரு விசயம். உன் கல்யாணத்தின் போது நான் கொடுத்து வங்கிக்கணக்கு நினைவு இருக்கா? அதுல இருக்க பணத்தை எல்லாம் எடுத்து செலவு பண்ணிடு. இந்த திருமணத்தின் நினைவா அது எதுக்கு இருக்கனும்?'

நிதிலாவுக்கு அது சரியெனவே பட்டது. அந்த கணக்கை மூடுவதற்கு வங்கிக்கு செல்லத் தயாரானாள். எதேச்சையாக அந்த புத்தகத்தை புரட்டிய போது அதில் இருந்த குறிப்புகள் கண்ணில்பட அவற்றை படிக்க துவங்கினாள். மீண்டும் மீண்டும் படித்தாள். தாங்கள் வாழ்ந்த அழகான நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது.

முருகன் வந்தவுடன் அந்த கணக்குப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து அந்த கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் விவாகரத்திற்கு முன் செலவு செய்ய சொன்னாள்.

அடுத்த நாள் நிதிலாவிடம் முருகன் அந்த புத்தகத்தை நீட்டிய போது அதில் புதிதாய் ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்திருந்தது. 'நாம் எத்தனை மகிழ்ச்சியாய் நம் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம் என்று இன்று உணர்ந்துக் கொண்டேன். நீ எத்தனை மகிழ்ச்சியை என் வாழ்வில் சேர்த்திருக்கிறாய். நான் இனி எப்போதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்' என்று ஒரு குறிப்பும், இல்லை காதல் கடிதமும் இருந்தது.

இருவரும் கட்டித் தழுவிக்கொண்டு அழத்துவங்கினார்கள்.

முருகன் ஓய்வு பெறும் வரை அந்த கணக்கில் எத்தனை ரூபாய் சேர்ந்திருந்தது தெரியுமா? அது கிடக்கட்டும்... நமக்கெதற்கு?

'ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும், எங்கே விழுகிறோம் என்று பார்க்காமல், எங்கிருந்து தவறினோம் என்று ஆராயத் தொடங்கினால் வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்'

பி.கு. : மடலில் வந்த ஒரு ஆங்கிலக்கதையின் தமிழாக்கம்

1 December 2008

உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும்

கலைச்செல்வி அழகான இளம் பெண். இப்போது தான் ஒரு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தமிழ் இலக்கியம் சேர்ந்திருக்கிறாள். மகிழ்ச்சியாய் போய் கொண்டிருந்த அவள் வாழ்வில் திடீரென ஒரு இடி. வெகு காலமாய் நோய்வாய் பட்டிருந்த அவளது தாயார் காலமானார்.

செல்விக்கு எல்லாமும் சூனியமாகிவிட்டதாகத் தோன்றியது. பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருந்தாள்.எல்லோரும் அவளுக்கு ஆதரவாக பேசிப் போனார்கள். ஆனால் அவள் மனம் அமைதியடையவே இல்லை. இறுதிச்சடங்கிற்கு வந்த ஒரு இளைஞனை அவளை நோக்கி வந்தான். செல்வி அவனை இதற்கு முன் பார்த்ததில்லை. அவளருகில் வந்து சில ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு போனான்.

அவன் அழகும், வசீகரமும் அவன் பேச்சும் அவளை வெகுவாய் கவர்ந்தது. தன் கனவு நாயகன் அவன் தான் என்பதை உணர்ந்தாள்.ஆனால் அவள் அப்படி உணரும் முன்பே அவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்று தான். 'அவள் வீட்டில் நடந்த இறப்புக்காக அவன் வீட்டிற்கு வந்தான்'
செல்வி கிட்டத்தட்ட அவன் மீது பைத்தியமே ஆகிவிட்டாள். அவனை எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்று தீராத ஆசை கொண்டாள்

அடுத்த ஒரு வாரத்தில் செல்வி அவள் கூடப்பிறந்த அக்காவை கொன்றுவிட்டாள். அவள் வீட்டில் மீண்டும் ஒரு இறப்பு.

செல்வி எதற்காக தன் அக்காவை கொன்றாள் ?





















பதில் :
இந்த இறப்பின் போதும் அவன் வருவான் என்று செல்வி நினைத்தாள். அதனாலேயே அவள் அக்காவை கொன்றாள். இப்படியாக நீங்களும் நினைத்திருந்தால் உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும். அமெரிக்காவில் இப்படி தான் நிறைய பேருக்கு மனப்பிறழ்வு இருப்பதை கண்டுப்பிடிப்பாங்களாம். வேறு ஏதேனும் முடிவை நினைத்திருந்தால் நீங்க ரொம்ப நல்லவுங்க :)

பி.கு : நீங்களும் செல்வி மாதிரியே சிந்திருச்சுருந்தா, தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். எதுக்கும் உங்க கிட்ட நாங்க உஷாராவே இருந்துக்குறோம்

(மடலில் வந்து ஒரு தகவலின் தமிழாக்கம்)