18 May 2007

தினந்தோறும்...

சிண்டை பிய்த்துக்கொள்ள‌வைத்த‌
சிக்க‌லான‌ புதிரின் விடை
சிக்கிவிட்ட‌ ச‌ந்தோச‌ம்

சுட்டெரித்தாலும்
முகத்தில‌ரையும் சுத்த‌மான‌ காற்று

வம்பலைகளை துரத்தும் காதோர‌
பண்பலை

மடியிலாடி காற்றிலாடி க‌ருத்திலாடி
ப‌ட‌ப‌ட‌க்கும் க‌விதைத் தொகுப்பு

நாள் முடியும் வேலையிலும்
அக்க‌ண‌ந்தான் கூடுடைத்த‌ பட்டாம்பூச்சிக‌ளாய்
தெருவிலாடும் சிறார்கூட்ட‌ம்

அலுவ‌ல் சுமைக‌ளின்
அலுப்பை காட்டாது
வாச‌லில் காத்திருக்கும் தாய்

புர‌ண்டு ப‌டுத்தாலும் அருகில்வ‌ர‌
முர‌ண்டு பிடிக்கும் தூக்க‌ம்
அவ‌ச‌ர‌மாய் எட்டிப்பார்க்கும்
அதீத‌ சுகம்

ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வ‌லிகொண்ட‌ பிர‌யாணத்தை
ஒவ்வொரு நாளும்

3 May 2007

சென்னை 600028

சென்னை 600028
எங்க ஏரியா, உள்ளே வராதே

வாழ்க்கையில் எப்போதாவது ஸ்டிக் கிரிக்கெட் விளையாடியிருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

காதல், அடிதடி, குத்துவெட்டு, பஞ்ச் டயலாக், ரத்தம் என்ற தமிழ் திரைப்படங்களின் சராசரி எல்லையை மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒரு இளைஞர் கூட்டத்தை பற்றிய படம் தான் இது. இளைஞர்கள் பற்றிய படம் என்றாலும் ஏற்கனவே வந்த சில படங்கள் போல் ஆபாசம் இல்லை என்பது ஒரு ஆறுதலான் விசயம்
ரேடியோ மிர்ச்சி சிவா, ப்ரேம்ஜி, 'பகவதி' ஜெய், அர்விந்த் சித்தார்தா , இயக்குனர் அகத்தியனின் மகள் என சில தெரிந்த முகங்களும் சில புதுமுகங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கும் படத்தில் தெருக் கிரிக்கெட் தான் கதைக்களம்

படத்தில் காட்சிகள் பெரும்பாலும் இயல்பாகவே இருக்கின்றன‌. நகைச்சுவைக்கூட மிக இயல்பாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நினைத்தாலும் சிரிக்க‌ வைக்கும் ந‌கைச்சுவைக‌ள் நிறைய‌ உண்டு ப‌ட‌த்தில்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலம் ஆகிவிட்டவை. அருமையாக படம்பிடித்தும் இருக்கிறார்கள்.

பெரிதாம் மெஸேஜ் எதுவும் இல்லை. அதே ச‌மய‌ம் விர‌ச‌மில்லாம‌ல், நன்றாக‌ பொழுதுபோக‌க் கூடிய‌ ஒரு ப‌ட‌ம். ந‌ண்ப‌ர்க‌ளோடு பார்க்க‌ சிறந்த‌ ப‌ட‌ம்

ஒரு நல்ல படத்தை தந்தமைக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் பாராட்டுகள்

சென்னை 600028
இந்த‌ ஏரியாவுக்கு எல்லாரும் ஒரு தபா விசிட் குடுக்க‌லாம்ப்பா