26 December 2007

சொல்லாத பிறந்த நாள் வாழ்த்து


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?



இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

13 December 2007

இந்தியா ஏழை நாடா ? இந்தக் கோவிலை பாத்துட்டு சொல்லுங்க...

(படம் சரியா தெரியலைனா கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்க)http://picasaweb.google.com/prem.kavithaigal/VelloreGoldenTemple/photo#5143303261545000658

இந்தியா ஏழை நாடுன்னு யாருங்க சொன்னா? இங்க பாருங்க, எவ்வளவு தங்கங்கத்தை வாரி தெளிச்சிருக்காங்கன்னு...

மேலே இருப்பது வேலூர் ஸ்ரீபுரம் மகாலட்சுமி ஆலயம்

அந்தக் காலத்தில் மன்னர்களிடம் நிறைய காசு இருந்தது. நிறைய கோவில் கட்டினாங்க. மேலும் கலை நணுக்கங்கள் நிறைந்த கோவில்கள் கட்டி கலையையும், பக்தியையும் வளர்த்தாங்க.

ஆனா இப்போ அடிப்படை தேவையே பூர்த்தியாகாம பல மக்கள் இருக்கும்போது, புதுப்புது கோவில்களும், இத்தனை தங்கப் பூச்சுகளும் தேவைதானா?

சரி, அவ்வளவு பக்தி இருக்குதுன்னா பாழடைந்த நிலையில் எத்தனையோ பழைய கோவில்கள் இருக்கு. அதையெல்லாம் புதுப்பிக்கலாமே.

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பக்தி இருக்க வேண்டிய இடத்தில் பகட்டு இருக்க வேண்டுமா?

11 December 2007

நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு போகிறீர்களா? - உஷார் !

சில நாட்களுக்கு முன் சென்னை நங்கநல்லூரில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. சில காலங்களாகவே கோவில்களில் மக்களும் நிர்வாகமும் அடிக்கும் லூட்டிகளால் பெரிய கோவில்களுக்கு எதுக்கும் செல்லாமல் இருந்தேன். அப்படியிருக்க இந்த கோவிலுக்கு சென்றுவந்த பின் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே சும்மா அதிருது!!



கோவிலில் நுழையும் போதே எல்லோரும் கோவிலுக்குள் இருக்கும் கடையில் அர்ச்சனை பொருட்கள் மற்றும் குங்குமம் வாங்க வலியுறுத்துப்படுகிறார்கள். ஒரே குடும்பமாக இருந்தாலும் எல்லோரும் தனித்தனியே அர்ச்சனை செய்ய வேண்டுமாம்.ஒரே அர்ச்சனைத் தட்டுக்கு நிறைய பேர்கள் சொல்லப்போனால், 'செல்லாது, செல்லாது' என்கிறார்கள்.



இந்தக் கோவிலுக்குள் கட்டாயம் போகத்தான் வேண்டுமா என்று வீட்டில கேட்க, இவ்வளவு தூரம் வந்துவிட்டு தரிசனம் செய்யாமல் போகலாமா என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்க கோவிலுக்குள் நழைந்தேன். ஆண்கள் உள்ளே செல்லும்போதே சட்டையை கழற்றிவிட்டு தான் செல்ல வேண்டுமாம் (என்ன ஒரு உவமானம். கொஞ்சம் ஏமாந்தா எல்லாத்தையும் உருவிட்டுத்தான் விடுவாங்க போல)



இராஜராஜேஸ்வரியின் சன்னிதி உயரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது படிகளுக்கு மேல் ஏறிப்போனால் தான் சாமியை பார்க்க முடியும். ஆனால் குறைந்தப்பட்சம் அர்ச்சனையோ, அல்லது குங்குமப்பொட்டலமோ இருந்தால் தான் சன்னிதிப் படிகள் ஏறவே அனுமதிப்படுவீர்கள்.



குங்குமப் பொட்டலமும் கோவிலில் தான் வாங்கப்பட வேண்டுமாம். ஒரு சின்ன குங்குமப்பொட்டலத்தின் விலை ரூ.10. வாங்கிக்கொண்டு சன்னிதிக்கு போகுமுன் அதை பிரிக்காமலேயே உண்டியலில் போட வேண்டுமாம்

(மறுசுழற்சி முறையை எவ்வளவு அழகாக விளக்குகிறார்கள் பாருங்கள்)



இதில் 'வெளிக்குங்குமம் போட்டால் குடும்பத்திற்கு கேடு' என்று அறிவிப்புப் பலகை வேறு.



என்னடா இது ? கோவிலா இல்லை வியாபாரத்தளமா என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் இன்னொரு அறிவிப்புப் பலகையும் கண்ணில் பட்டது. 'இது தனியார் கோவில். நிர்வாகத்தின் முடிவே இறுதியானது'



என்னத்த சொல்ல????

10 December 2007

FAKE போடுவது பற்றி "வெட்டிப்பயல்" எழுதத்தான் வேண்டுமா?

வெட்டி போன வாரம் 'மென்பொருள் துறையில் Fake போடுவது எப்படி? - 1 ' ன்னு ஒரு பதிவு போட்டுருந்தார்.

கூடவே இந்த சமாசாரத்தில் சண்டை போட அவகாசம் இல்லைன்னு சொல்லியிருக்காரு. அதுனால பின்னூட்டம் இடாம இங்க ஒரு பதிவாக இடுகிறேன். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆச்சே.... விட்டு பிடிப்போம்
பாலாஜி,
என் மனதில் தோன்றும் முதல் கேள்வி, இந்தப் பதிவு அவசியம் தானா? 'சாப்டுவேர் இஞ்சினீயர் ஆகலாம் வாங்க'ன்னு ஒரு நல்ல தொடரை பதிவிட்ட நீங்கள் இப்படி ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் தான் என்ன?

FAKE போடுவது சரியா தவறா என்பதைத் தாண்டி இந்த பதிவை இட்டது சரியா தவறா என்ற கேள்வி தான் எனக்குள் ஓங்கி நிற்கிறது.

FAKE போடுவது என்பது "நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்ளும் திட்டம்" அன்றி வேறில்லை

பெரிய நிறுவனங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்துச் சென்றால் எப்படியும் கண்டுப்பிடித்து துரத்திவிடுவார்கள். எங்க நிறுவனத்தில் எல்லாம் அப்படிப்பட்டவர்களின் குட்டு வெளிப்படுகையில், வெகு சொற்ப நேரத்திலேயே காரியங்கள் முடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். அவமானமும் மீண்டும் ஒரு வேலை தேடும் சூழ்நிலையும் தான் மிச்சம்.

சின்ன நிறுவங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்தாலோ வேறு வகையில் சிக்கல். முக்கால்வாசி நேரங்களில் பொய் தகவல்கள் அளிப்போர் சுமாரான படிப்பாளிகளாகவே இருப்பார்கள். புதிதாய் வேலை சேரும் இடத்திலோ கொடுக்குப்படும் வேலை பளு தலைக்கு மேல் அழுத்தும். அப்போது நீங்கள் புதிதாய் படித்து தெரிந்துக்கொள்ள சமயம் இருக்காது. அந்த சமயம் நீங்கள் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தால் எப்படியும் குட்டு வெளிப்பட்டுவிடும்

இந்தியாவில் இன்றைய அளவில் புதிதாய் படித்து பட்டம் பெறுபவர்களுக்கே ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. FAKE போடவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அப்படி இருப்பினும் இந்த பதிவு அவசியமில்லை என்பது என் கருத்து.....

நெருடியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

புதுவை பதிவர் பட்டறை திசம்பர் 9, 2007 அன்று இனிதே நடைப்பெற்றது. புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக நடைப்பெற்ற இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் கலந்துக்கொண்டனர்.

சென்னை பதிவர் பட்டறையை நடத்திய குழுவிலிருந்தும் நண்பர்கள் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்

மாலை நடைப்பெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சட்டமன்ற தலைவர் திரு.ராதாகிருஷ்ணனும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ அவர்களும் கலந்துக்கொண்டார்கள்.

திரு. பொன்னவைக்கோ அவர்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் & பல்கலைக்கழகங்களின் சார்பாக தமிழில் பொறியியல் பாடங்கள் குறித்தும் அருமையாக பேசினார்.

தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை நிறுவியதில் பெரும் பங்களித்தவர் திரு. பொன்னவைக்கோ. இரத்தின சபாபதி என்ற இயற்பெயரை தமிழ்படுத்தி தாயார் பெயரான பொன்னி + அவைக்கோ (சபாபதியின் தமிழாக்கம்) சேர்த்து பொன்னவைக்கோ ஆனவர்.

'தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றைப் பற்றி பேசுகையில் தமிழன் தான் தமிழை மதிக்க மறுக்கிறான் என்று கூறினார். பெற்றவளை பிள்ளைகள் தாய்மொழியில் அழைத்தால் அவமானமாக கருதுகிறோம், கோயில்களில் தமிழில் பூசை செய்தால் பலிக்குமா என்று அஞ்சுகிறோம் என்று குற்றஞ்சாட்டினார். தமிழை ஆங்கிலங்கலக்காமல் பேசிப் பழக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


குட்டு : தமிழ் ஆர்வலர், தமிழில் தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துபவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் அமைப்பாளர் என்று தமிழுடன் பெருந்தொடர்புக் கொண்டவர் கொஞ்சம் தமிழர்களின் கலாச்சார உடையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.




ஆங்கிலம் பேசுவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள், சமிஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்பவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சொன்னவரே தமிழர்கள் கூடும் ஒரு கூட்டத்திற்கு 'கோட்டு சூட்டு டை' அணிந்து வருவதை கௌரவமாக நினைத்ததை என்னவென்று சொல்லுவது ?

9 December 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்


4 December 2007

காத‌ல் கார்த்திகை


விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;
தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!

சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌


உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்

புத்தாடைய‌ணிந்த‌ பூரிப்பில்
நீ உல‌வும் அழ‌கைக் காண‌வேனும்
நாள்தோறும் வாராதா
ஏதேனும் ப‌ண்டிகை

19 November 2007

கலைஞர் தொலைக்காட்சியும் நமீதாவும்

கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' அப்படின்னு ஒரு நடன நிகழ்ச்சி. அட இதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்து இப்போது பல தமிழ் தொலைக்காட்சிகளில் வருவது போன்ற ஒரு நடனப்போட்டி தான். அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பரப் பலகைகளிலேயே 'நமீதா வழங்கும் மானாட மயிலாட' என்று குறிப்பிடுகிறார்கள். முன்பு நடுவர் குழுவில் சிம்ரன் இருந்தபோது 'சிம்ரன் வழங்கும்' என குறிப்பிட்டு இருந்ததாய் நினைவில்லை.

'மானாட மயிலாட' என்ற தலைப்பை திரு.கருணாநிதி அவர்களே தேர்வு செய்ததாய் செய்திகள் வந்தன. அப்படி இருக்க இந்த நிகழ்ச்சியில் நமீதா இருப்பதுப் பற்றிக்கூட கருணாநிதி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புவோம்

அட, நமீதா அந்த நிகழ்ச்சியில் இருந்தால் என்ன என்கிறீர்களா? அட நமீதா நடுவரா இருந்தால் என்ன இல்லை நமீதாவின் பாட்டி இருந்தால் நமக்கு என்ன?

கொடுமை அவர் பேசும் தமிழ் தான். இரண்டு வயது பிள்ளைக்கூட இதைவிட சிறப்பாக பேசும். அட, கோர்வையாகக் கூட பேச வேண்டாம். ஒரு சில வார்த்தைகள் பேசவே தடுமாறுகிறார். கேட்கவே காது கூசுகிறது. இது ஒன்றும் நேரலை இல்லையே. பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி தானே? அப்படி இருக்க நிகழ்ச்சியின் இயக்குனருக்கோ நிர்வாகத்துக்கோ இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. நிகழ்ச்சித் தலைப்பு மட்டும் அழகுத்தமிழில் இருந்தால் போதுமா? உள்ளே நடக்கும் தமிழ்க்கொலைகள் பற்றி கவலையில்லையா?

'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியானது 2004 ஆண்டில். தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியுமா ஒரு நடிகை தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்? அவ்வளவு தூரமா அக்கறையில்லாமல் இருப்பார்கள்? அது சரி, தமிழ்நாட்டில் பிறந்த நாயகிகள் மட்டும் தமிழிலேயேவா பேசித்தொலைக்கிறார்கள்... 'கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடும் ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்' என்ற கதை தான்

தமிழுக்கென்று கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் வருவதாய் தெரியவில்லை. அது கிடக்கட்டும், குறைந்தப்பட்சம் தமிழை கொலை செய்யாமல் இருந்தாலே போதுமென்று தோன்றுகிறது.

பி.கு : நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்துப் பார்ப்பது எல்லாம் இல்லை. நேற்று வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் புண்ணியத்தால் (கிர்ர்ர்ர்) இதைப் பார்க்க நேர்ந்தது.

15 November 2007

கணிணித்துறையினரைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்

இந்த ஐ.டிக்காரர்கள் தொல்லை இருக்கே.... தாங்க முடியல. இவனுங்களால தான் வீட்டு வாடகை உயர்ந்துப் போச்சு. ஆட்டோ விலை எல்லாம் கண்ணாபின்னான்னு ஏறிப்போச்சு, கலாச்சாரம் சீரழிஞ்சுப் போச்சு...

இப்படி சொல்றது இப்போ ஒரு ட்ரண்டாவே ஆயிடுச்சு

இப்படி புகையும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளும் ஒரு விசயம். ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க? பேசாம, எல்லோரும் அரசுக்கு ஒரு மடல் எழுதுங்க. இனி இந்தியாவில் ஐ.டி தொழிலே இருக்கக்கூடாது. சுத்தமா ஒழிச்சுக்கட்டனும்னு எழுதுங்க

யாரும் ஐ.டி மாப்பிள்ளைக்கு பொண்ணு குடுக்காதீங்க

யாரும் ஐ.டிக்காரனுக்கு வீடு குடுக்காதீங்க

அட, யாரும் உங்க வீட்டுப் பிள்ளைகளை கணிப்பொறியியல் படிக்க வைக்காதீங்கய்யா

அத விட்டுட்டு ஆட்டோக்காரன் காசு அதிகமா கேக்குறான்.... அதுக்கு ஐ.டிக்காரன் தான் காரணம் அப்படின்னு ஆரம்பிச்சு காக்கா என் மேல எச்சம் போட்டுருச்சு... அதுக்கும் ஐ.டிக்காரன் தான் காரணம்னு வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருக்காதீங்க

ஒரு சிலர் மட்டும் செய்யும் தவறுகளை வைத்து ஒரு பிரிவினரையே சாடுவாது எவ்வகையில் பார்த்தாலும் அறிவீனம் தான்

இது போன்று வீண் வம்பு பேசும் மக்களை புறக்கணித்து விட்டு வேலையில் மூழ்கிக்கிடக்கும் கணிணித்துறைக்காரர்களை கண்டிப்பாக கட்டி வைத்துதான் அடிக்க வேண்டும்!

13 November 2007

கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில்



ராடன் நிறுவனம் & யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித்விராஜ், சந்தியா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் ‘கண்ணாமூச்சி ஏனடா’

கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிகு பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்

ப்ரித்விராஜ் : அவரின் முந்தைய படங்களில் பார்த்தது போலவே இதிலும் மனிதர் பேசுகிறார், பேசிகிறார்…. பேசிக்கொண்டே இருக்கிறார். பல இடங்களில் எரிச்சலும், சலிப்புமே மிஞ்சுகிறது. மத்தபடி அவருக்கு பெரிதாக படத்தில் செய்துவிட எதுவும் இருக்கவில்லை

சந்தியா : பொறியில் அடைப்பட்ட எலிக்குட்டிப் போல் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே திரிகிறார். பாவம், டப்பிங் பேசும் போது என்ன பிரச்சனையோ தெரியவில்லை? மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

சத்யராஜ் & ராதிகா : சத்யராஜ் ஒரு பொறுப்பான கோபமான காவல்துறையில் பணிபுரியும் அப்பாவாக வலம் வந்திருக்கிறார். ராதிகா ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக வந்து செல்கிறார். நடுவில் கொஞ்சம் பெண்ணீயமும் பேசுகிறார்.

ஸ்ரீப்ரியா : நட்புக்காக ஸ்ரீப்ரியா. எனினும் அவர் வந்தவுடன் ஒரு தனி கலகலப்பு வந்துவிடுகிறது படத்தில். அவரும் சத்யராஜீம் அடிக்கும் லூட்டிகள் கலகலக்க வைக்கின்றன. ஸ்ரீப்ரியாவின் டைமிங் மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றிச்சொல்லவா வேண்டும்?

இசை : இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜாவிற்கு என்ன சிக்கலோ? மேலும் பாடல்களின் ஒளிப்பதிவு சுத்த மோசம். மணிரத்னத்தின் மாணவி பாடல்களை இப்படி எடுத்து தள்ளியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. அனேகமாக பாடல்கள் எல்லாமே திரைக்கதையில் திணிக்கப்பட்டே இருக்கின்றன

ஒளிப்பதிவு : ரொம்பவே அழகான ஒளிப்பதிவு. கண்களை பதம் பார்க்காமல், மிக இயல்பாக இருக்கிறது. மலேசியக் காட்சிகள் பளபள என்றால் ஊட்டி காட்சிகளோ குளுகுளு ரகம்.

ப்ரியா.V : முதலில், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. எங்கேயும் நெருடாமல், நல்ல ஓட்டத்தோடுக் கூடிய திரைக்கதை. ஆனால் அதே சமயம் இந்தக் கதையை இன்னும் கலகலப்பாகவும் அழகாகவும் கொடுத்திருக்கலாம். (ப்ரித்விராஜ் பேசுவது தான் கலகலப்பு என்றால், ஆள விடுங்க சாமி)

மணிரத்தினத்தின் மாணவி என்ற காரணத்தினாலும் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் என்பதாலும் ப்ரியாவிடம் கொஞ்சம் அதிகமாவே எதிர்ப்பார்க்கிறோமோ என்னவோ?

அப்புறம் ப்ரியா, படத்தின் பல காட்சிகள் GUESS WHO மற்றும் MEET THE PARENTS படங்களில் வந்துள்ளது போலவே இருக்கிறதாமே?

அப்புறம், கிளைமாக்ஸீக்காக காத்திராமல் எழுந்து வந்துவிடுவது உத்தமம். அப்படி ஒரு இழுவை………. எப்படியும் இது தான் நடக்கும் என்று தெரிந்த ஒரு முடிவை இத்தனை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

18 October 2007

கொலு

நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!


கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்



கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்...
கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று!

14 October 2007

உரக்க சொன்னதில்லை நீ

பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்

வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்

நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்......

காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்

20 August 2007

ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை : பதிக்காது போன‌ சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்

பதிவர் பட்டறை முடிந்து கிட்ட‌ தட்ட மூன்று வாரங்கள் ஆகிப்போச்சு. நடுவில கேமாராவின் டேட்டா கேபிளை காணவில்லை. அப்புறம் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை..... அப்படி இப்படின்னு ஒருவழியா நேத்து தான் புகைப்படங்கள பதிவில் சேர்க்க முடிந்தது.
சொல்லப்போனால், ஒழுங்காய் வந்த படங்கள் மொத்தமாய் ஐந்து தான். சிறப்பான படம் ஒன்றே ஒன்று தான். அத நீங்களே பாத்து தெரிஞ்சுகுங்க......

1. வாசலிலேயே வ‌ர‌வேற்கும் பேன‌ர்
என்ன வரவேற்பு? என்ன வரவேற்பு? :)




2. அலைமோதும் ஆர்வ‌ல‌ர்க‌ளின் கூட்ட‌ம்





3. வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ச‌மூக‌ அக்க‌றை




4. HTML ப‌ற்றி செந்த‌ழ‌ல் ர‌வி (புள்ளைக்கு தான் எவ்வ‌ள‌வு பொறுப்பு ;) )



5. ப‌ட்ட‌றை முடிந்து பிரியும் த‌ருண‌ம்


13 August 2007

நட்பின் நட்பு - 2

ஆரம்பத்திலிருந்து கடைசிவரை
எல்லாம் ஒழுங்காயிருக்கிறதா?

வழக்கம்போல குசலம்விசாரிப்பு
குறையில்லாமல் உள்ளதா?

அங்கங்கே கவனிக்கப்படாமல்
உள்ளனவா சில சந்திப்பிழை,
எழுத்துப்பிழை, பொருட்பிழைகள்?

மரியாதை குறையாமல்
வழங்கப்பட்டிருக்கிறதா?
எழுத்துக்களின் நேர்த்தி எவ்விதம்?

சுருங்கச் சொல்லி விளக்கும்
விதம் கையாளப்பட்டுள்ளதா?

உடனடியாகப் பதில்வரும்
யுத்தி உள்ளிருக்கின்றதா?

பயனில்லாத விஷயங்கள்
அலசப்பட்டிருக்கின்றவா?

இப்படி எவ்விதக் கவலையும்
ஒருபோதும் இல்லாது
எப்போதும் களிப்புடன் செல்கிறது
இரு நட்புள்ளங்களுக்கிடையேயான
உள்ளார்ந்த அன்புடன் கூடிய
உணர்வுப்பகிர்தலுக்கான மடல்!!

-
நட்பு மடல்
ராகவன் (அ) சரவணன்
க‌விதை கேளுங்க‌ள்

10 August 2007

நட்புக்காலம் - 2

எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த நட்பு கவிதைகள் சில...

கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

-
கவிஞர் அறிவுமதி

(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)

நீ வயசுக்கு வந்துபோது
தடுமாறிய‌
என் முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை காப்பாற்றியவள் நீ
-
கவிஞர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)
எங்கு...
எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்று தெரியாத
எல்லைகளற்ற நெடுவானம்
நம் நட்பு.

- எழில்

9 August 2007

இப்படிக்கு நட்பு - 4



நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்



முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது...



உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று

8 August 2007

இப்படிக்கு நட்பு - 3



முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,

பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,

அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,

உன் அருகாமை இல்லாத‌
பொழுதுகளில் தவித்துப்போனது,

இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!

இப்படிக்கு,
நட்பு

7 August 2007

நட்புக்காலம் - 1

பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

***

நம்மைப் பற்றிய‌
ஆசிரியர்களின்
அய்யங்களுக்குத்
துணையாய்
நூல்களை
படபடக்கச் சொல்லிவிட்டு
இயல்பாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்

***

அடிவானத்தை மீறிய‌
உலகின் அழகு என்பது
பயங்களற்ற இரண்டு
மிகச்சிறிய இதயங்களின்
நட்பில் இருக்கிறது

-
பாவலர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலங்கள்)

பதிவர் பட்டறை : ஒரு ஆறிப்போன பார்வை

சென்னை பதிவர் ப‌ட்ட‌றை ஆகஸ்ட் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று இனிதே நடந்து முடிந்தது. உடனுக்குடன் பட்டறை பற்றிய செய்திகளை ஏற்கனவே மக்கள் தந்துவிட்டதால் இது ஒரு 'ஆறிய' ப்போன‌ பார்வை.

மாலன், 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, ஆசிப் மீரான், 'எ-கலப்பை' முகுந்த், பொன்ஸ், வினையூக்கி, பினாத்தல் சுரேஷ், ஜே.கே., வ.வா.சங்கத்தின் சிங்கங்கள் என்று ஏகப்பட்ட பரிச்சயமான பெயர்களின் முகங்கள் எனக்கு அப்போது தான் பரிச்சயமாயின.

தகடூர் கோபி, 'முத்த'தமிழ் வித்தகர் நந்தா, நவீன் பிரகாஷ் எல்லாம் ஏற்கனவே அறிமுமாயிருந்த‌ பதிவர்கள். அவ்வப்போது அவர்களுடன் மொக்கை போடவும் நேர்ந்தது.

பட்டறை ஆரம்பித்ததிலிருந்து நிகழ்வுகளை ஒருவர் வளச்சு வளச்சு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்... அட, அது நம்ம அருள்குமார் ;)

கணித்தமிழ் வந்தபின் உருவான எழுத்துருக்கள் பற்றியெல்லாம் ஒரு சின்ன அறிமுகத்தோடு, எ~கலப்பை பற்றி விளக்கினார் முகுந்த்

TAB, TAM போன்ற பல்வேறு எழுத்து வடிவங்களில் உள்ள வலைத்தளங்களை பிரச்சனையின்றி தன் நீட்சி மூலம் யூனிக்கோடில் படிப்பது எப்படி என்று விளக்கினார் கோபி

(சந்தடி சாக்கில், தன் கணிணியில் சானியா மிர்ஸா படத்தை சரியாக தரவிறக்கம் செய்ய முடியாததற்கு ஏதாவது செய்ய முடியுமா என்ற பெரிய சந்தேகத்தை கேட்டார் செந்தழலார்

ச‌மீப‌கால‌மாக‌ த‌ன் இம்சை வ‌லைப்பூவின் மூல‌ம் மொக்கை ம‌ட்டுமே போட்டுக்கொண்டிருந்த‌ செந்த‌ழ‌ல் ர‌வி ப‌ட்ட‌றையில் ந‌ல்ல‌பிள்ளையாக‌ வ‌ந்திருந்த‌ புதிய‌வ‌ர்க‌ளுக்கு HTML ப‌ற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ந‌ல்ல‌ வேளையாக‌ ப‌திவுக‌ளில் மொக்கை போடுவ‌து எப்ப‌டி என்று அவ‌ர்க‌ளுக்கு சொல்லிக்கொடுக்க‌ வில்லை. த‌ப்பிச்சோம்டா சாமி !

வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ச‌மூக‌ அக்க‌றை ப‌ற்றி விவ‌ரித்தார் ர‌ஜினி ராம்கி
வ‌லைப்ப‌திவில் வித்தியாச‌மான‌ முய‌ற்சிக‌ள் என்ற த‌லைப்பில் 'ச‌ற்றுமுன்','த‌மிழூற்று' மற்றும் ப‌ல‌ கூட்டுப்ப‌திவுக‌ள் ப‌ற்றி விள‌க்கினார் பொன்ஸ்

வ‌.வா.ச‌ங்க‌த்தின் சிங்க‌ங்க‌ள் எல்லாம் 'ச‌ங்க‌த்தின்' சின்ன‌ம் பொறித்த‌ டி.ச‌ட்டைக‌ள் அணிந்து அர‌ங்க‌ம் முழுவ‌தும் சுற்றித்திரிந்து க‌ர்ஜித்துக் கொண்டிருந்த‌ன‌ர்

புதிதாய் 100 பேரையாவ‌து வ‌லைப்ப‌திய‌ வைத்துவிட்டால் அது இந்த‌ ப‌ட்ட‌றையின் வெற்றியாக‌ இருக்கும் என்று த‌ன் முடிவுரையில் குறிப்பிட்டார் பால‌பார‌தி. ம‌திய‌த்திற்கு முன்பாக‌வே சுமார் 115 வ‌லைப்ப‌திவ‌க‌ளை புதிதாய் வ‌ந்திருந்த‌ ந‌ப‌ர்க‌ளுக்காக‌ ப‌திவு செய்த‌தாய் ஒரு ப‌ட்சி சொல்லிற்று.

எல்லாரையும் வ‌ள‌ச்சு வ‌ளச்சு போட்டா எடுத்தேன். ஹீம்... கேம‌ராக்கு எட்டுன‌து க‌ணிணிக்கு எட்ட‌லை. (டேட்டா கேபிள‌ காணோம்பா) :(

வ‌ந்திருந்த‌ ஆர்வ‌மான‌ கூட்ட‌த்தை பார்க்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌ட்ட‌றையின் நோக்க‌ம் பெரித‌ள‌வுக்கு நிறைவேறிய‌து என்றே சொல்ல‌ வேண்டும்.

ப‌ட்ட‌றையை ந‌ட‌த்திய‌ அத்த‌னை பேருக்கும் ந‌ன்றிக‌ளும் வாழ்த்துக்க‌ளும்.

வாழ்க‌ த‌மிழ் ! வ‌ள‌ர்க‌ ந‌ல்ல‌ த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் !

பதிவர் பட்டறை : இந்தியன் எக்ஸ்பிரஸீம் என் புகைப்படமும்

மேல் தளத்தில் நடந்துக்கொண்டிருந்த செயல்முறை விளக்கக்கூடத்தில் வினையூக்கி புதியவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ளது

ஹி ஹி ஹி... நானும் அந்த படத்தில் இருக்கேன் :)



நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
http://epaper.newindpress.com

6 August 2007

நட்பின் நட்பு - 1

எங்கோ ஒரு
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.

அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?

***

செல்பேசியில்
சேர்ந்திருக்கும் எண்களை
கடக்கையில் தோன்றும்
பழைய நண்பர்களின்
முகம்.

அழைக்கலாமா என
எத்தனிக்கையில் தடுக்கும்
பால்ய குற்றங்களின்
உணர்வு.

-
அ.பிரபாகரன்
சொல்லிய வண்ணம் செயல்

3 August 2007

இப்படிக்கு நட்பு - 2


ப‌ள்ளியில் தான் தொட‌ங்குகின்ற‌ன அனேகம் ந‌ட்புக‌ள். அந்த நட்புக்கு என்றுமே நீங்காத இடம் உண்டு நெஞ்சில். முதன் முதலில் பிரிவு என்ற சொல்லை சந்திப்பதும் அந்த நட்பு தான். பள்ளி தான் உலகமே என்று நம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களை பிரித்து உலகின் வெவ்வேறு மூலைகளில் வீசிவிடுகிறது காலம். ஆசைக்கு த‌க்க‌ப‌டி, ஆஸ்திக்கு த‌க்க‌ப‌டி ஆளுக்கு ஒரு திசை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோம்........ சுழ‌ன்று கொண்டே இருக்கும் உல‌க‌த்தில் என்றேனும் ஒரு நாள் மீண்டும் சேருவோம் என்ற‌ ந‌ம்பிக்கையோடு. ப‌தினான்கு ஆண்டுக‌ள் 'பெத்தி செமினேர் மேனிலைப்பள்ளி, புதுச்சேரி'யில் படித்த காலங்களையும் நண்பர்களையும் நினைத்து.....

இப்ப‌டிக்கு ந‌ட்பு - 2



ஒளிப்புகா அடர்க்கானில்
ஒளிந்திருந்தோம் சில காலம்
களித்திருந்தோம் நன்றாய்
அக்கானிடையே ஒன்றாய்

ஆலென்றாலும் பனையென்றாலும்
ஆரும் பிரித்துப்பார்த்தில்லை - கொடுங்
காலம் வரும்வரை நம்காட்டில்
அறுவடையும் நடந்ததில்லை

வசந்தம் மட்டுமே வந்த பாதையில்
புயலும் ஒரு முறை வீசிற்று
கசக்கும் நினைவுகளை
இதயத்தில் பதித்துப் போனது

இலையுதிர் காலமென‌
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.

திசைக்கு ஒருவ‌ரென‌
யாவ‌ரும் பிரிந்தோம்;
ஆசைக்கு தக்க‌ப‌டி
என்ன‌வோ ஆனோம்!

இனி எக்க‌ண‌ம் ச‌ந்திப்போமோ?
எவ்வ‌ண்ண‌ம் ச‌ந்திப்போமோ?

எப்படியும்,
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
ப‌ட‌படத்துக்கொண்டு தான் இருப்போம்
ப‌ழைய‌க் காட்டை நினைத்து...

2 August 2007

தோழிமார் க‌தை

என்னைக் க‌வ‌ர்ந்த, க‌விஞ‌ர் வைர‌முத்துவின் அழகான‌ ந‌ட்புக் க‌விதை ஒன்று.





தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையிலே
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசு
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
. . .



பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான் கத்த,
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடு சேர்த்த நெனவிருக்கா

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதித்தோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஒடானோம்
இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலி கட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்


போன வெருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு...


-வைரமுத்து

1 August 2007

இப்ப‌டிக்கு ந‌ட்பு - 1

உலகெங்கும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமும் நட்பு வாரமாய் கொண்டாட படுகிறது.
அவ்வழியே இந்த பயணத்திலும், இந்த ஆகஸ்ட் மாதம் நட்புத் திருவிழா.

வாருங்கள், நட்பைக் கொண்டாடுவோம்; வ‌ழ‌க்க‌ம்போல்!

இப்ப‌டிக்கு ந‌ட்பு - 1



க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

17 July 2007

காத‌லென‌ப்ப‌டுவ‌து....



காதல் களவு;
கற்றதும் மறந்தது
மற்றவைய‌னைத்தும்!



காதல் விடம்;
அவ்விடத்தை முறிக்கும் விடம்
கிடைக்காமலேயே போகட்டும்.



காதல் ஆயுள் தண்டனை;
மிச்சமிருக்கும் சென்மங்களையும்
இப்போதே வாழ்ந்துவிடும்
ஏற்பாடுகள் உண்டா?




காதல் மாயை;
ரசிக்கும் மனமோ குழந்தை
ஆராய்ந்து பார்க்க ஏது வசதி?

28 June 2007

எட்டுமோ எட்டாதோ

அருட்பெருங்கோ அவர்களின் அழைப்பின் பேரில் இதோ நானும் 8 போட பார்க்கிறேன்

1. தமிழ் மொழி எனது சுத்தமான 'தாய்'மொழி. அது என்ன சுத்தம்னு கேட்டீங்கன்னா, நான் பள்ளிக்கூடத்தில் தமிழை மொழிப்பாடமாக படித்ததே இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலமும் இந்தியும் தான். அம்மா தான் முழுமுதல் தமிழ் ஆசான். இப்போ சுமாரா தமிழ் எழுதுறேன்னு நினைக்கிறேன். இன்னும் இந்த ஒற்று, மரபுக்கவிதைகள், இலக்கணம் போன்ற சமாச்சாரங்கள் தான் ஒழுங்கா வரல‌

2. கல்லூரி முடிக்கும் வரை அனேகமாக என் வகுப்பை தாண்டி வேறு யாரையும் அவ்வளவாக தெரியாது. நானாக சென்று யாரிடமும் பேசவும் தயங்குவேன். இந்த நிலைமையை தலைக்கீழாக மாற்றியது அலுவலக வாழ்க்கை, அதுவும் குறிப்பாக பெங்களூரில் வாழ்ந்த காலம். நண்பர்கள் யாரும் உடணில்லாத காரணத்தால் இணையத்தில் அதிகம் உலாவுவேன். அப்படி இணையத்தில், வலைப்பூ உலகில், குழுமங்களில் கிடைத்த நண்பர்கள் பலர்.

3. மொழிகள் கற்க மிகவும் பிடிக்கும். தமிழ், இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு வட்டார வழக்குகள், கொஞ்சம் தெலுங்கு எல்லாம் தெரியும். பெங்களூரில் இருந்த போது அங்கு அன்றாட வாழ்க்கை வாழ‌ தமிழும் இந்தியும் இருந்தாலே ஒப்பேத்திவிடலாம். அலுவலகத்தில் ஆங்கிலம் போதும். அறையிலோ எல்லாமே தமிழர்கள். இருந்தாலும் கன்னட மொழியை ஓரளவு பேசவும் புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.

4. விளையாட்டுகளை விடவும் கலைகள் மீது ஆர்வம் அதிகம். ஓவியம், களிமண் பொம்மைகள் செய்தல், பாட்டு, நாட்டியம் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் எதிலும் உருப்படியாய் ஒன்றும் சாதித்ததில்லை. காரணமும் தெரியும், அக்கறையிண்மை.

5. தோல்விகளை ஒப்புக்கொள்ள‌ தெரியும் எனக்கு. அடுத்த‌வ‌ர் வெற்றியில் ஆன‌ந்த‌ம் காண‌வும் தெரியும் என‌க்கு. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருப்பினும், திற‌மை ப‌டைத்த‌வ‌ர்கள் தொலைக்காட்சி போட்டிகளில் வெற்றிப்பெற்றாலும் ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் விட்டு ச‌ந்தோச‌ப்ப‌டும் வ‌கை நான்

6. இள‌ங்க‌லை க‌ணிப்பொறியிய‌ல் ப‌டித்த‌ (?), அதாவ‌து கல்லூரிக்கு போன‌ (க‌வ‌னிக்க‌, வ‌குப்ப‌றைக்கு அல்ல) மூன்று ஆண்டுக‌ளுமே தேர்வுக்கு ஒரு வார‌ம் முன்பு தான் பாட‌ம் என்ன‌வென்றே பார்க்க‌ ஆர‌ம்பிப்போம். ஏற்க‌ன‌வே எங்க‌ க‌ல்லூரியின் பேரைக் கேட்டாலே, 'அந்த‌க் க‌ல்லூரி ப‌ச‌ங்க‌ளா.... என்று தொட‌ங்கி கேட்ட‌ வார்த்தையிலேயே திட்டுவார்க‌ள். விளையாட்டு, சினிமா என்று ஊர் சுற்றிய எங்கள் வ‌குப்பு தோழர்கள் எல்லோருமே எம்.சி.ஏ நுழைவுத்தேர்வுக்கு ப‌டித்த‌ வித‌ம் ம‌ட்டும் இன்றுமே ஒரு ஆச்ச‌ரிய‌ம்! அனேக‌ம் பேர் இன்றைக்கு சிறந்த‌ மென்பொருள் நிறுவ‌ண‌ங்க‌ளில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

7. பாட‌ப்புத்த‌க‌ங்க‌ள் த‌விர‌ வாசிக்கும் ப‌ழ‌க்க‌மே கிடையாது. அம்புலிமாமா, பூந்த‌ளிர் வ‌கைய‌றாக்க‌ளை கூட‌ அம்மா ப‌டித்து க‌தை சொல்லுவார்க‌ள். இப்போது தான் ச‌மீப‌ கால‌மாக‌ ஒழுங்காக‌ வாசிக்க‌ தொட‌ங்கியுள்ளேன். இணைய‌த்திற்கு தான் ந‌ன்றியை சொல்ல‌ வேண்டும். சில‌ நேர‌ம் தொட‌ர்ந்து வேலை இல்லாத‌ பொழுதுக‌ளில் அலுவ‌லக‌ ந‌ண்ப‌ன் என்ன செய்வதென்று தெரியாமல மிக‌வும் அலுத்து கொள்வான். நான் எப்போதும் க‌ணிணியில் எதாவ‌து ஒரு வ‌லைப்பூவை நோட்ட‌மிட்டுக்கொண்டிருப்ப‌தை பார்த்தால், 'உங்க‌ளுக்கு ஒரு க‌ணிப்பொறியும், இணையமும் இருந்தால் போதும் போலும். எப்படியும் பொழுதை ஓட்டிவிடுகிறீர்கள்' என்று கிண்ட‌லாக‌ சொல்வான்

8. தூக்க‌ம் என்றால் அவ்வ‌ள‌வு விருப்ப‌ம். வேறு வேலை எதுவும் இல்லையென்றால் நன்றாக‌ ப‌டுத்துத் தூங்குவேன். ஆனால ந‌ல்ல‌ வேளையாக‌, தூக்க‌ம் ம‌ற்ற வேலைக‌ளை கெடுப்ப‌தில்லை. இதோ, இப்போது கூட‌ இர‌வு 12:30 ம‌ணிக்கு அம‌ர்ந்து இந்த மொக்கை பதிவை யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் இதை த‌ட்ட‌ச்சிக் கொண்டிருக்கிறேன்

நான் அழைக்க‌ நினைக்கும் எட்டுப் பேர்

1. பிர‌பாக‌ர‌ன்
2. ப்ரியா
3. கென்
4. ந‌ந்த‌குமாரன்
5. க‌விப்ரிய‌ன்
6. ஜி
7. அயன்
8. கருணா

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

13 June 2007

'ஜி'யை க‌லாய்ப்போர் ச‌ங்க‌ம்

வாங்க‌ ம‌க்கா,

நாங்க‌ எல்லாம் சும்மா ஏதாவ‌து கிறுக்கிக்கொண்டிருக்கையில் ' க‌விஞ‌ர்க‌ளாம்' என் சொல்லி எங்க‌ளை ஓட்டிவிட்டு இப்போது அவ‌ர் ம‌ட்டும் க‌விதைப்போட்டியில் ப‌ங்க‌ப்பெற்று பாராட்டு பெற்றிருக்கும் ஜி'யை நாங்க‌ வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிறோம்

இப்ப‌டிக்கு
'ஜி'யை கலாய்ப்போர் ச‌ங்க‌ம்

அட‌, நாங்க‌ நாங்க‌ன்னு சொன்னாலும் இப்போதைக்கு ச‌ங்க‌த்தில‌ நான் ம‌ட்டும் தான் த‌னியா சோபா போட்டு உக்காந்திருக்கேன். இந்த‌ ப‌திவு மூல‌மா நிறைய‌ பேர் சேருவாங்கன்னு எதிர்ப்பார்ப்போம் ;)

அன்புட‌ன் க‌விதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்ற‌ வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

அருட்பெருங்கோ
ஜி
ந‌வீன் பிர‌காஷ்

ஆகியோருக்கு வாழ்த்துக்க‌ள்

18 May 2007

தினந்தோறும்...

சிண்டை பிய்த்துக்கொள்ள‌வைத்த‌
சிக்க‌லான‌ புதிரின் விடை
சிக்கிவிட்ட‌ ச‌ந்தோச‌ம்

சுட்டெரித்தாலும்
முகத்தில‌ரையும் சுத்த‌மான‌ காற்று

வம்பலைகளை துரத்தும் காதோர‌
பண்பலை

மடியிலாடி காற்றிலாடி க‌ருத்திலாடி
ப‌ட‌ப‌ட‌க்கும் க‌விதைத் தொகுப்பு

நாள் முடியும் வேலையிலும்
அக்க‌ண‌ந்தான் கூடுடைத்த‌ பட்டாம்பூச்சிக‌ளாய்
தெருவிலாடும் சிறார்கூட்ட‌ம்

அலுவ‌ல் சுமைக‌ளின்
அலுப்பை காட்டாது
வாச‌லில் காத்திருக்கும் தாய்

புர‌ண்டு ப‌டுத்தாலும் அருகில்வ‌ர‌
முர‌ண்டு பிடிக்கும் தூக்க‌ம்
அவ‌ச‌ர‌மாய் எட்டிப்பார்க்கும்
அதீத‌ சுகம்

ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வ‌லிகொண்ட‌ பிர‌யாணத்தை
ஒவ்வொரு நாளும்

3 May 2007

சென்னை 600028

சென்னை 600028
எங்க ஏரியா, உள்ளே வராதே

வாழ்க்கையில் எப்போதாவது ஸ்டிக் கிரிக்கெட் விளையாடியிருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

காதல், அடிதடி, குத்துவெட்டு, பஞ்ச் டயலாக், ரத்தம் என்ற தமிழ் திரைப்படங்களின் சராசரி எல்லையை மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒரு இளைஞர் கூட்டத்தை பற்றிய படம் தான் இது. இளைஞர்கள் பற்றிய படம் என்றாலும் ஏற்கனவே வந்த சில படங்கள் போல் ஆபாசம் இல்லை என்பது ஒரு ஆறுதலான் விசயம்
ரேடியோ மிர்ச்சி சிவா, ப்ரேம்ஜி, 'பகவதி' ஜெய், அர்விந்த் சித்தார்தா , இயக்குனர் அகத்தியனின் மகள் என சில தெரிந்த முகங்களும் சில புதுமுகங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கும் படத்தில் தெருக் கிரிக்கெட் தான் கதைக்களம்

படத்தில் காட்சிகள் பெரும்பாலும் இயல்பாகவே இருக்கின்றன‌. நகைச்சுவைக்கூட மிக இயல்பாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நினைத்தாலும் சிரிக்க‌ வைக்கும் ந‌கைச்சுவைக‌ள் நிறைய‌ உண்டு ப‌ட‌த்தில்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலம் ஆகிவிட்டவை. அருமையாக படம்பிடித்தும் இருக்கிறார்கள்.

பெரிதாம் மெஸேஜ் எதுவும் இல்லை. அதே ச‌மய‌ம் விர‌ச‌மில்லாம‌ல், நன்றாக‌ பொழுதுபோக‌க் கூடிய‌ ஒரு ப‌ட‌ம். ந‌ண்ப‌ர்க‌ளோடு பார்க்க‌ சிறந்த‌ ப‌ட‌ம்

ஒரு நல்ல படத்தை தந்தமைக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் பாராட்டுகள்

சென்னை 600028
இந்த‌ ஏரியாவுக்கு எல்லாரும் ஒரு தபா விசிட் குடுக்க‌லாம்ப்பா

27 February 2007

இது காதல் காலம் - 10

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும்
என் கவிதைகள் போல!

20 February 2007

இது காத‌ல் கால‌ம் - 9

மல்லியப்பூ முடியயில‌
மனச‌யும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட‌
சிக்கிருச்சே மனசு

சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
க‌லையாத‌ சீல‌க்க‌ட்டில்
க‌லையுதே ம‌ன‌சு

வ‌ள‌வி சிணுங்க‌யில
வ‌ய‌சும் சிணுங்குது
மாட்டுற‌ வ‌ள‌வியூட‌
மாட்டுதே ம‌ன‌சு

சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட‌
க‌ல‌வ‌ர‌ஞ் செய்வியோ?

மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல‌
பக்கமா வந்து பய்யவோ.

13 February 2007

இது காதல் காலம் - 8

காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தன‌வாம் இத்தனை நாளும்.
சேர்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை

இது காதல் காலம் - 7

முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?

இது காதல் காலம் - 6

எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்

10 February 2007

இது காதல் காலம் - 5

எத்தனையோ
காதல் காலங்களைத் தாண்டியும்
புத்தம் புதிதாய் தான் தெரிகிறது
வானதியும்
நானுக்கெழுதும் கவிதையும்!

6 February 2007

இது காதல் காலம் - 4

கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!

5 February 2007

இது காத‌ல் கால‌ம் ‍- 3

திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,

மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது
இந்த காதல் பயணத்தில்தான்!

2 February 2007

இது காத‌ல் கால‌ம் - 2

ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய‌ பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக‌ காத்திருக்கிறேன் நான்!

இது காதல் காலம் - 1

சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
'ஜாக்கிரதை. தேவ‌தை குறுக்கிடும்'
என குறியீடு வைக்க‌ திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!