24 November 2009

அம்மா,அப்பா, வீடு நாய்குட்டி....

அம்மா அப்பா, வீடு நாய்குட்டி..... இதையெல்லாம் விட்டுட்டு வர முடியாது”. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இது தான் என் ஜிடாக்’கில் Status messageஆக இருந்தது. நண்பன் ஒருவன் ‘என்னடா இது? என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது? அலைபாயுதே வசனம். ஷாலினி சொல்ற இந்த வசனத்தை எப்படி மறந்த’ என்று கேட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு ‘அலைபாயுதே’ வில் அப்படி என்ன தானிருக்கிறது என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு சொல், இது தான் பக்கா ரொமாண்டிட்க் படம் என்று ‘Before Sunrise' என்ற படத்தை பார்க்க சொன்னான்.

கதை என்று பெரிதாக ஒன்று இருப்பதாக கூட தோன்றவில்லை. ஒரு சம்பவம் தான். அமெரிக்க நாயகனும் ஐரோப்பா நாயகியும் தொடர்வண்டியில் சந்திக்கிறார்கள். நாயகன் நிறுத்தத்தில் இறங்கும் போது நாயகியையும் இறங்க சொல்லி கேட்கிறான். அன்றைக்கு முழுவதும் ஊர் சுற்றுகிறார்கள், கொஞ்சமாய் காதலிக்கிறார்கள்....இல்லை இல்லை ரொமான்ஸ் செய்கிறார்கள்

இந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகி நாயகனை தன் தோழியாக பாவித்து, எதிரதிரே அமர்ந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்து, நாயகனை பற்றி தான் என்ன நினைக்கிறாள் என்பதை சொல்கிறாள்.

அதே...அதே வாலி படத்தில் அஜீத்தும் ஜோதிகாவும் ஊட்டியில் பேசுவார்களே. அதே போல் தான். ஹி ஹி ஹி

ஆனால் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அதிலிருக்கும் இயல்புதன்மை தான். அவர்கள் உடல்மொழி, வசனங்கள் எல்லாமே அத்தனை இயல்பானவை.

முழு படமும் யூட்யூப்பில் காண கிடைக்கிறது:
http://www.youtube.com/watch?v=LNk4tRlco7Y

Before Sunset

கதை நடந்து 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த sequel. உண்மையிலும் Before Sunrise எடுக்கப்பட்டது 1995ல். 9 ஆண்டுகள் கழித்து 2004ல் தான் Before Sunset வெளிவந்தது.

முதல் பாகம் நிறையவே romantic என்றால் இரண்டாம் பாகம் உளவியல்ரீதியாக நிறைய பேசும்.

படத்தை பார்க்க : http://www.youtube.com/watch?v=djmkher5G_I

விக்கிபீடியாவில் இத்திரைப்படங்கள் பற்றிய நிறைய சுவையான தகவல்கள் இருக்கின்றன
http://en.wikipedia.org/wiki/Before_Sunrise
http://en.wikipedia.org/wiki/Before_Sunset

4 November 2009

தீபாவளி.. ஹோய்.. தீபாவளி

தலைப்ப ஜிடாக்’கில் ஸ்டேடஸ் மெசேஜா வச்சிட்டு இந்த வானவில் வீதி காத்திக்’கிட்ட நான் பட்ட பாடு இருக்கே! அதை தெரிஞ்சுக்க நீங்க முழு பதிவையும் படிச்சுட்டு பதிவின் கீழ் பார்க்கலாம். அல்லது நேரே பி.கு வை மட்டுமே பார்க்கலாம்

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னத்த சொல்ல? எழுதும் கணத்தில் உலக மக்கட்தொகை 679 கோடி. அதில் நானும் ஒருவன். கடைசி வரைக்கும் மனிதனாகவே இருக்க விரும்பும் ஒருவன் என்று வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?
எப்பவும் மறக்க முடியாத தீபாவளி நான் வேலைக்கு சென்ற பிறகு வந்தது தான். 2004 ஆண்டு தீபாவளி. பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். பண்டிகை வந்துவிட்டாலே தமிழகத்துக்கு பேருந்து கிடைப்பது, அதுவும் புதுவைக்கு கிடைப்பது குதிரை கொம்பாக போய்விடும். பத்து நாட்களுக்கு முன்பே, 6 மணியில் இருந்து ஒன்னரை மணிநேரம் வரிசையில் நின்று, கிளம்ப வேண்டிய தினத்தில் நகரப்பேருந்து கிடைக்காமல் காத்திருந்து, கிடைத்த தானியும் நெரிசலில் சிக்கி நிற்க, கடைசி ஒரு கிலோமீட்டரை ஓடியே கடந்தேன். பெங்களூரில் அன்று தான் முதன்முதலில் எனக்கு வியர்த்தது. என்னையும் அறியாமல் ‘அம்மா! அம்மா’ என்று அரற்றிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக பேருந்தும் எங்கோ நெரிசலில் சிக்க, தாமதமாக வருமென சொன்னார்கள்.

எல்லோருக்கும் புத்தாடை வாங்கியிருந்ததால் பெரும் பையொன்றை முதுகில் சுமந்த படி பேருந்துக்காக காத்திருந்தேன். அம்மாவை தொலைபேசியில் அழைத்து நான் வர அனேகமாய் 5 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆக, எனக்காக எல்லோரும் காத்திருங்கள். நான் வாங்கி வந்த புத்தாடை அணிந்து தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் எப்போதும் 4.30 அல்லது 5 மணிக்கெல்லாம் தீபாவளி கொண்டாட்டம் இறுதி கட்டத்தை அடைந்து விடும். அதன் பின் காலை உணவு, தொலைகாட்சி மற்றும் ஒரு குட்டி தூக்கம் என்று கழியும்.

பேருந்து வருவதாய் தெரியவில்லை. மீண்டும் அழைத்து, ‘நீங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை துவங்குங்கள். நான் வந்து ஜோதியில் ஐக்கியமாகிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்படி நீட்டி, நீட்டி.. 9 மணி பேருந்து 12 மணிக்குத்தான் வந்தது. 8 மணி வாக்கில் புதுவையை அடைந்த போது கிட்டதட்ட தீபாவளியே முடிந்திருந்தது. பரபரப்பாக, மிகவும் உணர்ச்சிமயமான ஒரு நாளாக எப்போதும் மனதில் இருக்கும் அந்த ஆண்டின் தீபாவளி

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?
அமெரிக்காவின் கலிபோர்னியா என்ற மாகாணத்தில் walnut creek என்று ஊரில்.

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?
பட்டாசு சத்தம் இல்லை, தமிழ் தொலைகாட்சியில் வழக்கம் போல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கும் நடிகைகள் இல்லை, புது படங்களின் பதாகைகளோ கதாநாயகர்களின் ஆளுயர கட்-அவுட்கள் மற்றும் அதற்கு பாலாபிஷேகம் செய்யும் கோமாளித்தனங்கள்/அக்கிரமங்கள் இல்லை. மாறாக எத்தனை கூட்டமிருந்தாலும் கோவிலில் நடக்கும் அமைதியான வழிபாடுகள், நட்புகளின் சங்கமங்கள், தூர தேச அழைப்புகள் என்று கடந்தது.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
Great Mall, Milpitas, California. இங்கு தான் உடைகள் வாங்கினேன். பிரபலமான brandகள் உட்பட காணும் பல துணிமணிகள் ஆசிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை தான் (இந்தியா, சீனா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து..) ஆனால் நம்மூரில் நல்லது என்று வாங்கும் எல்லாமே வெளிநாட்டு Brandகள் தான். என்ன குழப்பமோ போங்க!

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?
நண்பர் வீட்டில் அவர்களின் அம்மா வந்திருந்ததால் எல்லாமே வீட்டு பலகாரங்கள் தான். முறுக்கு, காராசேவு, பூந்தி, சுழியம் என்று அட்டகாசமான பலகாரங்கள்.

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

உறவினர்களுக்கு எல்லாம் தொலைபேசியில். நண்பர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம்

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

தீபாவளியன்று அவ்வளவாக வெளியில் சுற்றுவதில்லை. வீதியெங்கும் வெடித்துக்கொண்டிருப்பார்கள். எப்போதாவது நண்பர்களை பார்க்க செல்வதுண்டு

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

பள்ளி நாட்களில் வருடந்தோறும் தீபாவளிக்கு அடுத்த நாள் பை நிறைய பலகாரங்கள் எடுத்து செல்வோம். பள்ளியிலிருந்து மொத்தமாய் பலகாரங்கள் ஏதாவது ஒரு தொண்டு இல்லத்திற்கு போகும். இப்போது அலுவலகத்திலும் அதே போல் தான். Corporate Social Responsibility மற்றும் Parivartan என்று நிறைய உதவிக்குழுக்கள் அலுவலகத்தில் உண்டு. போன வருட தீபாவளிக்கு ஒரு பெரும் அரங்கம் முழுதும் ஆதரவற்ற பிள்ளைகளை கூட்டி அருமையான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்

நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?
யார் எழுதியிருக்காங்க, யாரு எழுதலைன்னு ஒன்னும் புரியல. அதுனால் யாராவது விருப்பம் இருந்தால் தொடருங்க சாமீகளா !!

பி.கு. 1: “தீபாவளி..ஹோய்.. தீபாவளி” status messageஅ பாத்துட்டு, என்னது இதெல்லாம் என்று கார்த்திக் கேட்டான். சிவகாசி படத்துல அசின் பாடுற பாட்டுன்னேன். ‘Bro, Thats supposed to be Vijay's song' அப்படின்னு கடுப்பா சொல்லிட்டு போயிட்டான்.

பி.கு. 2: இரண்டாவது கேள்விக்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பதில் எழுத்திட்டேன். படிச்சு பார்த்தா எம்மா நீளத்திற்கு இருக்கு!! கண்டுகாதீங்க ;)

பி.கு. 3: கார்த்திக் மட்டும்தான் டிஸ்கியா போட்டு தள்ளுவானா? நாங்களும் பின் குறிப்பு போடுவோம்ல. (ம்ம், வர வர வயசு வகையறா எல்லாம் பாக்காம கண்டமேனிக்கு போட்டு போடுற மாதிரியாகி போச்சு)