4 May 2010

மன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்

சாதாரண காய்ச்சலும் சளியும் கூட மிகக்கொடுமையாக தெரிவது தனிமையில் தான். அப்படியொரு கொடுமையான வாரயிறுதியை சில காலம் முன் கழிக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட 2 நாட்கள் வேறு எந்த வேலையும் பார்க்காமல் படுக்கையிலேயே கிடந்தேன். நோயும் தனிமையும் வாட்ட கொஞ்சம் மன அழுத்தமே வந்துவிட்டது போல இருந்தது. கவனத்தை திசைதிருப்ப மடிக்கணிணியில் சில திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.

Mitr my friend

ரேவதியின் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளிவந்து திரைப்படம். வெளிநாட்டில் வாழும் ஒரு குடும்பத்தலைவியின் கதை. தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தூரதேசத்தில் குடும்பம் மட்டுமே உலகம் என்று வாழ்பவள் லட்சுமி. அப்படிப்பட்ட அவளை கனவனும் பெண்ணும் நிராகரிக்க ஆரம்பிக்க கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள் லட்சுமி. பின் இணையம், தச்சு வேலை, நடனம் என கவனத்தை திசை திருப்புகிறாள். கிட்டத்தட்ட தன்னையே தேடும் முயற்சியாக அமைகிறது.

வெளிமாநிலங்களில், குறிப்பாக வெளிநாட்டில் கல்யாணமாகி குடியேறும் பல பெண்களுக்கு இந்த சிக்கல் இருக்கக்கூடும். திரைப்படத்தில் காட்டப்படும் இடமான சான் பிரான்ஸ்கோ வளைகுடாப்பகதியில் நிறைய இந்திய குடும்பங்கள் இருக்கின்றன. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க தான் அவர்கள் கலைகளிலும் நட்புகளிலும் விழாக்களிலும் நிறையவே கவனம் செலுத்துகிறார்கள். சொந்தங்கள் தூரத்தில் இருப்பதால் வீட்டு நிகழ்ச்சிகளை கூட நட்பு வட்டாரம் முன்னே நின்று தங்கள் வீட்டு விழாவை போல் நடத்துகிறார்கள்.

பிரிவோம் சந்திப்போம்
நான் அடுத்து பார்க்க தேர்ந்தெடுத்த படம் ‘பிரிவோம் சந்திப்போம்’. கிட்டத்தட்ட அதே சூழல் தான். தோழிகளையும், வாழப்போன இடத்தில் இருக்கும் பெரிய குடும்பத்தையும் பிரிந்து தனியே கணவனுடன் வாழ நேர்கிறது நாயகிக்கு. பெரிதாக வளர்ச்சியடையாத ஊர். பக்கத்திலும் சொற்பமான வீடுகளே அமைந்திருக்கின்றன. இவளும் மன அழுத்தம் போக சில வழிகளை கையாளுகிறாள். ஆனால் அவை ரொம்ப ஆக்கப்பூர்வமானவையாக இருக்கவில்லை. முடிவில் மருத்துவர் ஒருவர் இவள் நிலையை கண்டு கொண்டு கணவருக்கு விளக்குகிறார். முடிவில் எல்லாம் சுபம்

Mrs.Washington goes to Smith
2009ல வெளிவந்து ஒரு ஆங்கிலத்திரைப்படம். இங்கேயும் நிராகரிப்பு உண்டு. கணவன் விட்டுவிட்டு ஒரு இளம்பெண்ணுடன் போய்விடுகிறான். வளர்ந்த இரண்டு பிள்ளைகளும் படிப்புக்காக வெளியூரில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்க எண்ணுகிறார் நாயகி. விடுபட்ட தன் படிப்பை தொடர்கிறார். 20 வயது பெண்ணுடன் அறையை பகிர்ந்து கொள்ள நேர்கிறது. மீண்டும் ஒரு கல்லூரிப்பறவையாய், சுதந்திரமாய் வாழ்கிறார் நாயகி

தற்செயலாக மூன்று படங்களுமே பெண்கள், அவர்கள் மன அழுத்தங்கள், சுதந்திரம் என்பதை சுற்றியே அமைந்துவிட்டது. நெடுந்தொடர்களில் பெண்கள் ஏன் வாழ்வை தொலைக்கிறார்கள் என்று யோசிக்க வைத்தது. அவர்கள் நேரங்களை ஆக்கப்பூர்வமானதாக கழிக்க அவர்கள் ஏன் முன்வர மறுக்கிறார்கள் அல்லது சமுதாயம் ஏன் தடுக்கிறது என்று யோசிக்க வைத்தது.

என் வீட்டு பெண்களிடம் அவர்கள் எப்படி வீட்டில் பொழுதை போக்குகிறார்கள் என்று உடனடியாக கேட்க வேண்டும் என்றிருக்கிறேன். நீங்கள் எப்போதாவது அது பற்றி பேசியிருக்கிறீர்களா?