27 November 2006

திருக்குறள் கவிதைகள்

664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


(திருக்குறள் - பொருட்பால் - அமைச்சியல் - [67]வினைத்திட்பம்)


பொறுமையின்
புகழுரைக்கும்
அரைப்பக்க கட்டுரையை
முடிக்கும் முன்னே,
எழுத அடம் பிடித்த‌
பேனாவை,
விசிறியடித்த‌து
முன்கோபம்.

எனக்குள் ஒருவன்

பிட்சாவையும் பர்கரையும்
சுவைக்கயிலும்
அம்மா வைக்கும்
க‌ருவாட்டுக் குழ‌ம்பை
நினைத்து
நா ஊறுகையில்;

அழுக்கு ஜீன்ஸை
ஆயிர‌ம் ரூபாய்க்கு
வாங்கிவிட்டு
ஆட்டோக்கார‌னிட‌ம்
ஐம்பது பைசாவுக்கு
சண்டையிடுகையில்;

சாலையோர‌
சல்வாரையும் மிடியையும்
ரசித்துவிட்டு
சகோதரிக்கு மட்டும்
சேலையை தேர்ந்தெடுக்கையில்;

அவ்வப்போது
எட்டிப்பார்த்து விடுகிறான்
மென்பொறியாளன்
போர்வைக்குள்ளிருக்கும்
கிராம‌த்தான்!

21 November 2006

தேடல்

தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு
மௌன கணத்தில்
வந்தடைந்து
வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!

14 November 2006

தெருக்குரல்

மெயிலும் வேலையும் இரு கண்ணாம்
மென்பொருள் தொழில் புரிபவர்க்கு

10 November 2006

க‌ட‌லை போட்டுப்பார்

'காதலித்துப்பார்'க்க சொன்னார் வைரமுத்து. கடலை போட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும்?

க‌ட‌லை போட்டுப்பார்

உன்னை நீயே
அழகாய் காண்பாய்;

பேச்சில் சுவை கூடும்
ரசனைகள் மாறும்

அவ‌ச‌ர‌மாய் ஆங்கில‌ம்
க‌ற்பாய்;
அக‌ராதி துணையுட‌ன்
அகதா கிறிஸ்டி படிப்பாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

இர‌வுக்கும் ப‌க‌லுக்கும்
வித்தியாச‌ம் ம‌றப்பாய்;

மனிதத் தனிமை
சுகமென்பாய்,
தொலைபேசி துணையில்
இன்புறுவாய்.

செல்பேசிச் சூட்டிலே
வார்த்தைகள் உருகும்
குறுந்த‌கவ‌ல் அனுப்பியே
க‌ட்டைவிர‌ல் தேயும்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

*

நாளின் நீள‌ம்
குறைவென்பாய்
பத்து நிமிட அலுவலும்
பளுவாய் படும்.

காத‌ல் பாட‌ல்க‌ள்
மட்டுமே இசையாகும்;
க‌விதை எழுத
புறப்ப‌டுவாய்.

ஆள் பாதி,
ஆடை பாதி;
மேன்மையான‌ நீதியென்று
மெனக்கெடுவாய்.

க‌ட‌லை போட்டுப்பார்!!

அமாவாசை

வானின் இளவரசி
காணாமல் போனாளோ??
வானவீதியெங்கும்
விளக்கேந்திய சிப்பாய்கள்!!

ப‌ட‌ப‌ட‌ப்பு

உன் அருகாமை
த‌ரும் அவ‌ஸ்தையில்
படபடக்கிறது
உன் துப்பட்டாவும்,
அது தீண்டி போன
என் மனமும்.

9 November 2006

காதல் மழையே

நண்பர் அஜய் அமைத்த மெட்டுக்கு எழுதிய பாட்டு. இது தான் முதன் முதலில் ஒரு மெட்டுக்கு எழுதிய முழுமையான பாடல்.

கவிதைகளில் உள்ள சுதந்திரம் இல்லை இதில்... எனினும் பாட்டிற்கான களமும் மெட்டும் சில சமயங்களில் வரிகளை பிடித்துக்கொண்டு தந்து விடுகின்றன. இதுவும் சுவையான ஒரு அனுபவமாகவே இருந்தது

பாட்டு வடிவம்

காதல் மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் நினைத்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ நீ
காதல்

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ
காதல்
என் காதல்
உயிர் காதல்

என் காதலான மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்துப் போ

விண் வழியே எனைக் காண ஒடோடி வாராயொ
பெண் நனைய ஒரு கோடி நீர்த்தூவி நில்லாயோ

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
உடல் எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டி போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

கவிதை வடிவம் :

காதல் மழையே
என்னை தீண்டி போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை மட்டும் தொட்டுப் போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தொட்டு விட்டுப் போனாலோ
காதலாய் நினைத்திருப்பேன்

விண் வழியே எனை காண
ஓடி வ‌ந்த பெரும‌ழையே - இந்த‌
பெண் நனைய ஒரு கோடி
நீர்த்தூவும் நறுமழையே

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
மேனி எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

என் காதலான மழையே
என்னை தீண்டி போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்து போ

7 November 2006

தேவதை

கதவு திறந்து
தேவதையாய் நீ
புகுந்துபோது தான்
அலுவலகம் கோவில் போன்றது
என்பதன்
பொருள் விளங்கிற்று.

மனநிலை

நீயும்
பாலைவ‌ன வானிலை
போல‌த்தான்.
சுட்டாலும்
மெய்க‌ருக‌ சுடுவாய்;
பொழிந்தாலும்
உயிர் நனைய பொழிவாய்.