26 December 2007

சொல்லாத பிறந்த நாள் வாழ்த்து


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

13 December 2007

இந்தியா ஏழை நாடா ? இந்தக் கோவிலை பாத்துட்டு சொல்லுங்க...

(படம் சரியா தெரியலைனா கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்க)http://picasaweb.google.com/prem.kavithaigal/VelloreGoldenTemple/photo#5143303261545000658

இந்தியா ஏழை நாடுன்னு யாருங்க சொன்னா? இங்க பாருங்க, எவ்வளவு தங்கங்கத்தை வாரி தெளிச்சிருக்காங்கன்னு...

மேலே இருப்பது வேலூர் ஸ்ரீபுரம் மகாலட்சுமி ஆலயம்

அந்தக் காலத்தில் மன்னர்களிடம் நிறைய காசு இருந்தது. நிறைய கோவில் கட்டினாங்க. மேலும் கலை நணுக்கங்கள் நிறைந்த கோவில்கள் கட்டி கலையையும், பக்தியையும் வளர்த்தாங்க.

ஆனா இப்போ அடிப்படை தேவையே பூர்த்தியாகாம பல மக்கள் இருக்கும்போது, புதுப்புது கோவில்களும், இத்தனை தங்கப் பூச்சுகளும் தேவைதானா?

சரி, அவ்வளவு பக்தி இருக்குதுன்னா பாழடைந்த நிலையில் எத்தனையோ பழைய கோவில்கள் இருக்கு. அதையெல்லாம் புதுப்பிக்கலாமே.

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பக்தி இருக்க வேண்டிய இடத்தில் பகட்டு இருக்க வேண்டுமா?

11 December 2007

நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு போகிறீர்களா? - உஷார் !

சில நாட்களுக்கு முன் சென்னை நங்கநல்லூரில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. சில காலங்களாகவே கோவில்களில் மக்களும் நிர்வாகமும் அடிக்கும் லூட்டிகளால் பெரிய கோவில்களுக்கு எதுக்கும் செல்லாமல் இருந்தேன். அப்படியிருக்க இந்த கோவிலுக்கு சென்றுவந்த பின் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே சும்மா அதிருது!!கோவிலில் நுழையும் போதே எல்லோரும் கோவிலுக்குள் இருக்கும் கடையில் அர்ச்சனை பொருட்கள் மற்றும் குங்குமம் வாங்க வலியுறுத்துப்படுகிறார்கள். ஒரே குடும்பமாக இருந்தாலும் எல்லோரும் தனித்தனியே அர்ச்சனை செய்ய வேண்டுமாம்.ஒரே அர்ச்சனைத் தட்டுக்கு நிறைய பேர்கள் சொல்லப்போனால், 'செல்லாது, செல்லாது' என்கிறார்கள்.இந்தக் கோவிலுக்குள் கட்டாயம் போகத்தான் வேண்டுமா என்று வீட்டில கேட்க, இவ்வளவு தூரம் வந்துவிட்டு தரிசனம் செய்யாமல் போகலாமா என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்க கோவிலுக்குள் நழைந்தேன். ஆண்கள் உள்ளே செல்லும்போதே சட்டையை கழற்றிவிட்டு தான் செல்ல வேண்டுமாம் (என்ன ஒரு உவமானம். கொஞ்சம் ஏமாந்தா எல்லாத்தையும் உருவிட்டுத்தான் விடுவாங்க போல)இராஜராஜேஸ்வரியின் சன்னிதி உயரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது படிகளுக்கு மேல் ஏறிப்போனால் தான் சாமியை பார்க்க முடியும். ஆனால் குறைந்தப்பட்சம் அர்ச்சனையோ, அல்லது குங்குமப்பொட்டலமோ இருந்தால் தான் சன்னிதிப் படிகள் ஏறவே அனுமதிப்படுவீர்கள்.குங்குமப் பொட்டலமும் கோவிலில் தான் வாங்கப்பட வேண்டுமாம். ஒரு சின்ன குங்குமப்பொட்டலத்தின் விலை ரூ.10. வாங்கிக்கொண்டு சன்னிதிக்கு போகுமுன் அதை பிரிக்காமலேயே உண்டியலில் போட வேண்டுமாம்

(மறுசுழற்சி முறையை எவ்வளவு அழகாக விளக்குகிறார்கள் பாருங்கள்)இதில் 'வெளிக்குங்குமம் போட்டால் குடும்பத்திற்கு கேடு' என்று அறிவிப்புப் பலகை வேறு.என்னடா இது ? கோவிலா இல்லை வியாபாரத்தளமா என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் இன்னொரு அறிவிப்புப் பலகையும் கண்ணில் பட்டது. 'இது தனியார் கோவில். நிர்வாகத்தின் முடிவே இறுதியானது'என்னத்த சொல்ல????

10 December 2007

FAKE போடுவது பற்றி "வெட்டிப்பயல்" எழுதத்தான் வேண்டுமா?

வெட்டி போன வாரம் 'மென்பொருள் துறையில் Fake போடுவது எப்படி? - 1 ' ன்னு ஒரு பதிவு போட்டுருந்தார்.

கூடவே இந்த சமாசாரத்தில் சண்டை போட அவகாசம் இல்லைன்னு சொல்லியிருக்காரு. அதுனால பின்னூட்டம் இடாம இங்க ஒரு பதிவாக இடுகிறேன். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆச்சே.... விட்டு பிடிப்போம்
பாலாஜி,
என் மனதில் தோன்றும் முதல் கேள்வி, இந்தப் பதிவு அவசியம் தானா? 'சாப்டுவேர் இஞ்சினீயர் ஆகலாம் வாங்க'ன்னு ஒரு நல்ல தொடரை பதிவிட்ட நீங்கள் இப்படி ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் தான் என்ன?

FAKE போடுவது சரியா தவறா என்பதைத் தாண்டி இந்த பதிவை இட்டது சரியா தவறா என்ற கேள்வி தான் எனக்குள் ஓங்கி நிற்கிறது.

FAKE போடுவது என்பது "நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்ளும் திட்டம்" அன்றி வேறில்லை

பெரிய நிறுவனங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்துச் சென்றால் எப்படியும் கண்டுப்பிடித்து துரத்திவிடுவார்கள். எங்க நிறுவனத்தில் எல்லாம் அப்படிப்பட்டவர்களின் குட்டு வெளிப்படுகையில், வெகு சொற்ப நேரத்திலேயே காரியங்கள் முடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். அவமானமும் மீண்டும் ஒரு வேலை தேடும் சூழ்நிலையும் தான் மிச்சம்.

சின்ன நிறுவங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்தாலோ வேறு வகையில் சிக்கல். முக்கால்வாசி நேரங்களில் பொய் தகவல்கள் அளிப்போர் சுமாரான படிப்பாளிகளாகவே இருப்பார்கள். புதிதாய் வேலை சேரும் இடத்திலோ கொடுக்குப்படும் வேலை பளு தலைக்கு மேல் அழுத்தும். அப்போது நீங்கள் புதிதாய் படித்து தெரிந்துக்கொள்ள சமயம் இருக்காது. அந்த சமயம் நீங்கள் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தால் எப்படியும் குட்டு வெளிப்பட்டுவிடும்

இந்தியாவில் இன்றைய அளவில் புதிதாய் படித்து பட்டம் பெறுபவர்களுக்கே ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. FAKE போடவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அப்படி இருப்பினும் இந்த பதிவு அவசியமில்லை என்பது என் கருத்து.....

நெருடியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

புதுவை பதிவர் பட்டறை திசம்பர் 9, 2007 அன்று இனிதே நடைப்பெற்றது. புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக நடைப்பெற்ற இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் கலந்துக்கொண்டனர்.

சென்னை பதிவர் பட்டறையை நடத்திய குழுவிலிருந்தும் நண்பர்கள் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்

மாலை நடைப்பெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சட்டமன்ற தலைவர் திரு.ராதாகிருஷ்ணனும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ அவர்களும் கலந்துக்கொண்டார்கள்.

திரு. பொன்னவைக்கோ அவர்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் & பல்கலைக்கழகங்களின் சார்பாக தமிழில் பொறியியல் பாடங்கள் குறித்தும் அருமையாக பேசினார்.

தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை நிறுவியதில் பெரும் பங்களித்தவர் திரு. பொன்னவைக்கோ. இரத்தின சபாபதி என்ற இயற்பெயரை தமிழ்படுத்தி தாயார் பெயரான பொன்னி + அவைக்கோ (சபாபதியின் தமிழாக்கம்) சேர்த்து பொன்னவைக்கோ ஆனவர்.

'தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றைப் பற்றி பேசுகையில் தமிழன் தான் தமிழை மதிக்க மறுக்கிறான் என்று கூறினார். பெற்றவளை பிள்ளைகள் தாய்மொழியில் அழைத்தால் அவமானமாக கருதுகிறோம், கோயில்களில் தமிழில் பூசை செய்தால் பலிக்குமா என்று அஞ்சுகிறோம் என்று குற்றஞ்சாட்டினார். தமிழை ஆங்கிலங்கலக்காமல் பேசிப் பழக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


குட்டு : தமிழ் ஆர்வலர், தமிழில் தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துபவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் அமைப்பாளர் என்று தமிழுடன் பெருந்தொடர்புக் கொண்டவர் கொஞ்சம் தமிழர்களின் கலாச்சார உடையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆங்கிலம் பேசுவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள், சமிஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்பவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சொன்னவரே தமிழர்கள் கூடும் ஒரு கூட்டத்திற்கு 'கோட்டு சூட்டு டை' அணிந்து வருவதை கௌரவமாக நினைத்ததை என்னவென்று சொல்லுவது ?

9 December 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்


4 December 2007

காத‌ல் கார்த்திகை


விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;
தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!

சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌


உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்

புத்தாடைய‌ணிந்த‌ பூரிப்பில்
நீ உல‌வும் அழ‌கைக் காண‌வேனும்
நாள்தோறும் வாராதா
ஏதேனும் ப‌ண்டிகை