23 January 2009

அன்புள்ள அப்பாவுக்கு

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது. 'அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்

அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.

வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.

வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.

எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.

உங்கள் அன்பு மகள்,
இளவேனில்


படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா

19 January 2009

புத்தகக் கண்காட்சி - 2009

2007ம் ஆண்டு தான் முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முன்பே புதுவையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன் என்ற போதும், வாசிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்தவுடன் சென்றதால் 2007 புத்தகக் கண்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

ப்ரியன் தான் என்னை முதன் முதலில் அங்கே கூட்டிச்சென்றார். நான் விரும்பிய தலைப்புகளில் நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படித்தினார். நிறைய நூல்களை வாங்க ஆலோசனைகள் கூறினார். அடுத்தடுத்து போன ஒவ்வொரு முறையும் அவருடன் தான் சென்றிருக்கிறேன், அல்லது அவரை அங்கு சந்தித்திருக்கிறேன்.


இம்முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கியதும் நண்பர்கள் எல்லோருக்கும் கண்காட்சியில் சந்திக்கலாம் என்று குறுந்தகவல் அனுப்பியாயிற்று. சிலர் வர முடியாமல் போக, நான், 'வானவில் வீதி' கார்த்திக், த.அகிலன், எழில்பாரதி மற்றும் ப்ரியன் 11ம் தேதி கண்காட்சியில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.

கார்த்திக்கிற்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது. கிட்டதட்ட நான் 2007ல் இருந்த மனநிலையில் தான் இருந்தான். கண்காட்சி குறித்த அவன் பதிவிலேயே அது தெரிகிறது. கூட்டி சென்றது நான் எனினும், புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு குறித்தும் அகிலன் தான் அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டிருந்தார்.

மதிய உணவு படு மோசமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் நோக்கத்திற்கு விலையை நிர்ணயித்திருந்தார்கள். அடுத்த முறை நிர்வாகிகள் இதை கொஞ்சம் கண்டு கொண்டால் நன்று

நிறைய கூட்டம் இருந்ததும், நிறைய பேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிற போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பலரும் ஆன்மீகப் புத்தகங்கள், சமையல் கலை, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற நூல்களைத்தான் வாங்கிகிறார்கள்

இம்முறை குழந்தைகளுக்கான நூல்கள் விற்கும் அரங்கள் நிறையவே தென்பட்டது நிறைவாய் இருந்தது. ஆனால் பலவும் ஆங்கிலத்திலேயே இருந்தது. தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?

நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம். புத்தகக் கண்காட்சிக்கு செல்வது எத்தனை முறை நடந்தாலும் அலுப்புத்தராத ஒரு அனுபவமாகவே இருக்கிறது. இம்முறை நிறைய நூல்களை வாங்கவில்லை. வாங்கியவையின் பட்டியல்


1. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா


கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கியிருக்கிறேன். அவர் வாழ்வில் கண்ட வலிகளையெல்லாம் படிக்கையில் நம்மையும் உணரச் செய்திருக்கிறார்


2. ஆயிஷா - இரா. நடராசன்


நமது கல்வி முறையை கோளாறுகளை அழகாய் எடுத்துரைக்கும் ஒரு குறுநாவல். விலை ரூ. ஐந்து தான். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று


3. நொண்டிக்காவடி - யுகபாரதி


நேர்நிரையின் கவிதை நூல்களின் அழகே தனி தான். கைக்கு அடக்கமான அதன் வடிவமும், அழகான அட்டையும், உறுத்தாத எழுத்துருக்களும், அந்த நூல்களை வைத்திருப்பதும் படிப்பதுமே ஒரு அலாதியான சுகம் தான்.

'நொண்டிக்காவடி' யுகபாரதியின் சமூகக் கவிதைகளின் தொகுப்பு.


4. தனிமையின் நிழல் குடை - த. அகிலன்


இணையம் மூலம் அறிமுகமான நண்பர் அகிலனின் கவிதை நூலை இப்போது தான் வாங்க நேர்ந்தது. எழுதிய கவிஞரோடு சேர்ந்து போய் அந்த நூலை வாங்கியதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருந்தது.

1 January 2009

புத்தாண்டு நினைவலைகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது எப்படியெல்லாம் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன் என்று எனக்குள்ளேயே அசைப்போட்டு கொண்டேன்.

பள்ளிப்படிப்பு முடியும் வரை தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்த்துக்கொண்டிருப்போம். பனிரெண்டு மணி அடித்தவுடன் வீட்டில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிவிட்டு உறங்கிவிடுவோம்.

கல்லூரிக்குள் நுழைந்ததும் புத்தாயிரம் ஆண்டு பிறக்க ஆயத்தமானது. செப்டம்பரிலேயே நண்பன் ஒருவன் ஒரு ஆலோசனை சொன்னான். சரியாக 1999 செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து அந்த திட்டத்தை செயல்படுத்தினோம். ஆம், கிடைக்கும் காசிலிருந்து தினம் 50 பைசாவை சேமிக்கத் தொடங்கினோம். சரியாக நூறு நாட்களில், டிசம்பர் 31ம் தேதி கையில் 50 ரூபாய் இருக்கும், அதை வைத்து புத்தாண்டை கோகாகலமாகக் கொண்டாடலாம் என்று திட்டம்.

ஐம்பது ரூபாயில் என்ன கோகாகலம் என்று கேட்கிறீர்களா? மாலை 7 மணி வாக்கில் கடற்கரைக்கு கிளம்பியிருப்போம் என்று நினைக்கிறேன். புத்தாயிரம் ஆண்டு என்பதால் புதுவை கடற்கரை வீதியில் அரசு சார்பில் ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது கொஞ்சம் கலை விருந்து, பசிக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் பானிபூரி, மசாலா பூரி. அடுத்து சுற்றில் கோன் ஐஸ்க்ரீம் என ஐம்பது ரூபாய் தீருமட்டும் நன்றாக உண்டு களித்தோம். காணும் நண்பர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு, சரியாக பனிரெண்டு மணிக்கு நண்பர்களிடமிருந்து விடைபெற்று வீடு சேர்ந்தோம். மறக்க முடியாது ஒரு அற்புதமான புத்தாண்டு கொண்டாட்டம் அது

அடுத்து சில ஆண்டுகளில் எங்கள் பட்ஜெட் கொஞ்சம் உயர்ந்தது. ஒரு பிரபல உணவகம் புத்தாண்டுக்காக நூறு ரூபாய்க்கு இசையுடன் கூடிய அளவில்லா விருந்து அளித்துக்கொண்டிருந்தது. அப்படி அருமையான பாடல்களோடும் நல்ல உணவோடும் புத்தாண்டிற்கு முந்தைய சில இரவுகள் கடந்திருக்கின்றன.

பட்டமேற்படிப்பு எல்லாம் முடித்து 2004 வருடம் அனைவருக்கும் வேலைக்கு சென்றுவிட்டோம். 2005ஐ வரவேற்க ஆவலாய் காத்திருந்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே அலுவலகத்தில் விடுப்பு கூட சொல்லியாயிற்று. ஆனால் 2004 ஆண்டின் பெருந்துயராக ஆழிப்பேரலையின் ஆட்டத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. அந்த புத்தாண்டை யாருமே அனேகமாய் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியாக எந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.

சென்ற வருடம் ஒரு முக்கிய அலுவல் காரணமாக புத்தாண்டை மடிக்கணினியில் வேலை செய்து கொண்டே கழிக்க வேண்டியதாகிவிட்டது. இம்முறை பழையபடி தொலைக்காட்சியுடனும் வீட்டாருடனும் இனிதாய் கழிந்தது.

காலம் உருண்டோட நண்பர்கள் எல்லாம் தொலைவாகி விட்டார்கள்.மீண்டும் அவர்களுடன் ஒரு அருமையான புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஆவலுடன் 2009ல் பயணிக்க தொடங்குகிறேன்.

மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்