24 February 2009

அது காதல் காலம்

'சின்ன சின்ன ஆசை' அப்போது அத்தனை பிரபலம். பாடலின் வரிகள் மனப்பாடமாய் தெரியும். பாடங்களில் எப்போதும் அந்த நினைவாற்றல் உதவிதாய் நினைவேயில்லை. பள்ளியில், விழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பாடச் சொன்னால் அவர்கள் முதல் தேர்வு 'சின்ன சின்ன ஆசை' பாடல் தான்.

மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

புதிய முகம் பாடல்களில் அத்தனை இனிமை அமைதியும் கலந்திருக்கும். இரவின் அமைதியில் காதோரம் அவை ஒலிக்கும் போது அன்றைய பொழுதின் அத்தனை அலுப்பும் மறைந்து உறக்கத்தை நோக்கிய இனிமையான பயணம் ஆரம்பமாகும்

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என் காதில் ஏதோ சொன்னது...

திருடா திருடா வரும் போது ரகுமானின் இசைக்கு பெரிய விசிறியாகிருந்தேன். எப்போதும் டேப் ரிகார்டரில் ரகுமான் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம்
ஏந்தி ஏந்தி இங்க வர வேண்டும்


என்னவளே அடி என்னவளே என்று உன்னிகிருஷ்னன் உருகியபோது நானும் கொஞ்சம் உருகிக்கொள்வேன். மனதிற்குள் வருங்கால காதலிக்காக சமர்ப்பனம் செய்து கொள்வேன்.

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிசமும் வருசமடி
கண்கள் எல்லாம் பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
இத சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி


காதலிக்கும் நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை. இருப்பினும் ரகுமானின் காதல் பாடல்கள் அத்தனை பிரியத்திற்கு உரியதாய் இருந்தன. பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்ததால் காதல் பாடல்கள் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்திருக்கலாம். 'உயிரே உயிரே' என்று அர்விந்த்சுவாமி உருகும் போது இல்லாத காதலிக்காக நானும் உருகியிருக்கிறேன். இது அனேகமாக காதல் செய்த காயமில்லை... இசை செய்த மாயம் தான்

என்னுயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன்மீது பழிபாடும் பெண்ணே
அதற்காக்த்தான் வாடினேன்


கிட்டத்தட்ட நண்பர்கள் வட்டத்தில் எல்லோருமே ரகுமான் இசையில் மயங்கியவர்களாகவே இருந்தனர். அடுத்து அவர் எந்தப் படத்திற்கு இசைமைக்கப் போகிறார், எந்த ஒலிநாடா எப்போது வெளிவரும் என்று எல்லா தகவல்களையும் சேகரித்து வைத்திருப்போம். ஒலிநாடா வந்ததும் யார் முதலில் வாங்குவது என்று போட்டி வேறு நடக்கும்

ஒரு புறம் ரகுமான் தமிழில் இசையமைப்பது குறைந்த போனது, இன்னொரு புறம் இசையோடு நான் செலவிட்ட நேரம் குறைந்தது. ஆனாலும் அவர் இசைக்கு இன்னும் நான் ரசிகனாகவே இருக்கிறேன். என் பதின் வயது நினைவுகளில் அவர் இசை நிறையவே ஆக்ரமிப்பு செய்திருப்பதால், என்றுமே அந்த இசைக்கு என் மனதில் ஒரு தனியிடம் இருக்கும் :)

Slumdog Millionaire படம் குறித்து எனக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது. அதே போல், ஒரு தமிழ் படத்திற்காக இந்த விருதை வாங்கவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. ஆனால் அவர் வாங்கி வந்த இரண்டு ஆஸ்கார்கள் முன் இதெல்லாம் தூசு.

முக்கியமாக ஆஸ்கார் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று மறக்காமல் தமிழில் கூறியது மிகவும் மகிழ்ச்சி.

இன்னும் நிறைய விருதுகளை வாங்க என்னைப் போல பல்லாயிரம் ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்.

"எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு"

23 February 2009

எல்லா புகழும் அவனுக்கே - வாழ்த்துகள் ரகுமான்

மிகவும் எதிர்ப்பார்த்த ஆஸ்கார் விருதுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் இல்லாமல் இம்முறை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாய் ஆஸ்கரை எதிர்ப்பார்த்திருப்பார்கள். ஏனென்றால் ரகுமான் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இதோ, முடிவுகளும் வந்தாயிற்று

Best Achievement in Music Written for Motion Pictures, Original Score
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman

Best Achievement in Music Written for Motion Pictures, Original Song
Winner: Slumdog Millionaire (2008) - A.R. Rahman, Sampooran Singh Gulzar("Jai Ho")

ஒன்றில்லை, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவித்துவிட்டார் ரகுமான்.

மறக்காமல் ஆஸ்கார் மேடையில் அவர் சொன்னது 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'

மிகவும் பெருமையாயிருக்கிறது ரகுமான். வாழ்த்துகள் :)

17 February 2009

வழக்கொழிந்த சொற்கள்

//மேவி என்னை ஒரு தொடர்பதிவுக்கு ரொம்ப நாள் முன்னாடி கூப்பிட்டிருந்தார். இப்போதான் டைம் கிடைத்தது. //இதை அப்படியே வழிமொழியலாம். கார்த்திக் இந்தப் பதிவை எழுதச்சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்போது தான் எழுத ஆரம்பிக்கிறேன்.வழக்கொழிந்த சொற்களின் பட்டியலை எழுத ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே தான் போகும். மிக இயல்பாக பயன்படுத்தும் பல வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. நிறைய சொற்களில் உருமாறிவிட்டன, அல்லது அவற்றுக்கு நிகரான வேற்று மொழி சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகவே வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள் எவை தெரியுமா? (தொடரை ஆரம்பித்த உள்ளம் என்னை மன்னிக்கட்டும் ;-))அமைதி - அனேக நாடுகளில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கியாயிற்று. ஆனால் இன்னும் போர், போராட்டங்கள் போன்றவை முடிந்தபாடில்லைசகிப்புதன்மை - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூட அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடலாம். குடும்பங்களில் தொடங்கி பொதுயிடங்கள் வரை எங்கேயும் யாருக்கும் சகிப்புதன்மை எட்டிப்பார்ப்பதாய் தோன்றவில்லை. தேவையில்லாத பலவற்றை சகித்துக்கொள்கிறோம் அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறோம் :(இளைய தலைமுறையினர் யாராவது தோல்வியை சகித்து கொள்வார்களா?? கிடையாது. ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிந்தாலும், அவர்களால் தோல்வியை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியாது.விட்டுக்கொடுத்தல் - அப்படின்னா என்று கேட்கிறீர்ளா? எல்லோருக்கும் எல்லாமும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். ஒரு சின்ன விசயத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாத மனம். அப்படி விட்டுக்கொடுத்தால் கூட சொல்லிக்காட்டும் சுபாவம்.இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.அதே போல் வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ

இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்க விரும்பும் இருவர் :
ராம் CM
கார்த்திகைப் பாண்டியன்