31 March 2009

இனி ஜிமெயிலில் தமிழிலேயே மடல் எழுதுலாம் :)

முன்னர் ஜிமெயில் தமிழில் இடைமுகம் அளித்தது. இப்போது தமிழிலேயே மடலும் அனுப்பலாம்.

உங்கள் ஜிமெயில் பக்கத்தில், SETTINGS ஐ அழுத்தவும். General பகுதியில் Languague என்ற பத்தியில் Enable Transliteration ஐ தேர்வு செய்து உங்கள் தேர்வு மொழியாக ’தமிழ்’ மொழியை தேர்தெடுங்கள்

இனி தமிழிலேயே எல்லோருக்கும் எளிதாக மடல் அனுப்பலாம். மற்ற தட்டச்சு நிரலிகளை விட கூகுள் நிரலி செயல்படாது எனினும், அவை இல்லாத நேரங்களில் மற்றும் அவற்றை தேட முடியாத சூழலில் ஜிமெயிலில் இருந்தே தமிழில் மடல் அனுப்புவது எளிதாக இருக்கும்

செய்தியை அறிய தந்த நண்பர் சுப்ரமணியத்திற்கு நன்றி :)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாவேந்தர் பாரதிதாசன்

25 March 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர் !

யாதும் ஊரே
பிரேம்குமார் சண்முகமணி

மும்பையெங்கும் இந்தி பேசுபவர்களை
முரட்டுத்தனமாய் தாக்குங்கள்;
பூனே நகரத்துள்
கன்னடப் படம் ஓடும்
கொட்டகை கொளுத்தப்படட்டும்;

பெங்களூரில் வாழும்
தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!
பலியிடுங்கள் அவர்களை.

பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

நன்றி : கீற்று

18 March 2009

இத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்

சோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.

முகில், மாலை வீட்டுக்கு வரீயா?

நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌

அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்

என்னது தனியா இருக்கீயா? இதோ, உடனே கிளம்பி வரேன்

தோடா, ரொம்ப ஆசையெல்லாம் வளத்துக்காதே. சும்மா பேசிக்கிட்டு இருக்கத்தான் கூப்பிட்டேன். சீக்கிரம் வந்து சேரு

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

என்னப்பா கிளம்பிட்டீயா இல்லையா?

இப்போ தான் கனி கிளம்பினேன். இன்னும் ஒரு பத்து நிமிசம் ஆகும் வர‌

வரும் போது ஒரு நாற்காலி வாங்கிட்டு வாயேன்.

எதுக்கு ? உன் தோழிகள் வர வரைக்கும் அது உங்க வீட்டு வாசல்ல போட்டு நான் உக்காந்து உனக்கு காவல் காக்கவா?

ரொம்பத்தான்... வாங்கிட்டு வா. சொல்றேன்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

யேய் கனி, இந்த கீபோர்டு எப்போ வாங்கினே?

நேத்து அண்ணா வந்த போது வாங்கினேன். எனக்காக என் சம்பளத்தில் நான் விரும்பி வாங்கிகிட்டது.

நான் இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன். நீ கொஞ்சம் நாள் பொறுத்திருந்தா நானே உனக்கு இத வாங்கி கொடுக்கனும்னு இருந்தேன்.

அதுக்கென்ன? இது பேசிக் மாடல் தான். இன்னுமொரு நல்ல மாடல் இருக்கு. விலை 2 லட்சம் தான். நீ சம்பாதிச்சு அதை எனக்கு வாங்கி கொடு

ஆகா, நீ ஆதாரத்துக்கே சேதாரம் விளைவிச்சுருவ போல. சரி சரி, உனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு வாசிச்சு காட்டேன்.

வாசிக்கிறேன். ஆனா நீ கூட‌வே பாட‌னும். ச‌ரியா?

உன‌க்கு ஏன் இந்த விப‌ரீத‌ ஆசை? ச‌ரி விடு. நான் பாடுற‌த‌ வேற‌ யாரு கேக்க‌ போறா? பாடுறேன்...

முதல்ல அந்த நாற்காலிய கொடு. நான் உட்காருறேன்

தோடா...இவ்வ‌ள‌வு தூர‌ம் சும‌ந்துகிட்டு வ‌ந்திருக்கேன். நான் தான் முத‌ல்ல‌ உக்காருவேன். நீ வேனும்னா என் ம‌டியில‌ உக்காந்துக்கோ

ஆள‌ விடு சாமி. நீயே அந்த‌ நாற்காலியில உட்காரு


வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்


எங்க‌ உன் இமையை திற‌ பார்ப்போம்... நானிருக்கேனான்னு?


விழிக‌ள் நான்கும் நெருங்க‌, இமைக‌ள் எல்லாம் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் கிற‌க்க‌த்தில் க‌விழ்ந்து கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் க‌ல‌க்க‌த்தில் துடித்த‌ன.

ச‌ரி க‌னி, நான் கிள‌ம்புறேன்

ம்ம்ம்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

முகில் கிள‌ம்பி இர‌ண்டே நிமிட‌த்தில் அவ‌ன் செல்பேசி குறுகுறுத்த‌து. க‌னி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்


எதுக்கு திடீர்னு கிள‌ம்பி போனே?

இல்ல‌, உன்னை முத்த‌மிட்டுடுவேனோன்னு தோனுச்சு. அதான் கிள‌ம்பிட்டேன்

ஏன்? கொடுத்தா தான் என்ன‌வாம்?

நீதானே ரொம்ப‌ ஆசையெல்லாம் வ‌ள‌த்துக்க‌ கூடாதுன்னு சொன்ன‌....

அட‌ப்பாவீ.. அதெல்லாம் சொல்ற‌து தான். இன்னும் இர‌ண்டு மாச‌த்துல ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம். உன்னை க‌ட்டிக்கிட்டு என்ன‌ தான் செய்வேனோ?

YOU ARE SUCH AN UNROMANTIC PERSON MUGHIL...


10 March 2009

சந்தனமுல்லைக்கு போட்டியாக‌

சில பழைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் வீடியோக்களை நண்பர்களின் ஆர்குட் வீடியோக்களில் பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சிலர் அதே போல உணரலாம். ஆக அந்த வீடியோக்கள் உங்களுக்காக‌

நீளமான பாடல். அப்போது திரையுலகில் பிரபலமாய் இருந்து பலரை ஒன்றாக காணக்கூடிய வாய்ப்பை தரும். இந்தியாவின் அனேக மொழிகளில் வரிகளை கொண்டிருக்கும். அடிக்கடி டி.டி யில் ஒளிபரப்படும்உள்நாட்டு அமைதி சற்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்நாட்களில் தொலைகாட்சிகள் இப்பாடலை ஒளிபரப்பினால் தேவலை

இசைந்தால் நம் இருவரின் ஸ்வரமும் நமதாகும்
திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல்...


***


அடுத்த வீடியோ The Jungle Book தொடரின் முகப்புப் பாடல். கேட்க கேட்க திகட்டாத பாடல். இப்பாடலை கேட்கும் போது மீண்டும் பால்யத்திற்கே போய் விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.***


சந்தனமுல்லை அடிக்கடி நாஸ்டால்ஜிக் பதிவுகள் போட்டு பழைய நினைவுகளை கிண்டி விடுவாங்க. இந்த பதிவ எழுத ஆரம்பிச்சவுடனே அவுங்க பதிவுகள் தான் நினைவுக்கு வந்துச்சு. அதான் அப்படி ஒரு தலைப்பு

***


இலவச இணைப்பு : தீபாவளிக்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செய்த வீடியோ. பார்த்து ரசிங்க!