17 April 2009

ஆ.வி.யில் கவிதை எழுதிய பாவி

சமீபத்தில் மென்பொருள் துறையினர் பற்றி செல்வேந்திரன் ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் கருத்தில் உண்மை இருந்தாலும், அதையே ஒரு மென்பொருள் துறை சார்ந்தவன் எழுதியிருந்தால் கைகொட்டி சிரித்திருப்பார்கள். சுய பச்சாதாபத்தில் பிதற்றுகிறோம் என்று கிழித்திருப்பார்கள். கவிதையில் செல்வா சற்று மிகைப்படுத்தியிருந்தாலும், அவருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும் “செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”

ஆனாலும் ஒரு கொலவெறியோட அதற்கு ஒருவர் எதிர்கவுஜ எழுதி விகடனில் எழுதியிருக்கிறார். (அப்போ விகடனில் கவிதை எழுதுவது சுலபம் தானா? நாமளும் முயல வேண்டியதுதான்)

அவர கேக்கனும் நினைக்கிற கேள்வி, ‘ஏஞ்சாமி, எத்தன நாள் தான் அரச்ச மாவையே அரைப்பீங்க? புதுசா ஏதாச்சும் சொல்லுங்களேன், அப்புறம், பேனா கையில் கிடைச்சா எது வேணும்னாலும் எழுதலாமா?’ ...எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(பாசமிகு எதிர்வினையாளரு)க்கு வாழ்த்துகள்

(சும்மா ஒரு எதுகைக்காக தலைப்பு வச்சாச்சு. அதையும் எப்படியோ சமாளிச்சாச்சு)

***

பின்நவீனத்துவம் என்றாலே கொஞ்சம் பீதி தான் எனக்கு. வாசிப்பனுவத்தின் குறைபாடாக கூட இருக்கலாம். அப்படித்தான் பெரும்பாலும் இலக்குவண் ராசாவின் கவிதைகளை புறந்தள்ளி இருக்கிறேன். ஆனால் நேற்று அவர் தளத்தில் படித்த கவிதை வெகுவாய் கவர்ந்தது. இலக்குவண், நல்ல வேலை(ளை)யாக அதை கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜில் போட்டிருந்தாய்.


வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

முழுவதும் படிக்க இலக்குவண் வலைப்பூவிற்கு
செல்க


***

ஒரு நாள் வானவில் வீதி கார்த்திக்கும் நானும் காதல் கவிதைகளை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே காதலை மிகைப்படுத்திதான் எழுதுறாங்கன்னு சொன்னான். சரி நீ தான் ஒரு காதல் கவிதை எழுதுறதுன்னு சொன்னதற்கு கவிதைக்கும் எனக்கும் இப்போதைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னான். சரி ஒரு கதை எழுது என்று சொல்லிகிட்டு இருந்தேன். தம்பி இப்போ அட்டகாசமா ஒரு கதை எழுதியிருக்கான், “தனிமையின் விலை”. எத்தனை இளமை, எத்தனை துள்ளல் ?!

அவன் எழுத்துகளை ஏகப்பட்ட மக்கள் படிக்கிறார்கள் என்பதாலும், அவன் எழுத்துக்கு அனேகம் ரசிகர்கள் (அதாவது ரசிகைகள்) இருக்கிறார்கள் என்பதாலும், இது ஒரு விளம்பரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வேறென்ன ஒரு பொறாமை தான் :-)

கார்த்திக், சத்தியமா சொல்றேன். உன்னோட எழுத்துக்களை பார்த்து பொறாமையா இருக்கு. You make me feel old dude ;-)

9 April 2009

கோவில் யானை
கோவிலில்
எப்போதும் பார்க்க முடிகிறது
அந்த யானையை

காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை

கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது

தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்

முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?

நன்றி : நவீன விருட்சம்

7 April 2009

மீண்டெழுதல்எனக்கான பாதையை தேர்வு
செய்துகொண்டேன்
வாகனத்தை சோதனையிட்டதில்
பழுதேதுமில்லை
தலைக்கவசத்தை பொருத்தியபடியே
சாலைவிதிகளை ஒருமுறை நினைவுகூர்ந்தாயிற்று
பயணமும் இனிதாக தான் இருந்தது
எதிரே வந்தவன் பிசகி
என்மீது மோதும் வரை;
உன் பார்வையில் தடுமாறி மீண்டெழுந்ததைவிட
இம்முறை சீக்கிரமே
இயல்புக்கு திரும்பிவிட்டேன்

நன்றி : யூத்ஃபுல் விகடன்

4 April 2009

காதல் சாலைவாரம் சீக்கிரமாக ஓடி வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. புதுவைக்கு கிளம்ப வேண்டும். நாவலூரில் வேலை செய்வதால் கோயம்பேடு பேருந்து நிலையம் போக தேவையில்லை. அங்கு போகும் நேரத்திற்கு புதுவைக்கே போய்விடலாம். இங்கிருந்து கோவளம் போய்விட்டால் எப்படியும் ஒரு பேருந்தை பிடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் இப்படி பயணம் செய்வது சில சமயம் அலுப்பை தருகிறது. ஆனாலும் என்ன செய்வது? நீயல்லாத சென்னையில் வாரயிறுதிகளை கழிப்பதில் சுத்தமாக எனக்கு விருப்பமில்லை

அதோ, புதுவை போக்குவரத்து கழகப் பேருந்து வந்துவிட்டது. வழக்கம் போல பேருந்து நிரம்பியிருக்கிறது. மறுயோசனையின்றி படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன். படிக்கட்டில பயணம் செய்வது ஆபத்தானது. தூங்க முடியாத சிக்கலும் இருக்கிறது. இருப்பினும் ஏனோ அது மிகவும் பிடித்திருக்கிறது. அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் காதலுக்காக எதையும் செய்ய துணிபவர்கள் தான் அதிகம்.

ரொம்ப நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. உள்ளம் சொல்வதையெல்லாம் உடம்பு கேட்க மறுக்க ஆரம்பித்திவிட்டது. உடற்பயிற்சி செய்தால் தானே? கல்லூரியில் சேர்ந்ததும் தான் உடற்பயிற்சி செய்யவே ஆரம்பித்தேன். காதலின் கரங்களில் சேர்ந்ததும் அதை விட்டாயிற்று. காதலி கிடைக்கும் வரை தான் உடல் அழகாக இருக்கவேண்டும். காதலி கிடைத்ததும் உள்ளம் அழகாக இருந்தாலே போதும். அப்படித்தானே முகில் என்று அப்போது கேட்டு சிரித்தார் மாமா. அப்போது உடலை பற்றி கவலைப்படாத உள்ளம் இப்போது அதை நொந்து என்ன பயன்?

இரண்டரை மணி நேரப் பயணம் தான், எனினும் பேச்சுத்துணை இல்லாமலோ அல்லது தூங்காமலோ பயணம் செய்வது எனக்கு விருப்பமில்லாது ஒன்று. உனக்கு பிறகு பேச்சுத்துணையாக யாரும் தேவைப்படவில்லை. அல்லது மனம் ஒப்பவில்லை. இப்போது தான் நினைவுக்கு வந்தது. இசைப்பேழையில் இருக்கும் பாட்டுகளை கேட்கலாம். எல்லாம் எனக்கு மிக மிக விருப்பமானவை. ரகுமான் இசையமைத்த பாடல்கள்.

இல்லை. அவை என் விருப்பப் பாடல்கள் மட்டுமன்று. நமக்கு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு பாடலிலும் உன் நினைவும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு பாடலை பற்றியும் எவ்வளவு பேசியிருப்போம். எத்தனை முறை அந்த இசையுடன் பயணித்திருப்போம். வேண்டாம், இப்போது கல்யாணியில் அமைந்த பாடல் கூட எனக்கு முகாரியாக கேட்கும்.

மகாபலிபுரத்தை தாண்டியாயிற்று. இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். கிழக்கு கடற்கரை சாலையின் அழகை மீறி ஏதோவொரு சலிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. சாலையின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டை இப்போது தான் கவனித்தேன். பேருந்தின் வேகத்திற்கேற்ப அதுவும் மூச்சிரைக்க ஓடிவருவது போல் தோன்றுகிறது. பேருந்து நகர நகர அந்த மஞ்சள் கோடு பேருந்து சக்கரங்களோடு ஒட்டுவதும் விலகுவதுமாய் இருந்தது. ஒவ்வொரு முறை விலகும்போது மீண்டும் அதே வேகத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. பல சமயங்களில் சக்கரங்களோடு ஒன்றிணைந்து கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுகிறது. நம் காதல் காலங்களின் ஊடல் பொழுதுகளையும் அதன்பின்னேயான கூடல் கணங்களையும் நினைத்து கொள்கிறேன்.

காதல் கணங்கள் மட்டுமில்லை, அதன் நினைவுகளோடு உறவாடும் தருணங்களும் கூட காலத்தை மறக்கடிக்க செய்யும் சக்திபடைத்தவை போலும். பேருந்து மதுராந்தகம் தாண்டி புதுவைக்குள் நுழைந்துக்கொண்டிருப்பதை நான் உணரவேயில்லை. முத்தியால்பேட்டையில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் தயாராக இருக்கும்படி நடத்துனர் சொல்லும் போது இயல்புக்கு திரும்பினேன்.

பையை தேடியெடுத்து முத்தியால்பேட்டை சந்திப்பில் இறங்கியபோது தான் நினைவுக்கு வந்தது. பேருந்தோடு பயணித்துக்கொண்டிருந்த மஞ்சள் கோட்டை காணவில்லை. எந்த இடத்தோடு நின்றுபோனதென தெரியவில்லை. அதிகாலை பனி கொட்டும் மார்கழி மாதத்திலொரு நாள் திடீரென்று நீ காற்றோடு கலந்து போனதை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை!

அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் - பாவலர் அறிவுமதி
படம் உபயம் : கூகுள்