12 December 2009

பிறந்த நாள் வாழ்த்துகள்


உன் பிறந்த நாளை மறந்துவிட்டு எத்தனையோ முறை உன்னிடம் குட்டு வாங்கியிருக்கிறேன்;
அப்போதெல்லாம் உணராத வலியினை திரட்டிவந்து கொல்கிறது இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு
***


பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?



இதப்படிச்சு துக்கம் தொண்டைய அடைத்தால், அருட்பெருங்கோவின் 'பிறந்த நாள் வாழ்த்து' படிச்சு சந்தோசப்பட்டுக்கோங்க ;-)

இதுவொரு மீள்பதிவு!

10 December 2009

கவின்மிகு கலிபோர்னியா

சான் பிரான்சிஸ்கோவின் தங்கப் பாலம் (The Golden Gate) 1937ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் அதுவே உலகின் மிக நீளமான தொங்குப்பாலமாக இருந்தது. அந்த இடத்தை தக்க வைத்து கொள்ளவில்லையென்ற போதும் இப்போதும் ஒரு மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் சான் பிரான்ஸிஸ்கோவின் அடையாளமாகவும் திகழ்கிறது



அதன் பிரமாண்ட தோற்றமே அதன் சிறப்பு. அத்தனை பெரிய பாலம் நிற்பது வெறும் இரண்டே தூண்களில். அதை வடிவமைத்தவரை பாராட்ட வேண்டும். மேலும் அந்த பாலத்திற்கு எதற்கு இளஞ்சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த இளஞ்சிவப்பு நிறம் மாலை வெயிலில் காண வெகு அற்புதமாய் இருக்கும்.

இரவில் அதிக விளக்கு அலங்காரங்கள் கிடையாது. ஆனால் குறைந்த விளக்குகளிலும் அந்த இளஞ்சிவப்பு நிறம் மிக அழகாய், ரம்மியமாய் இருக்கும்.




தென் கலிபோர்னியாவின் வானிலை எப்போதும் மிதமானதாய் இருக்குமென்ற போதும், சான் பிரான்ஸிஸ்கோ ஒரு சின்ன குன்று என்பதால் அங்கே குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். இருபுறமும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பாலத்தில் குளிர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்

பாலத்தை சுற்றி நிறைய ‘Vista Point' உள்ளன. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாய் அழகாய் தெரியும் அப்பாலம்.

பாலத்தின் எதிரே ஒரு சின்ன மலை உண்டு. அங்கிருந்து பாலத்தையும் அதன் போக்குவரத்தையும் ரசிக்கலாம். மேலிருந்து பார்க்க மேலும் அழகாய் தோன்றும் பாலம். இந்த கோணத்தை தமிழர்கள் அனேகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆம், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா சூர்யாவிடம் தன் காதலை சொல்லும் போது பின்புலத்தில் இருப்பது தான் சான் பிரான்ஸிஸ்கோவின் தங்கப்பாலம்



Photo Courtesy : Girish Karunagaran