16 October 2006

பரிசு

ஊருக்கெல்லாம்
வரமளிக்கும்
ஏழை சாமியை போல;
என் காதலுக்கு மட்டும்
மௌன‌த்தை நீட்டும்
காதல் கவிஞன் நான்.

14 October 2006

"என்னவென்பதாம்??"

உன்னால் கவிதை
படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்??

"நீயில்லாமல்…"

பேருந்துக்கான
நீண்ட காத்திருப்பும்,

பெருங்கூட்டத்திலும்
உறுத்தும் தனிமையும்,

பக்கத்து இருக்கையின்
பரிச்சயமில்லா முகமும்,

நெடும் பயணத்தில்
நெருடும் அமைதியும்,

நீயில்லாத வெறுமையை
வெகுவாய் குத்திக்காட்டுகிறது.

"மழை தருமோ மேகம் ?!"

நீ கூந்தல் துவட்ட,
என் மேல்
தெறித்த
நீர்த்துளிகள் தான்
உறுதி செய்தன
மழை மேகம் கருப்பென்பதை.

"மாயம்"

எத்தனையோ காலமாய்
இதே வழியில்
பயணித்திருந்தாலும்

அந்த தெருமுனை
பெட்டிக்கடையும்
மந்தமாய் விளக்கெரியும்
மளிகைக்கடையும்
இப்போதுதான்
பளிச்செனப் புலப்படுகின்றன

உன் பெயரின்
மாயமாய்
இருக்குமோ?

"சுற்றுலா"

இரண்டு மாதமாய்
திட்டமிட்டு,
‘இந்த வாரம் ஊருக்கு வரமாட்டாயா?’
செல்லச் சண்டையிட்ட அம்மாவிற்க்கு
சமாதானம் சொல்லி,
அலுவலகத்தில்
விடுமுறை போராட்டம்
ஒன்று செய்து;
சொகுசு ஊர்தியிலும்
சுகமில்லா நீண்ட பயணம்
செய்ததெல்லாம்,
என்றோ
உதறிவிட்டு வந்த
மலைகளையும் காடுகளையும்
காணத்தான் !

"விதி"

இது
நியூட்டனின் எத்தனாவது விதியென
கண்டறிய வேண்டும்;

எந்நிலையிலும்
நீ கடக்கும் வேளையில்
கண்கள் தாமாகவே
உனது பிம்பத்தை
நோக்கி நகும்.

"வியப்பு"

அணைக்க அணைக்க
காட்டுத்தீ கூட
அடங்கிவிடும்;

என்னவோ, நீ
அணைக்க அணைக்க
என்னுள்
காதல் தீ
கொழுந்து விட்டு
எரிகிறது!

“காதல் மான்கள்”

திருமணங்களுக்கு செல்லும் போதெல்லாம் இந்த “மான்” கதையை சொல்லி மணமக்களை வாழ்த்துவார் என் தந்தை.. அந்த கதையை கவிதையாக்க ஒரு சிறு முயற்சி

“காதல் மான்கள்”
**********************

பூக்கள் மகிழ்ந்தாடி
கொண்டாடும் சோலை
பகலவன் உச்சியில்
தவமிருக்கும் வேளை

வேலெறியும் விழியோடு
பெண் மானொன்று;
இணையாக துணையாக
ஆண் மானொன்று.

கண்ணொடு ஊறும்
காதலை கண்டு
நெஞ்சொடு வழியும்
நேசங் கொண்டு

எரிக்கும் சூரியனின்
வெப்பம் மறந்து
அச்சம் மடம்
வெட்கம் துறந்து

அழகு சோலையை
சுற்றி திரிந்தன
மணித்துளிகள் கடப்பதை
முற்றிலும் மறந்தன

மோகத்தில் மூழ்கி
கிடந்த இருவரையும்
தாகமும் கொஞ்சம்
வாட்டி வதைத்தது

கோடை வெயிலின்
உக்கிரத்தால் ஆங்கே
ஓடைகள் பலவும்
ஒடுங்கியே கிடந்தன.

சோலையை சுற்றி
களைத்த மான்கள்
மூலையில் அமைந்தவோர்
ஓடையை கண்டன

கருத்த விழிகளில்
பெருத்த ஏமாற்றம்
சிறிதளவு நீரே
சிந்தி கிடந்தது

“இளையவள் நீ- மிக
களைத்தவள் நீ .
அலையாடும் நீரருந்து -உன்
சோர்வுக்கிதே அருமருந்து”

ஆருயிர் காதலிக்கு
ஆண் கட்டளையிட்டது
பொறுக்காத பெண்மானோ
பதிலுக்கு முறையிட்டது

“ஆசை அத்தான்,
இருவருமே களைத்தோம்
யோசனை எதற்கு ?
இருவருமே குடிப்போம் ”

எண்ணத்தில் ஒருமித்த
மான்கள் இரண்டும்
தண்ணீரில் இதழ் பதித்து
பருக துவங்கின

நேரம் கழிந்தது
தண்ணீர் குறையவில்லை;
விபரம் புரிந்தது
யாருமே பருகவில்லை.

காதல் கனவன்
அருந்தட்டும் என்று
பேதை பெண்மான்
நடித்து காட்டியது

துணைவன் செய்ததும்
அதென்றெ அறிந்து
தலைவனை நெருங்கி
இதயம் இணைத்தது.

“கவிஞருக்கு கல்யாணம்”

இனி
நாட்குறிப்புகளை சீண்ட நேரமிருக்காது;
நடந்தவற்றை சொல்ல தோழி வந்த பின்னே !!!

செல்பேசிக்கு செலவே இருக்காது;
விழியாலேயே பேச வஞ்சி வந்தாயிற்றே !!!

விளக்கெரித்து விலகாது இரவு;
அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறதே நிலவு !!!

கவிதைக்கும் நேரம் இருக்குமோ தெரியாது;
கவிதையே துணையாய் இருக்கும் பொழுது ??!!!

“நீ”

உன்னோடு மட்டுமே
பேசி
பழகிவிட்டது
எனக்கு;

நீ இல்லாத பொழுதுகளில்
காகிதங்களோடு
மட்டுமே
பேசி
கவிதை புனைகிறேன்!!!

“மழை”

மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன;

ஏனோ,
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!