திண்ணையை பற்றி என்னை எழுத அழைத்த சரவணகுமாருக்கு நன்றிகள் பல.. [இப்படித்தான் முன்னுரை எழுதனும் அப்படின்னு சரவணகுமார் சொல்லியிருக்காரு :) ]
நகரத்தில் வளர்ந்த எனக்கும் திண்ணைக்கும் அவ்வளவாக சம்பந்தமில்லை என்றாலும், என் வாழ்விலும் மறக்க முடியாத சில திண்ணைகள் இருக்கவே செய்கின்றன
** திருமோகூர் திண்ணை **திருமோகூரில் உள்ள வீடு அம்மாச்சியின் அப்பா கட்டியது. திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு அருகில் அமைந்த வீடு. அக்காலத்தில் அந்த வீடு மட்டும் தான் கல்வீடாக இருந்ததாம். வீட்டு வாயில் வளைவு மேல் பாரத அன்னையின் சிலையும் காந்தியின் சிலையும் இருக்கும். அதனால் இன்றும் திருமோகூரில் அந்த வீட்டை எல்லோருக்கும் அடையாளம் தெரியும்.
பள்ளி விடுமுறைகளில் திருமோகூருக்கு சென்று மிக சொற்பமான நாட்கள் தான் எனினும், அந்த திண்ணையில் விளையாடிய நாட்கள் நன்றாக நினைவிருக்கிறது.
(போன வாரம் மதுரை போக நேர்ந்தபோது எடுத்த புகைப்படம். திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பது அப்பா)
** மதுரை திண்ணை** மதுரை கோரிப்பாளையத்தில் உள்ளது பெரிய அம்மாச்சியின் வீடு. நான் பிறந்தது மதுரையில் தான் என்பதால் என் முதல் சில மாதங்களை நான் அந்த வீட்டில் தான் கழித்திருக்கிறேன். பின் சில கோடை விடுமுறைகளில், எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டையடிக்க, சித்திரை திருவிழாவுக்கு என அடிக்கடி மதுரை சென்றதுண்டு. பெரியவர்கள் எல்லாம் உள்ளறைகளில் தூங்கச் சென்றுவிட அனேகமாய் பிள்ளைகள் அனைவரும் ஓரிரு பெரியவர்கள் கண்காணிப்பில் திண்ணையில் தான் படுத்து உறங்குவோம். நாள் முழுவதும் சாப்பாடு, விளையாட்டு என அங்கே தான் பொழுது கழியும்.
** தேவகோட்டை திண்ணை **
தேவகோட்டை வடக்கு மாசி வீதியில் இருப்பது தாத்தாவின் அப்பா வீடு. அங்கே இருக்கும் திண்ணை தான் மேலே குறிப்பிட்ட திண்ணைகளை விட மிக நீளமானது. வீட்டிற்கு முன் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது நடைபெறும் கூத்து நிகழ்ச்சிகளை விடிய விடிய பார்த்ததுண்டு. தூக்கம் வரும் நேரம் திண்ணையில் படுத்துக்கொண்டு நாடகத்தை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனதுண்டு.
அந்த திண்ணையில் இன்னொரு விசேசமும் உண்டு. இரண்டு திண்ணைக்கும் நடுவே வீட்டுக்குள் செல்ல 3 படிக்கட்டுகள். சரியாக திண்ணைக்கு வெளியே வாசலுக்கருகில் இரண்டு யானையின் உருவங்கள் இருக்கும். செம்மண் நிறத்தில் அழகாய் பளபளப்புடன் இருக்கும். சின்ன வயதில் அதன் துதிக்கையில் சறுக்கி விளையாடியிருக்கிறோம். இப்போது அந்த யானைகள் பார்க்கையில் அவை இடுப்பளவுக்கு கூட இல்லை. (தேவகோட்டைக்கு சென்று திண்ணையின் படத்தை எடுக்கும் வாய்ப்பு கிட்டவில்லை)
தொடர்பதிவுக்கு இரண்டு பேரை அழைக்கனுமாமே...
முதல் நபர்.. தம்பி கார்த்திக்
இரண்டாவதாக தோழி சந்தனமுல்லை
சரவணா, சரியா எழுதிட்டேனாப்பா? :)
15 September 2008
திண்ணை நினைவுகள்
பதித்தது : ச.பிரேம்குமார் 20 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
4 September 2008
பதிவர் ப்ரியனுக்கு திருமண வாழ்த்துக்கள்
காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
பதிவுலக நண்பர் ப்ரியனுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது. எப்படியோ ஆர்குட்டில் உழன்று திரிந்துக்கொண்டிருந்த போது, ஒரு தோழி மூலமாக அறிமுகமானார் ப்ரியன். அவர் மூலமாக தான் பின்பு தமிழ் கூகுள் குழுமங்கள், வலைப்பதிவு, தமிழ்மணம் என்று என் வட்டம் விரிந்தது.
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி
ப்ரியன் திருமணம் காதல் திருமணம் தான். அவர் காதல் கொண்ட கதையை அவர் சொற்களிலேயே படிக்க இங்கே சொடுக்கவும்
தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!
ப்ரியனின் துணைவியார் தான் அவரின் முதல் வாசகி. அவரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட பின்பே ப்ரியனின் கவிதைகள் வலையேற்றப்படுகின்றன. ஒருமுறை ப்ரியனின் கவிதை ஏட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ப்ரியனின் கவிதைகள் ஒருபுறம் இருக்க, பக்கத்திலேயே அவர் இல்லாளின் பின்னூட்டங்கள் சேர்ந்தே இருந்தது. ப்ரியனுக்கு சமமாய் அவரின் துணைவியாரும் இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். ஒரு புத்தகம் கிடைத்துவிட்டால் போதும், அவருக்கு சாப்பாடு, தூக்கம் ஏன் நான் கூட தேவைப்படுவதில்லை என்று ப்ரியன் சொல்வதுண்டு
கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!
இவர்கள் திருமணம் இனிதே நடைபெறவும், அவர்கள் வாழ்வு சிறப்புறவும் வாழ்த்துக்கள். விக்கி, மது... காதலித்துக் கொண்டே இருங்கள்!!!
நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!
திருமண அழைப்பிதழ்
*இந்த பதிவில் இருக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்கள் ப்ரியன் & மது :)
பதித்தது : ச.பிரேம்குமார் 6 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்