10 December 2007

FAKE போடுவது பற்றி "வெட்டிப்பயல்" எழுதத்தான் வேண்டுமா?

வெட்டி போன வாரம் 'மென்பொருள் துறையில் Fake போடுவது எப்படி? - 1 ' ன்னு ஒரு பதிவு போட்டுருந்தார்.

கூடவே இந்த சமாசாரத்தில் சண்டை போட அவகாசம் இல்லைன்னு சொல்லியிருக்காரு. அதுனால பின்னூட்டம் இடாம இங்க ஒரு பதிவாக இடுகிறேன். என்ன இருந்தாலும் புது மாப்பிள்ளை ஆச்சே.... விட்டு பிடிப்போம்
பாலாஜி,
என் மனதில் தோன்றும் முதல் கேள்வி, இந்தப் பதிவு அவசியம் தானா? 'சாப்டுவேர் இஞ்சினீயர் ஆகலாம் வாங்க'ன்னு ஒரு நல்ல தொடரை பதிவிட்ட நீங்கள் இப்படி ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் தான் என்ன?

FAKE போடுவது சரியா தவறா என்பதைத் தாண்டி இந்த பதிவை இட்டது சரியா தவறா என்ற கேள்வி தான் எனக்குள் ஓங்கி நிற்கிறது.

FAKE போடுவது என்பது "நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்ளும் திட்டம்" அன்றி வேறில்லை

பெரிய நிறுவனங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்துச் சென்றால் எப்படியும் கண்டுப்பிடித்து துரத்திவிடுவார்கள். எங்க நிறுவனத்தில் எல்லாம் அப்படிப்பட்டவர்களின் குட்டு வெளிப்படுகையில், வெகு சொற்ப நேரத்திலேயே காரியங்கள் முடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். அவமானமும் மீண்டும் ஒரு வேலை தேடும் சூழ்நிலையும் தான் மிச்சம்.

சின்ன நிறுவங்களில் பொய்யான தகவல்கள் கொடுத்தாலோ வேறு வகையில் சிக்கல். முக்கால்வாசி நேரங்களில் பொய் தகவல்கள் அளிப்போர் சுமாரான படிப்பாளிகளாகவே இருப்பார்கள். புதிதாய் வேலை சேரும் இடத்திலோ கொடுக்குப்படும் வேலை பளு தலைக்கு மேல் அழுத்தும். அப்போது நீங்கள் புதிதாய் படித்து தெரிந்துக்கொள்ள சமயம் இருக்காது. அந்த சமயம் நீங்கள் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தால் எப்படியும் குட்டு வெளிப்பட்டுவிடும்

இந்தியாவில் இன்றைய அளவில் புதிதாய் படித்து பட்டம் பெறுபவர்களுக்கே ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. FAKE போடவேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அப்படி இருப்பினும் இந்த பதிவு அவசியமில்லை என்பது என் கருத்து.....

நெருடியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை

8 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

Its unethical for sure to provide guidance for others to be unethical! I cant believe there are so many folks out there supporting the effort.

பிரேம்குமார் said...

எனக்கும் யாருமே இது தவறு என்று சொல்லாதது மிகுந்து வருத்தம் :(

செந்தழல் ரவி said...

வேற வழி ??

உங்கள மாதிரி இண்டலிஜெண்டலி ஸ்டூடண்டுங்க டிஸ்டிங்ஷன் மார்க்கெடுத்து கேம்பஸ் இண்டர்வியூக்களை பிரிச்சு மேய்ஞ்சு சாப்ட்வேர் கம்பெனியில ஏர்கண்டிஷனுக்கு உள்ளார குந்திருவீங்க...

நீங்க ஒரு பத்து சதவீதம் இருப்பீங்க...

மீதி 90 சதவீதம் ???

வேலைகேட்டு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி, வாச்சுமேன் கிட்ட ரெஸ்யூம் கொடுத்து, கன்ஸல்டன்ஸிக்காரன் பொழுதுபோகாம செய்யுற போன் காலுக்கு தெய்வமே நேர்லவந்தமாதிரி மரியாதை கொடுத்து பேசி, ஸாரி சார், உங்க ப்ரொபைல் சூட்டாகல அப்படீங்கற வார்த்தையை திருப்பி திருப்பி கேட்டு, போனவருஷமே டாட் நெட் படிச்சிருந்தா இந்த நேரத்துக்கு வேலை கிடைச்சிருக்குமோ, மெயின்ப்ரேம் மேப்பிள்ஸ்ல படிக்கலாமா..அதுக்கு அப்பன் ஒத்தையா கட்டின வீட்டைத்தான் அடமானம் வெக்கனும்னு வெதும்பி...

தோனித்தொலங்கி எவனாவது இண்டர்விட்யூவுக்கு கூப்பிட்டா, எக்ஸூஸ்மீ, 2005 பாஸவுட் நீங்க, ரெண்டு வருஷமா என்ன செய்தீங்க..இது 2006 சார்..இது 2007...நீங்க கெளம்பலாம்னு வெம்பி வெளிய வர 90 சதவீதம் பேரு...

இந்த பொய்தகவல் மூலமாகத்தான் உள்ளார போகனும்...

எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு எல்லா கம்பெனியிலயும் கேட்டா, கேம்பஸ் இண்டர்வியூவுல பாஸ் ஆகாதவனோ, இல்லை கேம்பஸ் அப்படீன்னா என்னான்னே தெரியாத நூத்துக்கணக்கான பொறியியல் கல்லூரிகளில் இருந்து வந்தவனோ, வேலைக்கே போவமுடியாது சாமி...

அதுக்குத்தான் இந்த பொய்த்தகவல்....

FAKE இல்லாத ரெஸ்யூம் உலகத்தில் ஏதப்பா ? பில் கேட்ஸ் நாளைக்கு ரெஸ்யூம் போட்டாலும் அதிலயும் FAKE இருக்கும் என்பது என்னுடைய கருத்து...

பொய் சொல்றது தப்பு அப்படீன்னு சொல்லலாம் நீங்க...

"பொய்மையும் வாய்மையிடத்து" அப்படீன்னு எழுத்தாணி வெச்சு எழுதின திருக்குறள் இருக்கே நம்மகிட்ட...

கடைசியா ஒரு நிகழ்ச்சியோட முடிக்கறேன்

என்னுடைய அணிக்கு மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க சென்ற மாதம் நேர்முகத்தேர்வு வைத்தேன்...இரண்டு ஆண்டு அனுபவம் கேட்டிருந்தேன்...மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்து என்னிடம் அனுப்பினார்கள்...

ரெஸ்யூமை பார்த்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது அவர்கள் மூவரில் ஒருவர் கூட உண்மையான நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று...கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகள் இதே துறையில் இருக்கும் எனக்கு எந்த நிறுவனம் எந்த தெருவில் இருக்கு என்று கூட அத்துப்படி...இதை கண்டுபிடிக்க முடியாதா ?

இருந்தாலும், என்னுடைய வேலை, டெஸ்டிங் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது...நான் அதிகபட்சமாக எதிர்பார்த்தது, குழு உறுப்பினர்களுடன் நன்றாக பழகக்கூடிய, நல்ல ஆங்கில அறிவுடைய, டெஸ்டிங் பற்றி அதிக/குறைந்த பட்ச அறிவுடையவர்களை...

அவர்களிடம் இருந்தது...தேர்வு செய்தேன்...

சிறப்பாக பணி புரிகின்றனர் இப்போது...

இப்ப சொல்லுங்க....உங்க கருத்தை...அடுத்தவன் வலியை புரிஞ்சுக்கோங்க சார்...சும்மா குற்றம் கண்டுபிடிக்காதீங்க...
வேலை செய்யறோம், சம்பளம் தறான்...

பிரேம்குமார் said...

வணக்கம் ரவி,

முதலில் இத்தனை பெரிய பின்னூட்டம் இட்டதற்கு நன்றி

சரி, என்னைப் பத்தியும் நான் வேலை வாங்கியதை பத்தியும் கொஞ்சம் சொல்லிடுறேன்.

நான் ஒரு பொறியியல் கல்லூரியில் MCA படித்தேன். கல்லூரியில் வளாகத்தேர்வு இருந்தாலும், MCA மாணவர்களை அதிகமாக எடுக்கப்படமாட்டார்கள்.

கிட்டத்தட்ட வளாகத்தேர்வுக்கு வந்த அனைத்து நிறுவணங்களின் எழுத்துத்தேர்விலும் எங்கள் வகுப்பு மாணவர்கள் வெற்றிப் பெற்றுதுண்டு. ஆனால் நேர்முகத்தேர்வில் கழட்டிவிட்டு விடுவார்கள். போராடித்தான் வேலை வாங்கினோம்

குறிப்பாக நான் படிப்பு முடிந்தப்பின்னும் வேலை இல்லாமல் தான் இருந்தேன். சென்னையில் தங்கி, நீங்கள் சொன்னது போல் சென்னையின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு சென்று, ரெஸ்யூம் கொடுத்து, HRஐ சந்திக்க காத்திருந்து...... எல்லாவற்றையும் நானும் சந்தித்திருக்கிறேன்

பின் HINDU SUNDAY CLASSIFIEDS பார்த்து , 5 சுற்றுத்தேர்வை சந்தித்து ஒரு சிறிய நிறுவனத்தில் (மொத்தமே 6 பேர்) சேர்ந்தேன்.

பின்னாளில் 2000+ பேர் கலந்துக்கொண்ட OFF CAMPUS மூலமாக ஒரு MNCயில் சேர நேர்ந்தது

இப்போ நான் எந்த பிரிவைச் சேர்ந்தவன் என்று நீங்கள் சொல்லுங்கள்.

Hari Haran said...

இதையாரும் தவறு என சொல்ல மாட்டார்கள் திரு. பிரேம் அவர்களே...

நீங்கள் இருப்பது குளுகுளு மேடையில் கையில் ஒரு மைக் கிடைத்தால் தத்துவங்கள் வரும் ஆனால் சுடும் மணலில் அமர்த்து பாரும் அதன் வலிதெரியும்... என்னமோ கம்பனி உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அறிவாளி போலவும் fake போடுபவன் எல்லோரும் சரியாக படிக்காதவர்கள் போலவும் நினைக்கறிங்க.அப்படி பாத்த PM, ML, TL தங்களின் அதிகாரத்தை பிரகியோகித்து தனது உடன் பிறப்புக்களை எல்லாம் சேர்த்து விடுகின்றனர். வேண்டுமானால் இதில் இண்டர்வியு ப்ரொசெஸ்யை சரியாக கடைபிடித்து இருக்கலாம் ஆனால் முடிவு முன்பே அறியப்படதாகும். where has your ethic gone ????குடும்பத்திலே முதல் முறையாக பொறியல் படித்தவன் எங்கே போவான்??? இதில் இண்ட்ர்வியுவில் கிடைக்கும் பேனல் மிக முக்கியம். தங்கள் இஷ்டத்திற்க்கு கேள்விகளை கேட்பார்கள்.

இது ஒரு உண்மை சம்பவம் :

ஒரு இண்டர்வியுவில் நடந்த சம்பவம் ஒரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what will you do if a theif enter your home" அதுவே மற்றுமொரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what is the name of the mechanical magazine which has been famous in the recent days in US"
interivew atten பண்ணிய இருவருமே information technology stream யை சேர்ந்தவர்கள். IT க்கும் mechnical magazie க்கும் என்ன சம்மந்தம்???
இவ்வாறு வாய்ப்பை தவற விட்டவர்கள் எங்கே போவது???? self confindent, enthusiasm, motivation இவை தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக அவசியமான ஒன்று... அதையே மூச்சாக கொண்டு மனம் தளறாமல் வருடக்கனக்கில் வேலை தேடினால் only 2006 is eligible... only 2007 is eligible... what you have been doing this much days???? என்னதான் செய்வார்கள்???? இதோ இது போன்ற கிறுக்குதனமான கேள்விகலோ இல்லை criteria வோ இல்லை என்றால் யாரும் fake போடமாட்டர்கள்...


யாரும் விரும்பி தவறு செய்ய மாட்டார்கள்... தகுதி இருந்தும் கிடைக்கவில்லை... குடும்பத்தில் உதவ யாரும்மில்லை... குடும்ப சுமை... பணம் வேண்டும் கிடைக்கும் வழிய பயன்படுத்திக் கொள்கின்றனர்.

செந்தழல் ரவி said...

என்னுடைய பதில் நீங்க எந்த பிரிவைச்சேர்ந்தவர் என்ற முன்முடிவை நான் எடுத்துவிட்டதாக நினைக்கவைத்துவிட்டது...அது தவறு...

ஆனால் நான் உங்களை குற்றம் சாட்டவில்லை...இன்னைக்கு பொய்த்தகவல் ரெஸ்யூமில் போடாதே என்று அந்த பதிவில் சொல்லியுள்ள ஒரு சிலரை வைத்துத்தான் சொன்னேன்...

நீங்க சொன்னீங்களே குட்டி கம்பெனி, அதுல கூட இப்பல்லாம் இடம் கிடைக்கறதில்லைங்னா...ஆனா விப்ரோ / சத்யம் / சி.டி.எஸ் னு கொத்துக்கொத்தா எடுக்குறானுங்க...

இந்த வருடம் (2008) விப்ரோ நிறுவனம் 14,000 இளம்பொறியாளர்களை எடுக்கப்போவுதாம்...

சின்னதா நினைச்சா சின்னதா அச்சீவ் பண்ணமுடியும்...பெருசா நினைச்சாத்தான் பெருச்சாளியா...ச்சே பெருசா :))))

ஒரு போட்டி வைப்போம்...நீங்கள் இருக்கும் நிறுவனத்தில் பொய்யான தகவல் இருக்கும் ரெஸ்யூம் உள்ளவர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிடுவோம்...எத்தனை பேர் மீதி இருக்காங்க என்று பார்ப்போம்...ஓக்கேவா ?

செய்யற வேலைக்கு கூலி...அவ்ளோ தான்...அதுக்கு மேல டார்ச்சராவாதே என்பது தான் என் கருத்து...

உங்களுக்கு கிடைச்சமாதிரி சின்ன கம்பெனியில் சேரும் வாய்ப்பு இன்றைக்கு பலருக்கு கிடைக்கறதில்லீங்க...அது தான் மேட்டர்...

பிரேம்குமார் said...

ரவி,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான். FAKE RESUME போடுவது சரியா தவறாங்குறத தாண்டி ஒரு பதிவு போட்டு அத நியாயப்படுத்தனுமாங்குறது தான் என் கேள்வி, வருத்தம் எல்லாம் :(

அப்புறம், எங்க நிறுவணத்தில் FRESHERக்கு கூட BACKGROUND CHECK நடக்குது. FAKEன்னு தெரிஞ்சா யாரா இருந்தாலும் GET OUT தான்

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். எங்க ப்ராஜக்ட்டில் வேலை செய்த ஒருந்தங்க சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக போகுது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி விசா ப்ராஸஸிங் நடந்தது. அந்த சமயம் பார்த்து அவுங்க FAKE RESUME போட்டு வந்தவுங்கன்னு தெரிஞ்சு போச்சு.

அவுங்க முக்கியமான RESOURCE அப்படின்னு அவுங்க TEAM LEAD வாதிட்டும் அவுங்க அனுப்பிட்டாங்க... இல்லை இல்லை துரத்திட்டாங்க

Anonymous said...

This FAKE problem shall be solved if companies are willing to give a chance... There are many reasons that company is not taking many indidivuals like 2005 passout, no language skills, etc.. inspite of having many vacancies...

Why not hire them on a contract basis for 3 months, then absorb them if found suitable? But organisation should be honest on this. This will give those guys a chance to prove that they can be fit to the organisation who had not got into their in first place