13 March 2008

நானும் காதலிக்கிறேன் - 2

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

- அருட்பெருங்கோ



“ஏன் தம்பி? இந்த செல்பேசியை வாங்குன புதுசுலக் கூட அதை இப்படி கட்டிக்கிட்டி திரிய மாட்டே. இப்ப என்னடான்னா, கங்காரு மாதிரி அத எப்பப் பாத்தாலும் சுமந்துக்கிட்டே இருக்கே. சாப்பிடும் போதாவது அதக் கொஞ்சம் தள்ளி வைக்கக் கூடாதா?” அம்மா கேட்ட போது கார்த்திக் ஒரு பெரும் புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான். அவனுக்கே அந்த மாற்றம் விசித்திரமாய் தான் இருந்தது. வீட்டிலேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் பேசாதவன் இப்போதெல்லாம் தர்ஷினியிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறான். செல்பேசியில் பேசிப்பேசி அவன் காதுகளில் சென்னையின் சூடு இருந்தாலும், உள்ளத்திலோ ஊட்டியின் குளுமைதான் இருந்தது.

- - - o0o - - -


அலுவலகத்தின் உணவறைக்கு கார்த்திக்கும் அவன் நண்பன் ரமணியும் நுழைந்து எதை சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை, அவர்களோடு பணிபுரியும் செந்திலும் அங்கு வந்தடைந்தான்.

செ : ‘ஏன்ப்பா கார்த்தி, அந்த headphones’அ கழட்டவே மாட்டியா? இசையார்வம் இருக்க வேண்டியது தான், அதுக்காக…..’

இடையிலேயே மறித்த ரமணி சிரித்துக்கொண்டே சொன்னான் ‘செந்தில், அவன் பாட்டு கேக்குறானா இல்லை கடலைய போடுறானான்னு சரியா கவனி’

செ: ‘நண்பா சொல்லவே இல்லை, என்ன நடக்குது இங்கே’

ர: ‘யோவ் விசயமே தெரியாதா? பையன் போன மாசம் மட்டும் செல்பேசிக் கட்டணமா இரண்டாயிரம் ரூபாய் கட்டியிருக்கான். இதுக்கு மேல நீயே யூகிச்சிக்கோ’

செ: ‘கார்த்திக், சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டியா? யாரு? என்ன செய்யுறாங்க? எப்போ கல்யாணம்? சொல்லுப்பா சொல்லு. முக்கியமா விருந்து எப்போ சொல்லு’

கா: ‘ஏஞ்சாமி, நான் அரசமரத்த சுத்துறேனா புளியமரத்த சுத்துறேனான்னே இன்னும் தெரியல. நீ அதுக்குள்ள புள்ளைக்கு பேர் வைக்க கெளிம்பிட்ட. உனக்கு என்ன, எப்படியோ என்கிட்ட ஆட்டய போட்டு, பொன்னுசாமில ஆடு திங்கனும். அதானே உன் கணக்கு?!’

ர: சரி, அதெல்லாம் இருக்கட்டும், ஞாயிற்றுக்கிழமை வெளில போறதா இருந்தீங்களே, போனீங்களா?

கா: ம்ம்ம்

ர: அடிங்க, நாங்க என்ன கதையா சொல்றோம், ம்ம்ம் கொட்டுற?

கா: ம்ம்ம், ஸ்க்ரைப் பண்ணப் போனோம்டா

செ: ஸ்க்ரைபா? அதென்னடா, எதாவது குதூகலமான விளையாட்டா?

கா: ‘யோவ் யோவ், நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா? ஸ்க்ரைப்னா, பார்வையற்றோர்க்கு ப்ரெயில் முறையில் இல்லாத பாடங்களை படித்துக் காட்டுவது, அவுங்க சொல்லச் சொல்ல அவர்களுக்காக தேர்வு எழுதுவது மாதிரியான விசயங்கள்’.

செ: அடப்பாவி, பொண்ணுக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வரவைக்க இப்படி ஒரு முயற்சியா? படம் தாங்கலியே

கா: நீ வேற, தர்ஷினி இத ரொம்ப வருசமா செய்துக்கிட்டு இருக்காளாம். நான் சும்மா கூட தான் போனேன். ஆனா அங்க போன உடனே எனக்கும் ஒரு ஆர்வம் வந்துருச்சு. உருப்படியா ஏதோ செஞ்சோம்னு மனசுக்கு நிறைவா இருந்துச்சு’

ர: கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கார்த்தி.

செ: நல்ல விசயம் தான். ஆனா புல்லரிப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. கூடவே நேரமும். சங்கத்தை உடனே கலைங்க. அப்புறம் மேலாளர் கோளாறு பண்ணிடுவாரு.


- - - o0o - - -


ஞாயிறு மாலை 5 மணி

“வித்யா, எங்கம்மா கெளம்பிக்கிட்டுருக்கே?” கார்த்திக்கின் கேள்வியில் அதிர்ந்தே போனாள் வித்யா.
“என்னடா திடீர்ன்னு பாசம் பொங்குது? கல்லூரித் தோழி ஒருத்தியோட கல்யாணத்திற்கு போறேன்”
“எங்கே?”
“வடபழினியில”
“அவ்வளவு தூரம் எப்படி தனியா போவே? இரு, நானும் வரேன்” என்று நகரப் பார்த்தவனைப் பிடித்து நிறுத்தினாள் வித்யா
“யேய் என்ன இதெல்லாம். ஓவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு சோழிங்கநல்லூர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு நாள் கூட கஷ்டமா இருக்கான்னு விசாரிச்சதில்லை. இன்னிக்கு கே.கே. நகரில இருந்து வடபழநி தூரமா தெரியுதுன்னா கண்டிப்பா ஏதோ உள்குத்து இருக்கு” என்றபோது வித்யாவின் பார்வையில் ஆச்சரியமும் சந்தேகமும் சரிக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தன.

தர்ஷினி அந்த திருமணத்திற்கு வரப்போவதை கார்த்திக் அறிவான். ஆனால் அது வித்யாவிற்கு தெரியுமா தெரியாதா? தெரிந்தே கேட்கிறாளா ? எதுவும் புரியாது குழம்பித் தவித்தான். இருந்தாலும் ஏற்கனவே தனக்கு தெரியும் என்பதை வித்யாவிற்குக் காட்டிக்கொள்ள விரும்பாமல்

“அட தனியா போறியேன்னு கேட்டா இப்படி அபாண்டமா பழிப்போடுற? போம்மா, என் மனசக் கஷ்டப்படுத்திட்டே” எனச் சொல்லிவிட்டு வித்யாவின் பதிலை எதிர்பாராமலேயே கிளம்பலானான் கார்த்திக்.

எப்போதும் உடைகளில் கவனம் செலுத்தாதவன், அன்றைக்கு ஒரு மணி நேரமாய் தயாராகிக் கொண்டிருந்தான். தனக்கு பொருத்தமான உடைகளை உடுத்தினான். அவனைப் போல் படியாத அவன் தலைமுடியும் இன்று அழகாய் படிந்துவிட்டது. ஒரு வேளை கார்த்திக்கும் சீக்கிரமே யாரிடமும் பணிந்துவிடுவானோ என்னவோ? அவன் உதட்டில் மலர்ந்து உதிர்வேனா என்று அடம்பிடித்த புன்னகையோஅவனை மேலும் அழகாய் காட்டிக்கொண்டிருந்தது.

திருமணக் கூடத்தில் நுழைந்ததுமே எதிர்ப்பட்டாள் தர்ஷினி. அந்தி வானத்தில் கொஞ்சம் கிழித்தெடுத்து புடவையாய் தரித்திருந்தாள். ஆனால் அந்திவானம் மின்னுமா? இவள் புடவை மின்னுதே? ஒரு வேளை அவள் மினுமினுப்பு அந்த புடவையிலும் ஒட்டியிருக்கக் கூடும். விண்மீன்கள் இரண்டை பறித்து காதுகளில் மாட்டியிருந்தாள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு தர்ஷினியுடையது. ஆனால் இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது தான் கார்த்திக்கின் கண்களுக்கு திடீரென தர்ஷினி அழகாய் தெரிகிறாள்.

‘அழகான பெண்கள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை
காதலிக்கப்படும் பெண்கள் எல்லாம் அழகாய் இருக்கிறார்கள்’
என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

இன்றும் தர்ஷினியை வீடு வரைக்கும் கொண்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டு தர்ஷினியின் பக்கமே பார்வையை வீசிக்கொண்டிருந்தபோது , ‘நேரமாயிடுச்சு, கிளம்பலாமா?’ எனச்சொல்லிக் கொண்டே கிளம்பினாள் வித்யா. கார்த்திக்கால் மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை. நேரம் சரியில்லைன்னா ஒட்டகத்துல போனாலும் நாய் எகிறி வந்து கடிக்கும்’னு சும்மாவா சொன்னாங்க என்று நினைத்துக்கொண்டே வித்யாவை பின் தொடர்ந்தான்

- மீண்டும் காதலிப்போம்

நானும் காதலிக்கிறேன் - 1

9 க‌ருத்துக்க‌ள்:

எழில்பாரதி said...

பிரேம் அண்ணா!!!!

சூப்பர்.......

கோபிநாத் said...

ஆகா...மாப்பி சூப்பராக போகுது(உன்)காதல் கதை ;))

நண்பர் கலாய்ப்பு எல்லாம் டாப்பு ராசா ;))

கோபிநாத் said...

\\திருமணக் கூடத்தில் நுழைந்ததுமே எதிர்ப்பட்டாள் தர்ஷினி. அந்தி வானத்தில் கொஞ்சம் கிழித்தெடுத்து புடவையாய் தரித்திருந்தாள். ஆனால் அந்திவானம் மின்னுமா? இவள் புடவை மின்னுதே? ஒரு வேளை அவள் மினுமினுப்பு அந்த புடவையிலும் ஒட்டியிருக்கக் கூடும். விண்மீன்கள் இரண்டை பறித்து காதுகளில் மாட்டியிருந்தாள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு தர்ஷினியுடையது. ஆனால் இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது தான் கார்த்திக்கின் கண்களுக்கு திடீரென தர்ஷினி அழகாய் தெரிகிறாள்.\\\


அட அட மாப்பி சூப்பருய்யா ;)

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்...ஓழுங்க அடுத்த பதிவை ரொம்ப நேரம் எடுக்கமால் போடு மாப்பி.

அப்புறம் இதை ஏன் "வகைப்படுத்தாதவை"யில சேர்த்துயிருக்க..!?

ச.பிரேம்குமார் said...

நன்றி எழில் :)

ஸ்ரீ said...

ம்ம்ம் நல்லா கீதுபா அப்படியே வேகமா கதைய ஓட்டிக்கிட்டு போய்டுங்க :)

Arun Prasad R said...

அடுத்த பகுதிக்கு காத்து கொண்டிருக்கிறேன்!!!

ச.பிரேம்குமார் said...

ஸ்ரீ & அருண்,
வருகைக்கு நன்றி....

சீக்கிரமே அடுத்த பாகம் வரும்

J J Reegan said...

// இன்னிக்கு கே.கே. நகரில இருந்து வடபழநி தூரமா தெரியுதுன்னா கண்டிப்பா ஏதோ உள்குத்து இருக்கு //

எல்லா வீட்லும் இந்த மாதிரி ஒரு அவ்வையார் இருக்குங்க...
கதை சூப்பரா போகுதுங்கோ...
சீக்கிரமா அடுத்த பதிவு போடுங்க...

Karthik said...

வரிக்கு வரி கார்த்திக்கு, கார்த்திக்குனு எழுதிட்டு, கடைசியில தர்ஷினி அமெரிக்க மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்பா வார்த்தைய மீற முடியல, கார்த்திக் பாவம் கவிதை எழுத்திக்கிட்டு இருக்கான்னு மட்டும் முடிச்சிருந்தீங்க, அவ்வளவுதான்.
:)