24 February 2009

அது காதல் காலம்

'சின்ன சின்ன ஆசை' அப்போது அத்தனை பிரபலம். பாடலின் வரிகள் மனப்பாடமாய் தெரியும். பாடங்களில் எப்போதும் அந்த நினைவாற்றல் உதவிதாய் நினைவேயில்லை. பள்ளியில், விழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பாடச் சொன்னால் அவர்கள் முதல் தேர்வு 'சின்ன சின்ன ஆசை' பாடல் தான்.

மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

புதிய முகம் பாடல்களில் அத்தனை இனிமை அமைதியும் கலந்திருக்கும். இரவின் அமைதியில் காதோரம் அவை ஒலிக்கும் போது அன்றைய பொழுதின் அத்தனை அலுப்பும் மறைந்து உறக்கத்தை நோக்கிய இனிமையான பயணம் ஆரம்பமாகும்

நேற்று இல்லாத மாற்றம் என்னது?
காற்று என் காதில் ஏதோ சொன்னது...

திருடா திருடா வரும் போது ரகுமானின் இசைக்கு பெரிய விசிறியாகிருந்தேன். எப்போதும் டேப் ரிகார்டரில் ரகுமான் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம்
ஏந்தி ஏந்தி இங்க வர வேண்டும்


என்னவளே அடி என்னவளே என்று உன்னிகிருஷ்னன் உருகியபோது நானும் கொஞ்சம் உருகிக்கொள்வேன். மனதிற்குள் வருங்கால காதலிக்காக சமர்ப்பனம் செய்து கொள்வேன்.

காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிசமும் வருசமடி
கண்கள் எல்லாம் பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோன்றுதடி
இத சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி


காதலிக்கும் நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை. இருப்பினும் ரகுமானின் காதல் பாடல்கள் அத்தனை பிரியத்திற்கு உரியதாய் இருந்தன. பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்ததால் காதல் பாடல்கள் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்திருக்கலாம். 'உயிரே உயிரே' என்று அர்விந்த்சுவாமி உருகும் போது இல்லாத காதலிக்காக நானும் உருகியிருக்கிறேன். இது அனேகமாக காதல் செய்த காயமில்லை... இசை செய்த மாயம் தான்

என்னுயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன்மீது பழிபாடும் பெண்ணே
அதற்காக்த்தான் வாடினேன்


கிட்டத்தட்ட நண்பர்கள் வட்டத்தில் எல்லோருமே ரகுமான் இசையில் மயங்கியவர்களாகவே இருந்தனர். அடுத்து அவர் எந்தப் படத்திற்கு இசைமைக்கப் போகிறார், எந்த ஒலிநாடா எப்போது வெளிவரும் என்று எல்லா தகவல்களையும் சேகரித்து வைத்திருப்போம். ஒலிநாடா வந்ததும் யார் முதலில் வாங்குவது என்று போட்டி வேறு நடக்கும்

ஒரு புறம் ரகுமான் தமிழில் இசையமைப்பது குறைந்த போனது, இன்னொரு புறம் இசையோடு நான் செலவிட்ட நேரம் குறைந்தது. ஆனாலும் அவர் இசைக்கு இன்னும் நான் ரசிகனாகவே இருக்கிறேன். என் பதின் வயது நினைவுகளில் அவர் இசை நிறையவே ஆக்ரமிப்பு செய்திருப்பதால், என்றுமே அந்த இசைக்கு என் மனதில் ஒரு தனியிடம் இருக்கும் :)

Slumdog Millionaire படம் குறித்து எனக்கு நிறைய அதிருப்தி இருக்கிறது. அதே போல், ஒரு தமிழ் படத்திற்காக இந்த விருதை வாங்கவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. ஆனால் அவர் வாங்கி வந்த இரண்டு ஆஸ்கார்கள் முன் இதெல்லாம் தூசு.

முக்கியமாக ஆஸ்கார் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று மறக்காமல் தமிழில் கூறியது மிகவும் மகிழ்ச்சி.

இன்னும் நிறைய விருதுகளை வாங்க என்னைப் போல பல்லாயிரம் ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்.

"எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. நீ நதி போல ஓடிக்கொண்டிரு"

14 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

நல்ல ஒரு மீட்டெடுப்பு

அந்த காலங்களில் சற்றே பயணித்தேன்

KARTHIK said...

// மனதிற்குள் வருங்கால காதலிக்காக சமர்ப்பனம் செய்து கொள்வேன்.//

இன்னுமா

பையன் கீது பாத்துவெக்கப்போரான்.

நல்ல பதிவு.

சந்தனமுல்லை said...

நல்ல இசைக் கொசுவத்தி!


//இன்னும் நிறைய விருதுகளை வாங்க என்னைப் போல பல்லாயிரம் ரசிகர்களின் வாழ்த்து எப்போதும் உங்களுடன் இருக்கும்.//

ஆமா!

கார்த்திகைப் பாண்டியன் said...

நானும் ரஹ்மானின் தீவிர ரசிகன் பிரேம்.. அவருடைய ஆரம்ப காலப் பாடல்கள் போல் இப்போது வருவதில்லையே என்னும் வருத்தமும் உண்டு.. நல்ல பதிவு.. அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

அன்புடன் அருணா said...

நல்ல தொகுப்பு....
அன்புடன் அருணா

ராம்.CM said...

முதலில் 'ஸாரி' செல்லிக்கொள்கிறேன்! தகவல் சொல்லாமல் ஊருக்கு சென்றதற்காக...என் துணைவியாரையும்,என் வாரிசையும் அழைத்துவருவதற்காக 10 தினங்கள் விடுமுறையில் சென்றேன்.

"வழக்கொழிந்த சொற்கள்"
வருகிறேன் போட்டிக்கு.. பார்த்துவிடலாம் ஒருகை.


//மிகவும் பெருமையாயிருக்கிறது ரகுமான். வாழ்த்துகள் :)// என் வாழ்த்துக்க‌ளையும் இணைத்துக்கொள்கிறேன்.

தாங்கள் கூறிய அனைத்து பாட‌ல்க‌ளில் நானும் நீந்தியுள்ளேன்.
எத்த‌னையோ பாட‌ல்க‌ள் இருந்தாலும் என‌க்கு பிடித்த‌ க‌வ‌ர்ந்த‌ பாட‌ல் ஒன்று உள்ள‌து. உங்க‌ளுக்காக‌ அதை ப‌திவாக‌ போடபோகிறேன்.



உட‌ன‌டியாக‌....

நவநீதன் said...

A.R. ரஹ்மானின் இசைக்கு அகராதியில் பொருள் பார்த்தால் நுணுக்கமான இசை என்று இருக்கும்....! நுண்ணிய குவாலிட்டி இசை என்றால் அது ரஹுமானுடையது தான்....!

மற்றபடி, slumdog க்கில் "ஜெய் ஹோ" பாடலை நானும் கேட்டேன். அதை விட மிக சிறந்த பாடல்களை ஏற்கனவே போட்டிருக்காரே என்ற எண்ணம் தான் வந்தது...! விடுங்க பாஸ்...! பேரிக்கா காரன் மூளை அவ்வளவுதான்...!

Karthik said...

பிரேம், நீங்க கொஞ்சம் அடிக்கடி எழுதப் பாருங்களேன். சூப்பர்ப்பா இருக்கு.
:)

Karthik said...

தலைப்பை பார்த்துட்டு நான் வேறு எதையோ எதிர்பார்த்து வந்தேன்.
ஹி..ஹி.

ராம்.CM said...

ஹாய்!ப்ரேம். பாடல் பதிவு..... போட்டாச்சு..போட்டாச்சு...

Anonymous said...

காதல் செய்த காயமில்லை... இசை செய்த மாயம் தான்
அதுதான் ரஹ்மானின் திறமை.. எல்லா புகழும் அவன் திறமைக்கே...

Anonymous said...

பிரேம்,

திறமைக்கு எப்பவோ கிடைக்க வேண்டியது, இப்பதான் கிடைச்சிருக்கு, அப்படி எடுத்துக்க வேண்டியதுதான்

ரகுமான் இசையமைத்தார் என்ற ஒரே காரணத்திற்காகவே, எத்தனையோ படங்களின் கேசட்களை வாங்கிய காலம் இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது

ஜெய ஜோ ரகுமான்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேம்.. உங்கள் கவனத்திற்கு.. வழக்கொழிந்த தமிழ் வார்த்தைகள் பதிவுகள் போட்டு விட்டேன்..

DHANS said...

ரகுமான் பாடல்கள் பலவற்றிற்கு ஆஸ்கர் குடுக்க வேண்டும். நன் சில ரகுமான் பாடல்களை என் அலுவலக நண்பர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் போட்டு காட்டினேன் ஆண்டிலிருந்து அவர்கள் ரகுமான் ரசிகர்கள் அஹினர், அவர் அஸ்கர் வாங்கின அடுத்த நாள் மெயில் அனுப்பி வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.