ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!
வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!
துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்
11 June 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : மனிதத்தைத் தேடி
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : சூப்பர் சிங்கர்களும் சிற்சில சிக்கல்களும்
விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்
வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.
அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது
நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க நமக்கு பக்குவம் இருக்கிறதா?
பதித்தது : ச.பிரேம்குமார் 11 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
10 June 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொலைத்த தெருக்கள்
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : கேள்விகள் ஆயிரம்
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நடுவண் அரசில் வேலை செய்ததால் ஒரு இந்தியப் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பி அப்பா வைத்தது. என் பெற்றோர் ஆசையாக இட்ட பெயரை பிடிக்கவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் என்றே நினைக்கிறேன்
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் அம்மாச்சி இறந்த போது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் எங்களுக்கு பல கதைகள் சொல்லி, வகைவகையாய் சமைத்து போட்டுவர் வாய்க்கு அரிசி போட்ட போது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என் கையெழுத்து அழகாக இருப்பதாக பலர் கூறியிருக்கின்றனர். ஆனால் கல்லூரிக்கு பிறகு எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. இப்போ கொஞ்சம் கிறுக்க ஆரம்பித்துவிட்டேன்
4.பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் சமைத்தது எதுவும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பலரை எனக்கு பாத்தவுடனேயே ரொம்ப பிடிச்சிரும். ஆனா நட்பு பலப்பட சில காலம் பிடிக்கலாம்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
நீச்சல் தெரியாதெனிலும் கடலில் நெஞ்சளவு தண்ணீரில் இறங்கி குளிப்பதுண்டு.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் எப்படி பேசுகிறார்கள்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயத்தை மத்தவங்க தான் சொல்லனும்
பிடிக்காதது கோபமும் சோம்பேறித்தனமும்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்தது அவள் அன்பு. பிடிக்காதது அவள் கோபம்
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
பொழில்குட்டி
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சாமி படத்துல “பாஸ்போர்ட சைஸ் படம் தானேன்னு நான் அன்னிக்கு பேண்ட் கூடத்தான் போடலை” அப்படீங்கிறது தான் நினைவுக்கு வருது :)
12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பக்கத்துல ஒரு பயபுள்ள என்னமா கடலை போடுறான். அப்படி என்னதான் பேசுவானுங்களோ? ;)
14.பிடித்த மணம்?
தன் வீட்டை மட்டும் சுத்தமாய் வைத்துக்கொண்டு தெருவில் குப்பையை கொட்டி வைப்பதனால் வரும் வாடையை சுத்தமா பிடிக்காதுன்னு மட்டும் சொல்ல முடியும். பிடித்ததுன்னு குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
கிட்டதட்ட பறவை காய்ச்சல் மாதிரி இந்த பதிவும் படுபயங்கரமா பரவியிருக்கு. யார் எழுதினாங்கன்னு, யாரு எழுதலைன்னு தெரியல
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ? ராமின் “நாங்க போலீஸ்காரங்க” பதிவுகள். தமிழில் பதிவெழுதும் (எனக்கு தெரிந்த) ஒரேயொரு காவல்துறை அதிகாரி
வானவில் வீதியில் ரொம்ப பிடித்தது அவன் கல்லூரி பதிவுகள். தற்சமயம் பிடித்தது ‘தனிமையின் விலை’ தொடர்கதை :)
17. பிடித்த விளையாட்டு?
வீடியோ கேம்ஸ்
18.கண்ணாடி அணிபவரா?
ஆம்! இதனால் நீங்க நாட்டுக்கு சொல்ல வருவது??? ;)
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டையும் ஆபாசமும் இல்லாத படங்கள்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன். அதொரு அற்புத அனுபவமாய் வாய்த்துவிட்டது
21.பிடித்த பருவ காலம் எது?
கோடை காலம்
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ஒன்றுமில்லை
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது சிரிப்பு சத்தம்.கூச்சலும் குழப்பமும் அமைதியற்ற சூழலும் மிகுந்த வேதனை தரும்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருந்திருக்கலாம். ஆனால் எதையும் உணர்ந்து முழுமூச்சாக ஈடுபட்டதில்லை
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வன்முறை
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
புதுவை கடற்கரை
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
சமூகத்துக்கு உதவியாக
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அவளை பற்றி நினைப்பது
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழுங்கள், வாழ விடுங்கள்
எதுக்குன்னே புரியாம இரண்டு கேள்விகள் இருந்துச்சு. அவற்றை சாய்ஸில் விட்டுட்டேன் :-) நட்சத்திர வாரத்திலா இந்த பதிவை எழுதுவது என்று கேட்டால், வழிவதை தவிர வேறு வழியில்லை எனக்கு!! தொடர்ந்து கேள்விகள் கேட்டல் என்னவோ எனக்கு பிடிப்பதில்லை. நீங்க எல்லாம் அப்படி தான் தேர்வுகள் எழுதி படிப்ப முடிச்சீங்களோன்னு கேள்வி வருவதுண்டு. அதனால் இந்த முப்பது கேள்விகள் கூட தாவு தீர்ப்பதாகவே இருந்தன. அதனால் தான் இப்படியொரு தலைப்பு :-))
பதித்தது : ச.பிரேம்குமார் 16 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
9 June 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : பனியில் கரைதல்
குளிர் அலுத்துவிட்ட
பனிப்பிரதேசத்தின் சன்னலொன்றை
பிடிவாதமாய் தட்டுகிறது சூரியன்.
கண்ணாடிகளை ஊடுருவி
அறையை நிரப்பப் பார்க்கிறது வெம்மை.
அதிகரித்துக் கொண்டிருக்கும் கதகதப்பு
பிடித்தமானதாய் இருக்க
இனி மொத்தமாய் பனியை வெறுத்துவிட
துணிகிறேன்
அடைக்க மறந்த ஏதோவொரு இடுக்கின்வழி
மெல்லக் கசியும் பனிக்காற்று
கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது
- ச.பிரேம்குமார்
இதை எழுதி வெகு காலமாயிற்று. சில நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கவிதையின் வரிகள் ஏற்கனவே பழக்கமாகியிருக்கலாம். சஞ்சிகைகளுக்கு அனுப்பி பலனில்லாது போக மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடந்தது. புதிதாக எழுத இயலாமல் போகவே இதையிங்கு இட்டு நிரப்பிவிட்டேன்
பதித்தது : ச.பிரேம்குமார் 25 கருத்துக்கள்
எழுத்து வகை: கவிதை, திரட்டி.காம் நட்சத்திரம்