10 June 2009

திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : திரையரங்குகளை தொலைத்த தெருக்கள்

நட்சத்திர வாரத்தில் புதுவையை பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் என்னவென்று எழுதுவது. எதை எழுதினாலும் அதோடு கலந்திருக்கும் என் பால்யமும் என் பதின்மங்களும் என்னை அதனோடு இழுத்துக்கொண்டு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும். நான் நினைவுகளில் தொலைந்து போகக்கூடும்.


புதுவை என்றாலே பலருக்கு பல விசயங்கள் நினைவுக்கு வரும். அதன் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பியர், அன்னை.. இன்னும் பல


அவற்றை தவிர இன்னொன்றும் மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்தது; திரையரங்குகள். புதுவையின் நகரப்பகுதி மிகவும் சிறியது. (இப்போதைய புதுவையின் எல்லை மிகவும் விரியவடைந்து விட்டது. முழுக்கவே நகரமயமாகிவிட்டது). நகர பகுதியை சுற்றியிருக்கும் நான்கு பிரதான சாலைகளையும் (Boulevard) நீங்கள் நடந்தே கூட சுற்றிவரலாம். ‘எல்லா சாலைகளும் ரோமில் தான் முடியும்’ என்று ஒரு ஆங்கில பழமொழியுண்டு. புதுவையின் நகரப்பகுதியின் எல்லா சாலைகளுமே கடற்கரையில் தான் முடியும்.


அந்த நான்கு பிரதான சாலைகளிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் ஏகப்பட்ட திரையரங்குகள் உண்டு (அப்போது!). அனேகமாய் அனைத்திலும் கூட்டம் இருக்கவே செய்யும். எப்படி புதுவையில் குடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் வேற்று நகரவாசிகளோ, அப்படியே திரையரங்களிலும் நிறைய வெளியூர்காரர்களை காணலாம். சொந்த பந்தம் எல்லாம் புதுவை வருகையில் கட்டாயம் ஒரு திரைப்படத்தையாவது பார்த்து விட்டுத்தான் செல்வர். ஒரு திரையரங்கில் நெரிசலெனில் நடந்தே அடுத்த திரையரங்கித்திற்கு சென்றுவிடலாம். ஆனால் காலம் தீட்டும் ஓவியத்தில் வண்ணங்களும் உருவங்களும் மாறிக்கொண்டே தானிருக்கும். இப்போது புதுவையில் உருப்படியான திரையரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் மாறிவிட்டன.


குறிப்பாக ’ஆனந்தா’ திரையரங்கு இடிக்கப்பட்ட போது என்னவோ போல் இருந்தது. இளநிலை படிக்கையில் அங்கு எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். திரைப்படங்கள் மேல் பெரிதாக மோகம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் உச்சக்கட்ட பொழுதுபோக்கே அது தான். அப்போதைக்கு எங்களுக்கு அவ்வளவு தான் Exposure இருந்தது :-)


சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது ஜப்பானில் இருக்கிறான். பொழுது போக என்னடா செய்யுறன்னு கேட்டதற்கு, “இணையத்தில் தான் தேடித்தேடி படமா பாத்துக்கிட்டு இருக்கேன்”ன்னு சொன்னான். ஏண்டா? அங்கயெல்லாம் திரையரங்கு இல்லையான்னு கேட்டதுக்கு “நீ வேற, பத்து ரூபாய்க்கு படம் காட்ட மாட்டாங்களாம்டா, நாமெல்லாம் பத்து ரூபாய்க்கு படமும் பாத்துட்டு பார்க்கார்னும் சாப்டவுங்களாச்சே! இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா” அப்படீங்கிறான். அடப்பாவீகளா, உங்க நக்கலு மாறவே மாறாதாடா?

7 க‌ருத்துக்க‌ள்:

Karthik said...

//ஆனால் என்னவென்று எழுதுவது. எதை எழுதினாலும் அதோடு கலந்திருக்கும் என் பால்யமும் என் பதின்மங்களும் என்னை அதனோடு இழுத்துக்கொண்டு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும். நான் நினைவுகளில் தொலைந்து போகக்கூடும்.

S.U.P.E.R.B. :)

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க இந்த கொசுவத்தி.
ரொம்ப சின்ன வயதில் பாண்டிச்சேரிக்கு பள்ளிச் சுற்றுலாவில் அழைத்துவந்தார்கள்.அதற்கு பிறகு பாண்டிச்சேரி செல்ல வேண்டுமென்பது இன்னும் நிறைவேறா கனவாகவே இருக்கிறது.

கோபிநாத் said...

அழகான கொசுவத்தி மாப்பி ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

பால்ய நினைவுகள் எப்போதுமே பசுமையானவை.. நல்லா இருக்கு பிரேம்..:-)

வினோத்கெளதம் said...

ஆனந்தா தான் உருப்படியான தியேட்டர் அதன் ஏன் இடிஞ்சக்கனு தெரியுல..
நானும் ரொம்ப பீல் பண்ணேன்..கடைசியா ஒரு மகா மட்டமான படம் ஓடுச்சு பரட்டை என்கிற அழகுசுந்தரம்..

அப்புறம் ராமன் அதையும் இடித்து விட்டார்கள்..

கலையரசன் said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp

ஆ.ஞானசேகரன் said...

//எங்கள் உச்சக்கட்ட பொழுதுபோக்கே அது தான். அப்போதைக்கு எங்களுக்கு அவ்வளவு தான் Exposure இருந்தது :-)//

ஆமங்க இப்பெல்லாம் பல திரையரங்குகள் மாற்றி கேளிக்கை தளமாக ஆக்கப்பட்டுள்ளது..