20 March 2008

பேருந்தில் பயணிக்கும் அஃறினைகள்


மாநகரப் பேருந்தில் பயணிக்கும் போது பல சுவாரசியமான சம்பங்கள் நடந்துள்ளன. இனிய பயணமாகவே அவை அமைந்து விடுவதுண்டு. ஆனால் இன்று நடந்தது போல இரண்டொருமுறை, பயணம் மிக கொடுமையானதாகவும் இருந்திருக்கிறது.

 

PEAK HOURSல் அமர இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. நடுவில் யாராவது எழுந்தாலும் அதைப் பிடிக்க சுற்றியிருப்பவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள். மறுமுனையில் இருப்பவர் அந்த இருக்கையை பிடிக்க ஓடோடி வருவார். இந்த காரணங்களாலும், பயண தூரம் அதிகம் இல்லையென்பதாலும் நான் உட்காருவது பற்றி யோசிப்பதேயில்லை. அதே சமயம், தொங்கிக்கொண்டு போவதும் பிடிக்காது.

 

ஆனால் இன்று வெகு நேரமாக பேருந்த வராததால், கூட்டமாக இருந்த பேருந்தில் ஏறி தொங்கிக்கொண்டே வர நேர்ந்தது. எல்லோரும் பாவம் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் போலும் என்று உள்ளே எட்டிப்பார்த்தால் உள்ளே நிறைய இடம் காலியாகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் உள்ளே நகராமல் பாதையிலேயே நின்றுக்கொள்(ல்)கிறார்கள்

 

சிலருக்கு இன்னும் சில நிறத்துங்களில் இறங்க வேண்டும், அதனால் உள்ளே போனால் வெளியே எளிதில் வர இயலாது என்ற எண்ணம், இடிமன்னர்கள் / திருடர்கள் / ஜொள்ளர்கள் இவர்களுக்கும் வாசல் அருகே நின்றுக்கொண்டு பயணம் செய்வதே பிடிக்கும் போல. உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும் வாசம் அருகே பயணம் செய்ய, ஆனால் கொஞ்சம் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டாமா?

 

முன்பெல்லாம் உள்ளே கூட்டமாக இருந்தால் புழுக்கமாக இருக்கும் என்று ஜன்னலருகேயும், வாசல் அருகேயும் மக்கள் பயணிப்பதுண்டு. ஆனால் இப்போது அந்த பிரச்சனையுமில்லை. பேருந்துகளில் மேலே ஒரு திறப்பு வைத்திருக்கிறார்கள். அதன் வழியாக பேருந்து போகும் வேகத்துக்கு சிலுசிலுவென காற்று உள்ளே வருகிறது.

 

ஆனாலும் மக்களுக்கு உள்ளே செல்ல மனமில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று பயணிக்கையில் கிட்டத்தட்ட நானும் சிலரும் ஒற்றைக் கைப்பிடிமானத்தில் தான் பயணித்துக்கொண்டிருந்தோம். 'உள்ளே போங்க, அவ்வளவு இடம் இருக்கே' என்றால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முன்னாடி இருப்பவரோ , 'நான் என்ன செய்வேன், எனக்கு முன்னாடி நிக்கிறவுங்க நகர மாட்டேங்குறாங்க' என்று சொல்கிறாரே தவிர, அவரை நகரச் சொல்லும்படி சொல்லவில்லை. அவரும் படிக்கட்டில் நிற்கிறார் எனினும், அவருக்கு அசெளகரியம் ஏதும் இல்லை. ஆக பின்னாலிருப்பவர்கள் என்னவானாலும் அவருக்கு கவலை இல்லை.

 

'அண்ணா, உள்ளே போகச் சொல்லுங்கண்ணா' என்று நடத்துனரிடம் சொல்லியும் பிரயோசனமில்லை. இதெல்லாம் அவர் வேலையில்லை என்று நினைக்கிறார். இரண்டு நிறுத்தங்களுக்கு அப்புறம் பேருந்தில் கூட்டம் குறைந்த பிறகு 'மேலே ஏறி வாங்க' என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். 'யாரும் இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க?'

 

பின்னால் நிற்கும் ஒருவரிடம் சொன்னால் அவர் கடலை போடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அங்கே நிற்கும் பெண்கள் எல்லாம் தோடு மாட்ட மட்டும் காதுகளை பயன்படுத்துவார்கள் போலும்.

 

'யாருக்கும் காது கேட்டுத் தொலையாதா? அவனவன் தொங்கிக்கிட்டு வரும்போது தான் தெரியும். உள்ளே போனா கவுரவம் கொறஞ்சுடுமா என்ன?' என்று கோபத்தில் கத்திவிட்டு வந்தேன். ஆனால் எருமை மாடு மேல் மழை பெய்த மாதிரியே இருந்தார்கள் என் சகபயணிகள். பதியமுடியா ஒரு கெட்ட வார்த்தை வாய் வரை வந்துவிட்டது. ஆனால் இந்த அஃறினைகளிடம் என்ன பேசி என்ன பயன்?

9 க‌ருத்துக்க‌ள்:

எழில்பாரதி said...

அண்ணா நல்ல கட்டுரை!!!

தினமும்.... எல்லோரும் அனுபவிக்கும் ஒரு நிகழ்ச்சியை அருமையா சொன்னதுக்கு

பாராட்டுக்கள்!!!

கோபிநாத் said...

கோவத்துல நீ பதிவு போடும் போது கூட ரொம்ப அழகாக இருக்கு மாப்பி :))

koothanalluran said...

தொங்குபவர், தள்ளுபவர், இடிப்பவர்,காலை மிதிப்பவர், வயோதிகர், பெண்களுக்கு இடம் தராமல் அமர்ந்திருப்பவர் எல்லோரையும் சகித்துக் கொள்ளலாம், ஆனால் காலையிலேயே உற்சாக பானம் அருந்தி விட்டு பேருந்தில் உந்துவோரை என்ன செய்யலாம் ?

ஸ்ரீ said...

நல்ல பதிவு தான் ஆனா இந்த பதிவோட நோக்கம் என்ன?

நீங்கோ நடத்துனரை அண்ணன் என்று கூப்பிட்டு "நான் சின்ன புள்ளங்கோன்னு" பிளாக் உலகுக்கு சொல்றா மாதிரி தெரியுதே :P.

Naresh Kumar said...

//நீங்கோ நடத்துனரை அண்ணன் என்று கூப்பிட்டு "நான் சின்ன புள்ளங்கோன்னு" பிளாக் உலகுக்கு சொல்றா மாதிரி தெரியுதே//

இந்த ரணகளத்திலும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது!:)))

இது மட்டுமில்ல பிரேம், சில சமயம் 12B, 25G இது மாதிரி ரொம்ப கூட்டமான பேருந்தில் பொண்ணுங்களுக்கு நடக்கிற அக்கிரமத்தை பார்த்தா அப்படியே கூசி போயிடும்.

என் நண்பன் தினமும் 12B ல தான் வருவான், அவன் சொல்ற விஷயத்தைல்லாம் கேட்டா யார் மேலன்னு சொல்ல முடியாத கோபம் வரும்! அவனே வாரத்துல ஒரு தடவையாவது யார்கிட்டியாவது சண்டைக்கு போயிடுவான். அந்தளவு கொடுமை பண்ணுவாங்க.

எழில்பாரதி said...

//இது மட்டுமில்ல பிரேம், சில சமயம் 12B, 25G இது மாதிரி ரொம்ப கூட்டமான பேருந்தில் பொண்ணுங்களுக்கு நடக்கிற அக்கிரமத்தை பார்த்தா அப்படியே கூசி போயிடும்.//


நான் தினமும் 25G or
17M- யில் தான் அலுவலகம் செல்கிறேன்!!!!!!
அய்யோ அந்த கொடுமை இருக்கே சொல்லமுடியாத கொடுமை

Unknown said...

அடுத்தவரையும், ஒரு பொருட்டாக மதித்து நடந்தால் இந்தத் தொல்லைகள் வராது. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அவர்களே தட்டிக் கேட்கும் வரை ஒண்ணும் பிரயோசனமில்லை :(

K.R.அதியமான் said...

பிரேம்,

சென்னை மாநாகருக்கு 5000 பேருந்துகளாவது குறைந்த பட்ச தேவை.
ஆனால் 3000 பேருந்தகளே இருக்கின்றன. (சொன்னது போக்குவரத்து அமைச்சர் நேரு). 1970இல் 'தேசியமயமாக்கல்' செய்யப்ட்டதிலிருந்தே
இந்த கடும் பற்றாக்குறை தொடர்கிறது. அதனால்தான் ஒவர்லோட் மற்றும் இதர கொடுமைகள். Demand and supply gap.

பார்க்க :
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html

கோபால் said...

ஆகா!!! பிரேம் உங்களுக்கு வயசு ஆயிடுச்சு போல??? :))))))

சென்னையில் நடத்துனர் தனது இருக்கைய விட்டு நகர மாட்டார். அதுனால அவர சுத்தியே கூட்டம் இருக்கும். இப்படி பல காரணங்கள் உண்டுங்கோவ்..!