14 October 2006

“காதல் மான்கள்”

திருமணங்களுக்கு செல்லும் போதெல்லாம் இந்த “மான்” கதையை சொல்லி மணமக்களை வாழ்த்துவார் என் தந்தை.. அந்த கதையை கவிதையாக்க ஒரு சிறு முயற்சி

“காதல் மான்கள்”
**********************

பூக்கள் மகிழ்ந்தாடி
கொண்டாடும் சோலை
பகலவன் உச்சியில்
தவமிருக்கும் வேளை

வேலெறியும் விழியோடு
பெண் மானொன்று;
இணையாக துணையாக
ஆண் மானொன்று.

கண்ணொடு ஊறும்
காதலை கண்டு
நெஞ்சொடு வழியும்
நேசங் கொண்டு

எரிக்கும் சூரியனின்
வெப்பம் மறந்து
அச்சம் மடம்
வெட்கம் துறந்து

அழகு சோலையை
சுற்றி திரிந்தன
மணித்துளிகள் கடப்பதை
முற்றிலும் மறந்தன

மோகத்தில் மூழ்கி
கிடந்த இருவரையும்
தாகமும் கொஞ்சம்
வாட்டி வதைத்தது

கோடை வெயிலின்
உக்கிரத்தால் ஆங்கே
ஓடைகள் பலவும்
ஒடுங்கியே கிடந்தன.

சோலையை சுற்றி
களைத்த மான்கள்
மூலையில் அமைந்தவோர்
ஓடையை கண்டன

கருத்த விழிகளில்
பெருத்த ஏமாற்றம்
சிறிதளவு நீரே
சிந்தி கிடந்தது

“இளையவள் நீ- மிக
களைத்தவள் நீ .
அலையாடும் நீரருந்து -உன்
சோர்வுக்கிதே அருமருந்து”

ஆருயிர் காதலிக்கு
ஆண் கட்டளையிட்டது
பொறுக்காத பெண்மானோ
பதிலுக்கு முறையிட்டது

“ஆசை அத்தான்,
இருவருமே களைத்தோம்
யோசனை எதற்கு ?
இருவருமே குடிப்போம் ”

எண்ணத்தில் ஒருமித்த
மான்கள் இரண்டும்
தண்ணீரில் இதழ் பதித்து
பருக துவங்கின

நேரம் கழிந்தது
தண்ணீர் குறையவில்லை;
விபரம் புரிந்தது
யாருமே பருகவில்லை.

காதல் கனவன்
அருந்தட்டும் என்று
பேதை பெண்மான்
நடித்து காட்டியது

துணைவன் செய்ததும்
அதென்றெ அறிந்து
தலைவனை நெருங்கி
இதயம் இணைத்தது.

1 க‌ருத்துக்க‌ள்:

cheena (சீனா) said...

பிரேம், நல்ல கற்பனை. எளிய அடிகள் - இரு மானின் எண்ணங்களூமே - என்ன சொல்வது ?

நல்வாழ்த்துகள்