சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, பின் பிரான்சின் பலகணி என்று சொல்லப்படும் புதுவையில் வளர்ந்தேன். கணினித்துறையில் பணி என்பதால் பெங்களூரில் சில காலம் கழித்துவிட்டு தற்போது சென்னையில் குடியேறியாகிவிட்டது.
கூட்டுப்புழுவாய் என் சிறு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். சமூக கோபங்களும், சமூகம் குறித்தான எண்ணங்களும் இருந்த போதிலும் பெரிதாக அதை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருந்ததில்லை. அல்லது பெரிதாக நான் முயன்றதில்லை. வலையுலக அறிமுகம் கிடைத்த பின் தான் என் உலகம் சற்று விரிய தொடங்கி இருக்கிறது. ஒத்த கருத்துடைய நண்பர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாள் தோறும் புதிதாக எதோ ஒன்றை கற்று கொண்டிருக்கிறேன். மனித மனங்களின் அழகையும், வக்கிரங்களையும் ஒரு சேர நாள் தோறும் எங்கேனும் காண கிடைத்து கொண்டே தான் இருக்கிறது.
இலக்கிய உலகம் கடலேனில் அதன் ஒரு கரைக்கு வெளியே நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசிக்க துடித்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசையில் அதில் கால் நனைக்க நினைப்பதுண்டு. ஆனாலும் இன்னும் இறங்கி குளிக்கவும், அதன் ஆழங்களை அலசவும் முயன்றதில்லை. இன்னும் நிறைய காலம் தேவைப்படலாம்.
இந்த நட்சத்திர வாரத்தில் என் வலைப்பக்கங்களில் எழுதிப்பகிர என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மொழியோடு பயணிக்கும் என் பாதையில் இதொரு வசந்த காலமாய் இருக்கவும் செய்யலாம்.
முதன் முதலாய் வெங்கடேஷ் அண்ணாவை புதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிக்கூடத்தில் வேலைகளுக்கு நடுவே நழுவி உணவகத்தில் அவசரமாய் உணவருந்தி வந்ததும், கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்களைப் போல் அரட்டை அடித்துக்கொண்டிருந்ததையும் மறக்க முடியாது தானே அண்ணா :-)
அப்போது தூரிகா வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்தார். திரட்டி.காம் வேலைகள் ஆரம்பித்திருந்தன. அப்போதே வாரம் ஒரு வலைப்பூ என்று ஒரு பகுதி வைக்கப் போகிறோம். உன் வலைப்பூ தான் முதலாவதாக இருக்கும் என்று சொன்னார். இடையில் சிறிது காலம் வேலைப்பளுவில் சிக்கி அவருடன் பேச இயலாது போனது. ஆனாலும் திரட்டி.காம் நட்சத்திரப்பதிவுகள் ஆரம்பிக்கும் போது முதல் மடலை எனக்கு அனுப்பி என் விவரங்கள் கேட்டார். அண்ணா, எத்தனை நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு. ஆனால் நீங்கள் கேட்ட விவரங்களை சரியான நேரத்திற்கு அனுப்ப இயலாது போனது. அதற்கான மன்னிப்பையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்(சொக்கா, திரட்டி.காம்’மின் முதல் நட்சத்திர பதிவர் அப்படீன்னு சொல்லிக்க முடியாதே :-)))
6 June 2009
திரட்டி.காம் நட்சத்திரப் பதிவு : அறிமுகம்
பதித்தது : ச.பிரேம்குமார் 21 கருத்துக்கள்
எழுத்து வகை: திரட்டி.காம் நட்சத்திரம்
2 June 2009
செல்வேந்திரனும் நானும் நண்பர்கள் இல்லை
அருகாமையில் இருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டாமல் அதென்ன ஆர்குட், வலைதளங்கள் என்று நட்பை தேடுவது என்று கேட்கிறார் செல்வேந்திரன். உண்மை தான். பல சமயங்களில் நமக்கென்று ஒரு உலகத்தை அமைத்துக்கொண்டு சுற்றியிருப்பவர்களை மறந்துவிடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு நம்மை தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அது எத்தனை கொடுமையானது என்று யோசித்து பார்க்கையில் விளங்கியது. சுற்றத்தை மறந்து, அதோடு ஒன்றி வாழாமல் இருக்கும் வாழ்க்கையில் என்ன இருந்துவிடப் போகிறது
ஆனால் இந்த இணைய நட்புகள் எல்லாமே அபத்தம், வெட்டி வேலை என்பது போன்ற ஒரு தோற்றம் செல்வாவின் கருத்துகளை மேலோட்டமாக பார்க்கையில் தோன்றலாம். இக்கருத்துக்கு எப்போதுமே எனக்கு முரண்படுவதுண்டு. உயிருக்குயிரான நண்பனாகவே இருந்தாலும் ரசனைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரசனைகளில் நீங்களும் உங்கள் நண்பரும் இரு வேறு துருவங்களாய் இருக்கலாம். இலக்கியத்தேடல் அதிகமாய் உங்களுக்கு தினத்தந்தியின் சிந்துபாத் தான் அதிகபட்ச இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருப்பவர் நண்பனாக அமைந்தால்?
உங்களுக்கு முடியலத்துவத்தை எழுத ஆனந்த விகடனில் இடம் ஒதுக்குகிறார்கள். கவிதை எழுதினால் படிக்க தான் மட்டுமே இருக்கும் சூழலுடையவர்கள் என்ன செய்வார்கள்? தமிழ் என்று ஒரு மொழி இருப்பது கூட அறியாவதர்கள் மத்தியில் உங்கள் மொழியை மறக்காமல் இருக்க என்ன வழியிருக்கிறது? ஒத்தக் கருத்துடைய நண்பர்களை இனங்காண, ரசனைகளை பகிர்ந்துக்கொள்ள இணையம் ஒரு நல்ல இணைப்பாக இருந்தே வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை
செல்வேந்திரன் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியின் காணொளி
இந்த இணையமும் வலைப்பூக்களும் அதில் வரும் நட்புகளும் இல்லாமல் போயிருந்தால் பதிவின் தலைப்பை தான் நான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் இப்போது என் நண்பர் தொலைகாட்சியில் தோன்றுகிறார் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிகிறது
குட்டிச்சாத்தான்(குளத்தான்)க்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
பதித்தது : ச.பிரேம்குமார் 21 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
15 May 2009
நேசம் முடிவுற்ற ஓரிரவில்
நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்
17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது
வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்
எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!
- ச.பிரேம்குமார்
என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)
பதித்தது : ச.பிரேம்குமார் 43 கருத்துக்கள்
எழுத்து வகை: காண்டு, பதிவர் வட்டம், மொக்கை
13 May 2009
நான் வாக்களிக்க மாட்டேன்
இந்நேரம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும். வாக்குப் பதிய தகுதியுடைய அனைவரும் கட்டாயம் உங்கள் வாக்கினை பதிந்துவிடுங்கள். கொஞ்சம் யோசித்து வாக்கியளியுங்கள். பேய்க்கு வாக்கப்படுறதா இல்லை பிசாசுக்கு வாக்கப்படுறதாங்குற நிலைமையில் தான் நாம் இருக்கோம். ஆனாலும் இரண்டுல எது பரவாயில்லைங்குறத பொறுத்து தான் முடிவுகள் இருக்கும் என்று நம்புறேன். நான் அதிகம் எதிர்பார்ப்பது தென்சென்னையில் போட்டியிடும் சரத்பாபுவை தான். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்
***
இத பத்தி ரொம்ப காலமா எழுதனும்னு நினைச்சேன். ஆனா அப்படியே விட்டு போயிடுச்சு. இந்த பதிவு அதுக்கு சரியான இடம்தான். எல்லா தொலைகாட்சிகளிலும் ஏதாவது ஒரு போட்டி. சரி வச்சு தொலையட்டும்னா கடைசியில மக்கள குறுஞ்செய்திகள் மூலமா வாக்களிக்க சொல்லி ஒரே புலம்பல்கள். சரி சாதாரண மக்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. பிரபலங்கள் ஆடும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் விழுந்து புரண்டு வாக்கு கேக்குறாய்ங்க. நீங்க காசு வாங்கி ஆடுவீங்க, ஜெயிச்சாலும் சுளையா பணத்த அள்ளிக்கிட்டு போயிடுவீங்க. இதுக்கு மக்கள் வாக்களிக்கனுமா? அதெப்படிய்யா வாக்கு என்று வந்துவிட்டாலே மக்கள் ஏமாளிங்க தான்னு முடிவெடுத்துடுறீங்க?
****
இப்போது நம்ம பதிவுலகத்திலயும் இந்த வாக்கு ஜீரம் தீவிரமா பரவியிருக்கு. தமிழ்மணத்துலயும் தமிழிஷ்லயும் வாக்களியுங்கன்னு மக்கள் எல்லா வகையிலயும் கேக்குறாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க. நம் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் வலைப்பதிவெழுதும் எல்லோருடைய எண்ணமும். ஆனால் வாக்களியுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது சில சமயம் சிரிப்பை வரவழைக்கிறது. அதிலும் நிறைய குளறுபடிகள் இருப்பதாக படிக்கிறேன். அந்த வாக்களிப்பில் எனக்கு ஏனோ நம்பிக்கையும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வரும் அத்தனை நண்பர்களின் பதிவுகளையும் அவர்களின் எழுத்துக்களுக்காகவே படிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)
பதித்தது : ச.பிரேம்குமார் 18 கருத்துக்கள்
எழுத்து வகை: எண்ணங்கள், பதிவர் வட்டம்
6 May 2009
திறமை, ஜொள்ளு, காதல் மற்றும் இன்னபிற
சமீபத்தில் நண்பன் ஒருவன் மூலம் இந்த காணொளியை காண நேர்ந்தது. இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன். அத்தனை சிறப்பாக இருக்கிறது
* சில இடங்களில் திரைப்படத்தில் இடம் பெற்றதை விட சிறப்பாக செய்திருக்கிறார்கள்
* காதல் சொட்ட சொட்ட ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கலாம். எந்த வித அலங்காரங்களுமில்லாமல் ஒரு அழகான காதல் பாடலை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்
* இப்போதெல்லாம் தொலைக்காட்சியில், மேடைகளில் கூட காதல் பாடலுக்கான நடனம் ஆபாசத்துடன் தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இது எவ்வளவோ மேல்
* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்
* இதில் வரும் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். ஆக, அந்த பொறுப்பை தோழிகளிடம் விட்டுவிடலாம். ஆனால் முதலில் ஆடும் ஆணின் Grace மிகவும் அற்புதமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது
* பதிவு போட சிறப்பாக எதுவும் கிடைக்கவில்லையென்பதால் இப்படி ஒரு மொக்கைப் பதிவு. வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)
பதித்தது : ச.பிரேம்குமார் 43 கருத்துக்கள்
எழுத்து வகை: காதல்