பதிவர் பட்டறை முடிந்து கிட்ட தட்ட மூன்று வாரங்கள் ஆகிப்போச்சு. நடுவில கேமாராவின் டேட்டா கேபிளை காணவில்லை. அப்புறம் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை..... அப்படி இப்படின்னு ஒருவழியா நேத்து தான் புகைப்படங்கள பதிவில் சேர்க்க முடிந்தது.
சொல்லப்போனால், ஒழுங்காய் வந்த படங்கள் மொத்தமாய் ஐந்து தான். சிறப்பான படம் ஒன்றே ஒன்று தான். அத நீங்களே பாத்து தெரிஞ்சுகுங்க......
1. வாசலிலேயே வரவேற்கும் பேனர்
என்ன வரவேற்பு? என்ன வரவேற்பு? :)
2. அலைமோதும் ஆர்வலர்களின் கூட்டம்
3. வலைப்பதிவர்களின் சமூக அக்கறை
4. HTML பற்றி செந்தழல் ரவி (புள்ளைக்கு தான் எவ்வளவு பொறுப்பு ;) )
5. பட்டறை முடிந்து பிரியும் தருணம்
20 August 2007
பதிவர் பட்டறை : பதிக்காது போன சில புகைப்படங்கள்
பதித்தது : ச.பிரேம்குமார் 2 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
13 August 2007
நட்பின் நட்பு - 2
ஆரம்பத்திலிருந்து கடைசிவரை
எல்லாம் ஒழுங்காயிருக்கிறதா?
வழக்கம்போல குசலம்விசாரிப்பு
குறையில்லாமல் உள்ளதா?
அங்கங்கே கவனிக்கப்படாமல்
உள்ளனவா சில சந்திப்பிழை,
எழுத்துப்பிழை, பொருட்பிழைகள்?
மரியாதை குறையாமல்
வழங்கப்பட்டிருக்கிறதா?
எழுத்துக்களின் நேர்த்தி எவ்விதம்?
சுருங்கச் சொல்லி விளக்கும்
விதம் கையாளப்பட்டுள்ளதா?
உடனடியாகப் பதில்வரும்
யுத்தி உள்ளிருக்கின்றதா?
பயனில்லாத விஷயங்கள்
அலசப்பட்டிருக்கின்றவா?
இப்படி எவ்விதக் கவலையும்
ஒருபோதும் இல்லாது
எப்போதும் களிப்புடன் செல்கிறது
இரு நட்புள்ளங்களுக்கிடையேயான
உள்ளார்ந்த அன்புடன் கூடிய
உணர்வுப்பகிர்தலுக்கான மடல்!!
-
நட்பு மடல்
ராகவன் (அ) சரவணன்
கவிதை கேளுங்கள்
பதித்தது : ச.பிரேம்குமார் 5 கருத்துக்கள்
எழுத்து வகை: நட்பின் நட்பு, நட்பு
10 August 2007
நட்புக்காலம் - 2
எனக்குப் பிடித்த, என்னைப் பாதித்த நட்பு கவிதைகள் சில...
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்
-
கவிஞர் அறிவுமதி
நீ வயசுக்கு வந்துபோது
கவிஞர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலம்)
- எழில்
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: நட்பின் நட்பு, நட்பு
9 August 2007
இப்படிக்கு நட்பு - 4

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது...

உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: இப்படிக்கு நட்பு, நட்பு
8 August 2007
இப்படிக்கு நட்பு - 3
முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,
பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,
அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,
உன் அருகாமை இல்லாத
பொழுதுகளில் தவித்துப்போனது,
இவையெல்லாம் நடந்தேறிய
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!
இப்படிக்கு,
நட்பு
பதித்தது : ச.பிரேம்குமார் 10 கருத்துக்கள்
எழுத்து வகை: இப்படிக்கு நட்பு, நட்பு
7 August 2007
நட்புக்காலம் - 1
பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்
***
நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
அய்யங்களுக்குத்
துணையாய்
நூல்களை
படபடக்கச் சொல்லிவிட்டு
இயல்பாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்
***
அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற இரண்டு
மிகச்சிறிய இதயங்களின்
நட்பில் இருக்கிறது
-
பாவலர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலங்கள்)
பதித்தது : ச.பிரேம்குமார் 5 கருத்துக்கள்
எழுத்து வகை: நட்பு
பதிவர் பட்டறை : ஒரு ஆறிப்போன பார்வை
சென்னை பதிவர் பட்டறை ஆகஸ்ட் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று இனிதே நடந்து முடிந்தது. உடனுக்குடன் பட்டறை பற்றிய செய்திகளை ஏற்கனவே மக்கள் தந்துவிட்டதால் இது ஒரு 'ஆறிய' ப்போன பார்வை.
மாலன், 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, ஆசிப் மீரான், 'எ-கலப்பை' முகுந்த், பொன்ஸ், வினையூக்கி, பினாத்தல் சுரேஷ், ஜே.கே., வ.வா.சங்கத்தின் சிங்கங்கள் என்று ஏகப்பட்ட பரிச்சயமான பெயர்களின் முகங்கள் எனக்கு அப்போது தான் பரிச்சயமாயின.
தகடூர் கோபி, 'முத்த'தமிழ் வித்தகர் நந்தா, நவீன் பிரகாஷ் எல்லாம் ஏற்கனவே அறிமுமாயிருந்த பதிவர்கள். அவ்வப்போது அவர்களுடன் மொக்கை போடவும் நேர்ந்தது.
பட்டறை ஆரம்பித்ததிலிருந்து நிகழ்வுகளை ஒருவர் வளச்சு வளச்சு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்... அட, அது நம்ம அருள்குமார் ;)
கணித்தமிழ் வந்தபின் உருவான எழுத்துருக்கள் பற்றியெல்லாம் ஒரு சின்ன அறிமுகத்தோடு, எ~கலப்பை பற்றி விளக்கினார் முகுந்த்
TAB, TAM போன்ற பல்வேறு எழுத்து வடிவங்களில் உள்ள வலைத்தளங்களை பிரச்சனையின்றி தன் நீட்சி மூலம் யூனிக்கோடில் படிப்பது எப்படி என்று விளக்கினார் கோபி
(சந்தடி சாக்கில், தன் கணிணியில் சானியா மிர்ஸா படத்தை சரியாக தரவிறக்கம் செய்ய முடியாததற்கு ஏதாவது செய்ய முடியுமா என்ற பெரிய சந்தேகத்தை கேட்டார் செந்தழலார்
சமீபகாலமாக தன் இம்சை வலைப்பூவின் மூலம் மொக்கை மட்டுமே போட்டுக்கொண்டிருந்த செந்தழல் ரவி பட்டறையில் நல்லபிள்ளையாக வந்திருந்த புதியவர்களுக்கு HTML பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக பதிவுகளில் மொக்கை போடுவது எப்படி என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வில்லை. தப்பிச்சோம்டா சாமி !
வலைப்பதிவர்களின் சமூக அக்கறை பற்றி விவரித்தார் ரஜினி ராம்கி
வலைப்பதிவில் வித்தியாசமான முயற்சிகள் என்ற தலைப்பில் 'சற்றுமுன்','தமிழூற்று' மற்றும் பல கூட்டுப்பதிவுகள் பற்றி விளக்கினார் பொன்ஸ்
வ.வா.சங்கத்தின் சிங்கங்கள் எல்லாம் 'சங்கத்தின்' சின்னம் பொறித்த டி.சட்டைகள் அணிந்து அரங்கம் முழுவதும் சுற்றித்திரிந்து கர்ஜித்துக் கொண்டிருந்தனர்
புதிதாய் 100 பேரையாவது வலைப்பதிய வைத்துவிட்டால் அது இந்த பட்டறையின் வெற்றியாக இருக்கும் என்று தன் முடிவுரையில் குறிப்பிட்டார் பாலபாரதி. மதியத்திற்கு முன்பாகவே சுமார் 115 வலைப்பதிவகளை புதிதாய் வந்திருந்த நபர்களுக்காக பதிவு செய்ததாய் ஒரு பட்சி சொல்லிற்று.
எல்லாரையும் வளச்சு வளச்சு போட்டா எடுத்தேன். ஹீம்... கேமராக்கு எட்டுனது கணிணிக்கு எட்டலை. (டேட்டா கேபிள காணோம்பா) :(
வந்திருந்த ஆர்வமான கூட்டத்தை பார்க்கும் போது கண்டிப்பாக பட்டறையின் நோக்கம் பெரிதளவுக்கு நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும்.
பட்டறையை நடத்திய அத்தனை பேருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
வாழ்க தமிழ் ! வளர்க நல்ல தமிழ் வலைப்பதிவுகள் !
பதித்தது : ச.பிரேம்குமார் 8 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
பதிவர் பட்டறை : இந்தியன் எக்ஸ்பிரஸீம் என் புகைப்படமும்
மேல் தளத்தில் நடந்துக்கொண்டிருந்த செயல்முறை விளக்கக்கூடத்தில் வினையூக்கி புதியவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ளது
ஹி ஹி ஹி... நானும் அந்த படத்தில் இருக்கேன் :)
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
http://epaper.newindpress.com
பதித்தது : ச.பிரேம்குமார் 7 கருத்துக்கள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
6 August 2007
நட்பின் நட்பு - 1
எங்கோ ஒரு
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?
***
செல்பேசியில்
சேர்ந்திருக்கும் எண்களை
கடக்கையில் தோன்றும்
பழைய நண்பர்களின்
முகம்.
அழைக்கலாமா என
எத்தனிக்கையில் தடுக்கும்
பால்ய குற்றங்களின்
உணர்வு.
-
அ.பிரபாகரன்
சொல்லிய வண்ணம் செயல்
பதித்தது : ச.பிரேம்குமார் 0 கருத்துக்கள்
எழுத்து வகை: நட்பின் நட்பு, நட்பு
3 August 2007
இப்படிக்கு நட்பு - 2
பள்ளியில் தான் தொடங்குகின்றன அனேகம் நட்புகள். அந்த நட்புக்கு என்றுமே நீங்காத இடம் உண்டு நெஞ்சில். முதன் முதலில் பிரிவு என்ற சொல்லை சந்திப்பதும் அந்த நட்பு தான். பள்ளி தான் உலகமே என்று நம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களை பிரித்து உலகின் வெவ்வேறு மூலைகளில் வீசிவிடுகிறது காலம். ஆசைக்கு தக்கபடி, ஆஸ்திக்கு தக்கபடி ஆளுக்கு ஒரு திசை நோக்கி பயணப்படுகிறோம்........ சுழன்று கொண்டே இருக்கும் உலகத்தில் என்றேனும் ஒரு நாள் மீண்டும் சேருவோம் என்ற நம்பிக்கையோடு. பதினான்கு ஆண்டுகள் 'பெத்தி செமினேர் மேனிலைப்பள்ளி, புதுச்சேரி'யில் படித்த காலங்களையும் நண்பர்களையும் நினைத்து.....
இப்படிக்கு நட்பு - 2

ஒளிப்புகா அடர்க்கானில்
ஒளிந்திருந்தோம் சில காலம்
களித்திருந்தோம் நன்றாய்
அக்கானிடையே ஒன்றாய்
ஆலென்றாலும் பனையென்றாலும்
ஆரும் பிரித்துப்பார்த்தில்லை - கொடுங்
காலம் வரும்வரை நம்காட்டில்
அறுவடையும் நடந்ததில்லை
வசந்தம் மட்டுமே வந்த பாதையில்
புயலும் ஒரு முறை வீசிற்று
கசக்கும் நினைவுகளை
இதயத்தில் பதித்துப் போனது
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.
திசைக்கு ஒருவரென
யாவரும் பிரிந்தோம்;
ஆசைக்கு தக்கபடி
என்னவோ ஆனோம்!
இனி எக்கணம் சந்திப்போமோ?
எவ்வண்ணம் சந்திப்போமோ?
எப்படியும்,
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
படபடத்துக்கொண்டு தான் இருப்போம்
பழையக் காட்டை நினைத்து...
பதித்தது : ச.பிரேம்குமார் 3 கருத்துக்கள்
எழுத்து வகை: இப்படிக்கு நட்பு, நட்பு
2 August 2007
தோழிமார் கதை
என்னைக் கவர்ந்த, கவிஞர் வைரமுத்துவின் அழகான நட்புக் கவிதை ஒன்று.
ஆத்தோரம் பூத்தமரம் ஆனை அடங்கும்மரம் கெளையெல்லாம் கூடுகட்டிக் கிளியடையும் புங்கமரம் புங்க மரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில் பேன் பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா? சிறுக்கிமக பாவாட சீக்கிரமா அவுருதுன்னு இறுக்கி முடிபோட்டு எங்காத்தா கட்டிவிட பட்டுச் சிறுகயிறு பட்ட எடம் புண்ணாக இடுப்புத் தடத்தில்நீ எண்ணெய்வச்ச நெனவிருக்கா? மருதாணி வச்சவெரல் மடங்காம நானிருக்க நாசமாப் போன நடுமுதுகு தானரிக்க சுருக்காநீ ஓடிவந்து சொறிஞ்சகதை நெனவிருக்கா? கருவாட்டுப் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து கோனார் கடை தேடிக் குச்சிஐசு ஒண்ணுவாங்கி நான்திங்க நீகுடுக்க நீதிங்க நான்குடுக்க கலங்கிய ஐஸ்குச்சி கலர்க்கலராக் கண்ணீர்விட பல்லால் கடிச்சுப் பங்குபோட்ட வேளையில வீதி மண்ணில் ரெண்டுதுண்டா விழுந்திருச்சே நெனவிருக்கா? வெள்ளாறு சலசலக்க வெயில்போல நெலவடிக்க வெள்ளித் துருவல் போல் வெள்ளைமணல் பளபளக்க கண்ணாமூச்சி ஆடையிலே கால்கொலுசு நீ தொலைக்க சூடுவப்பா கெழவின்னு சொல்லிச்சொல்லி நீ அழுக எங்காலுக் கொலுசு எடுத்துனக்கு மாட்டிவிட்டு என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனவிருக்கா? . . . |
போன வெருசத்துப் |
பதித்தது : ச.பிரேம்குமார் 5 கருத்துக்கள்
எழுத்து வகை: நட்பு
1 August 2007
இப்படிக்கு நட்பு - 1
உலகெங்கும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் வாரமும் நட்பு வாரமாய் கொண்டாட படுகிறது.
அவ்வழியே இந்த பயணத்திலும், இந்த ஆகஸ்ட் மாதம் நட்புத் திருவிழா.
வாருங்கள், நட்பைக் கொண்டாடுவோம்; வழக்கம்போல்!
இப்படிக்கு நட்பு - 1
கவர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காதலித்துவிட முடிவதில்லை;
அவ்வகையில்
ஆசீர்வதிக்கப்பட்டது நட்பு!
பதித்தது : ச.பிரேம்குமார் 10 கருத்துக்கள்
எழுத்து வகை: இப்படிக்கு நட்பு, நட்பு