2 August 2007

தோழிமார் க‌தை

என்னைக் க‌வ‌ர்ந்த, க‌விஞ‌ர் வைர‌முத்துவின் அழகான‌ ந‌ட்புக் க‌விதை ஒன்று.

தோழிமார் கதை

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையிலே
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசு
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
. . .பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான் கத்த,
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடு சேர்த்த நெனவிருக்கா

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதித்தோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஒடானோம்
இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலி கட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்


போன வெருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு...


-வைரமுத்து

5 க‌ருத்துக்க‌ள்:

நந்தா said...

பிரிவின் வலியை அழ்காய் சொன்ன வரிகள் அது. மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் பிரேம். நட்பு வாரத்தை அழகாய் கொண்டாடறீங்க போலிருக்கே....

Anonymous said...

kuzhandhai paruvam muthal, muthumai varai -
siruvarkalin vazhkai soolalil nadanthu mudiverum oru nigalvai azhagaga sollukirar
good presentation
vij

Anonymous said...

அற்புதமான கவிதை. இப்ப தான் முதல் தடவை படிக்கிறேன். நெஞ்சை அழுத்துது பாரம். வைரமுத்து சாரை நான் எப்பவுமே கிண்டலடிக்கறதுண்டு. ஆன இந்த மாதிரி கவிதைய படிச்சும் நான் மாறலன்னு வெச்சுக்கங்க.. அப்புறம் எதுக்கு இந்த பிழைப்பு?

கலக்கல்.. கலக்கல்.

PRINCENRSAMA said...

உமக்கும் பிடிக்குமா? எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப பிடித்த கவிதை... 'பெய்யெனப் பெய்யும் மழை'த்தொகுப்பில் வெளியானது.

இடையில் ஒரு பாராவை விட்டு விட்டீரே!

"பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான்
கத்த,
விறுவிறுன்னு
கொண்டாந்து
வீடு சேர்த்த
நெனவிருக்கா?"

கவிதை எழுதியது வைரமுத்து தானா இல்லை வேறொரு பெண்ணா? என்று சந்தேகம் கொள்ளச் செய்யும் விவரிப்பு...

[இந்த வரிகளை இட்டதில் தவறில்லை என நினைக்கிறேன்.:)]

பிரேம்குமார் said...

வாங்க ப்ரின்ஸ்,

உங்களுக்கும் இந்தக் கவிதை ரொம்ப பிடிக்கும் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. எப்படியோ அந்த பத்தி விட்டுப்போச்சு :(

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இப்போ சேத்தாச்சு :)